9

அவர் ஒரு திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் பதவியில் இருப்பவர். தொழிலுக்கு அப்பாற்பட்டு எங்கள் இருவருக்குமே நல்ல புரிந்துணர்வு உண்டு.. நான் திருப்பூரில் இதுவரைக்கும் சந்திக்காத அபூர்வ நபர். தனிமனித ஒழுக்கம் அதற்கு மேல் வெளிநாட்டில் இருப்பவருக்குச் சொந்தமான நூறு கோடி சொத்தை தனது நம்பிக்கை ஒன்றின் மூலம் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பவர். பல ஆச்சரியங்களை எனக்குள் அன்றாடம் தந்து கொண்டிருப்பவர்.

குறுகிய காலத்தில் அவரின் உள் வட்டத்தில் என்னைச் சேர்த்து இருந்தார். என்னுடைய தனிப்பட்ட திறமைகளை விட அவருக்குக் காரைக்குடி என்ற ஊரும் அதன் கலாச்சாரமும் ரொம்பவே பிடித்தமானதாக இருந்தது. வேறொரு காரணமும் உண்டு., அவர் விரும்பும் செட்டிநாட்டு சமையல். அவர் கோபியில் பிறந்து கோவையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தொழிலுக்கு அப்பாற்பட்டு பேசும் பேச்சில் கடைசியாக வந்து நிற்பது இந்த அசைவ உணவு சமாச்சாரமே.

நான் தொடக்கத்தில் இயல்பாக எடுத்துக் கொண்டாலும் அவரின் தீராத சாப்பாடு வெறியை தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இத்தனைக்கும் அவர் மனைவியும் நன்றாக அசைவ உணவு சமைப்பவர். அதனையும் மீறி அவருக்குள் இருந்த ஆர்வத்தைப் போக்கும் பொருட்டு அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் பிரியும் சந்திப்பில் உள்ள பாலத்துக்கு அருகே உள்ள அந்தச் சிறிய கடைக்கு அழைத்துச் சென்றேன்.

சிறிய ஓட்டு வீடு. உள்ளே பத்துப் பேர்கள் தான் அமர முடியும். அடுத்த வரிசை வருவதற்குள் காத்து இருப்பவர்கள் ஓடிப் போய்த் தான் இடம் பிடிக்க வேண்டும். நாக்குச் சொட்டச் சொட்ட அவர்கள் கொடுக்கும் பக்குவமான அசைவ சமாச்சாரங்கள் விபரம் தெரிந்தவர்களைப் பல மைல்கள் கடந்து வந்து சாப்பிட வைத்துக் கொண்டிருக்கிறது. அங்கு நண்பர் அமர்ந்து சாப்பிட்ட வேகத்தைப் பார்த்த போது எனக்கு என் அப்பா ஞாபகம் தான் வந்தது. ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை கூட்டுக்குடித்தனம் என்பதால் பந்தி போலத்தான் வரிசையாக அமர்ந்து பரிமாறிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் திருவிழா போலவே இருக்கும்.

நான் பார்த்தவரைக்கும் அம்மா சமைத்தே இடுப்பு ஒடிந்து போயிருப்பார். வீட்டில் உள்ள மற்ற அத்தனை பேர்களும் எடுபுடி வேலைக்கு உதவி கொண்டிருப்பார்கள். அடுப்பு என்பது அணையா விளக்கு போல் எரிந்துகொண்டிருக்கும்.

நான் அழைத்துச் சென்ற கடையில் வெற்றிகரமாக இடம் பிடித்துப் புன்னகையுடன் உட்கார்ந்த நண்பர் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்தது திகைத்துப் போய் விட்டேன். அப்படியொரு சந்தோஷத்தை அதற்கு முன் அவரிடம் நான் பார்த்தது இல்லை. “மற்றதெல்லாம் அப்புறம் நாம் பேசிக் கொள்வோம்” என்று விளாச ஆரம்பித்து விட்டார்.

அந்தக் குறுகிய அறையில் இருந்த மின் விசிறி பெயருக்கென்று ஓடிக்கொண்டு இருந்தது. முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைக்க மனமில்லாமல் துண்டுகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

ஊர் வட்டார வழக்கில் சொல்லப்படும் “கொளம்பு” என்பதைக் கையில் ஊற்றிக் கொண்டு தன்னை மறந்து சுவைத்துக் கொண்டிருந்தார். காரணம் சேர்க்க வேண்டிய மசாலா சமாச்சாரத்தைச் சரியான முறையில் அளவில் சேர்த்தால் இந்த அசைவ சமாச்சாரங்கள் என்பது உங்கள் சொத்துக்களை எழுதிக் கேட்டால் கூடக் கொடுக்க வைத்து விடும்.

அசைவ உணவு சமாச்சரத்தில் முக்கிய இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று சுத்தம் செய்தல். மற்றொன்று மசாலா சேர்மான அளவு. மீனோ ஆட்டுக்கறியோ தண்ணீர் விட்டு அலசுவதைப் போலவே அதனைச் சுத்தம் செய்தல் அதிமுக்கியமானது. தேவையில்லாத கழிவுகளைக் கழித்து விட வேண்டும். வாங்கும் மீன்களின் வாயைத் திறந்து பார்த்தாலே உள்ளே தெரியும் நிறம் வைத்து நல்லதா இல்லை நாறிப் போனதா என்று. விபரம் தெரிந்தவர்களால் கண்டு கொள்ள முடியும்.

நீங்கள் சாப்பிடும் எந்த உணவகத்திலும் வீடு போல சுத்தம் செய்யவே மாட்டார்கள். மேலும் உணவகத்திற்கென்றே ஒவ்வொரு இடத்திலும் தனியாக வைத்து இருப்பார்கள். கெட்டது, நொந்து போனது, கழிவு போன்ற சமாச்சரங்கள் தான் கடைசியில் பொன் நிற வறுவலாக உங்கள் காசை பறித்துக் கொண்டிருக்கும். அலசி, கழுவி முடித்து மஞ்சள் பொடியை அளவாகச் சேர்க்கும் போது மீதியுள்ள கெட்ட வாடை அகன்று விடும்.

எஞ்சியுள்ள மஞ்சள் தண்ணீர் கரைசலை வெளியேற்றி தனியாக வைத்து விட்டாலே பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.

மற்றொன்று சமைத்துக் கொண்டு இருக்கும் போது கொதி நிலையில் கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். மண்பாத்திரங்கள் என்றால் அதற்குண்டான மரியாதையும் தனியாக இருக்கும். கொதிக்கத் தொடங்கும் போதே சேர்த்த தண்ணீரின் அளவு பாத்திரத்தில் இறங்கத் தொடங்கும். கரண்டியில் எடுத்து மேலிருந்து கீழாக ஊற்றிப் பார்க்கும் போது அதன் கெட்டித்தன்மையும் உள்ளே வெந்து கொண்டுருக்கும் சமாச்சாரத்தின் சுவையும் புரிய ஆரம்பிக்கும்.

நாக்கில் ஒரு சொட்டு விட்டு பார்க்கும் போது அதன் திரைக்கதை முழுமையும் தெரிந்து விடும். சுவை கூடி வரும் போது முடிவுக்குக் கொண்டு வந்தால் பந்தி சாப்பாட்டுச் சடுதியாக முடியும். இல்லாவிட்டால் சமைத்தவர் அடிவாங்கிய பந்தியாக மாறி விடும். .

வெந்து கொண்டுருக்கும் போது நேரம் கடத்துவதோ, அளவு தெரியாமல் மஞ்சள் பொடியை அள்ளிக் கொட்டுவதோ கடைசியில் சாப்பிடுபவர்கள் அட அக்கிரமமே? என்று திட்ட வைத்து விடும். திருப்பூருக்குள் எந்தப் பக்கம் திரும்பினாலும் செட்டிநாட்டு உணவகம் என்று பெயர்ப்பலகை தொங்கிக் கொண்டுருக்கும்.

செட்டிநாட்டு உணவகம் என்று பெயர்பலகையில் தான் இருக்கும். ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் இருக்காது.

பணத்தாசை அந்த அளவிற்குக் கேவலமாக மாற்றி வைத்து இருக்கும். திருப்பூர் மக்களின் அசைவ வெறி கலாச்சாரத்தைப் புரிந்து கொண்ட எங்கள் ஊரைச் சேர்ந்தவர் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். பத்து வருடங்களில் அவரின் சொத்து 60 கோடியாக மாற்றியுள்ளது. அத்தனையும் ஊரில் இடமாக அரிசி ஆலையாக மாறியுள்ளது.

அப்பாவோ சித்தப்பாக்களோ தொடக்கத்திலேயே சொல்லி விடுவார்கள். “கவுச்சி வாடை வந்து விடக்கூடாது” என்று கட்டளை போலத்தான் சொல்வார்கள். அதிலும் அண்ணாமலை சித்தப்பா பொண்டுகசெட்டி போலவே சமைத்து முடிக்கும் வரையிலும் காத்துக் கொண்டிருப்பார். ரெண்டு துண்டு உள்ளே போனால் தான் அடுத்த வேலைக்கு நகர்வார்.

ஒவ்வொருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அம்மா முதல் சின்னம்மாக்கள் வரைக்கும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.. கறிக்கொளம்பு, எலும்புக்கொளம்பு, இரத்தப் பொறியல், இது போகத் தெரக்கி எடுத்த கறிக்கூட்டு. வெங்காயப் பச்சடி தனியாக அனாதையாக இலையின் ஓரத்தில் கிடக்கும்.

மொத்த நபர்களும் சாப்பிட்டு எந்திரிக்கும் போது கூட்டி முடித்து விட்டுத் தண்ணீர் போட்டு துடைத்து விட்டுக் காத்திருக்கும் பெண்கள் பந்தியில் அமர்வார்கள். நான் பார்த்தவரைக்கும் அக்கா அம்மாக்கள் வெறும் எலும்புகளை கடித்துக் கொண்டுருப்பார்கள்.

இதற்கிடையே வேலையாட்கள் வேறு தனியாக வந்து போய்க் கொண்டுருப்பார்கள்.

வருமானமும் வசதிகளும் பிரச்சனையில்லாத வரைக்கும் அசைவம் என்பது ஊரில் அத்தனை வீடுகளிலும் சைவ சாப்பாடு போலவே இயல்பாக இருந்து கொண்டிருக்கும். நான் அசைவத்தை விட்டொழித்துப் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. வீட்டில் இயல்பாகவே அந்தப் பழக்கம் இல்லை. குழந்தைகள் கூட உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் போது தான் ஒரு கட்டுக் கட்டுவார்கள்.

தாத்தா முதல் அப்பா சித்தப்பாக்கள் மற்றும் தொடர் வாரிகள் அத்தனை பேர்களுமே இந்த அசைவத்திற்கு அடிமை சாசனமே எழுதித் தந்தவர்கள் போலத்தான் வாழ்ந்தார்கள். வயல் மற்றும் கடையில் பணிபுரியும் வேலையாட்கள் முதல் வீட்டில் வரும் உறவினர்கள் வரைக்கும் இந்த உயிர்ப்பலியை ரசித்து ருசிப்பவர்கள். நானும் அப்படித்தான் வாழ்ந்தேன் வளர்ந்தேன்.

முதல் இருபது வருட வாழ்க்கையில் தின்று பழகிய நாக்கின் சுவை அடுத்தப் பத்து வருடங்கள் திருப்பூரின் நான்கு மூலைக்குள் இருக்கும் பொந்து சந்துக்குள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலைய வைத்தது. செட்டி நாட்டு உணவகம் என்ற தொங்கும் அட்டையைப் பார்த்தால் வண்டி இயல்பாகவே நின்று விடும். மூன்று நேரத்திலும் விடாமல் தின்று மொத்தமாகக் குடல் அறுந்து விழுந்து போகின்றது என்று மருத்துவர் எச்சரித்த போது தான சுவாதீனமே வந்தது. குடல் சார்ந்த அத்தனை நோய்களும் திருமணத்திற்கு முன்பே இந்தத் தேடி அலைந்து சாப்பிட்ட சாப்பாட்டால் வரத்தொடங்க. திடீர் என்று ஆன்மீக ஞானமும் வந்து சேர இனி ஒவ்வொன்றாகத் தொலைக்க வேண்டும் என்று ஆரம்பித்தேன்.

முதல் பலி இந்த உயிர்ப்பலி.

மூத்த அண்ணி கூட முதலில் கிண்டலடித்தார். நீங்களாவது? நான் நம்பவே மாட்டேன் என்று கேள்விக்குறியாய் பார்த்தவருக்கு வீட்டுக்காரம்மா ஆமோதித்துச் சொன்னபோது அவர்களின் ஆச்சரியம் இன்றும் என் கண் முன் நிற்கிறது. காரணம் அசைவ வெறியனாகத்தான் வாழ்ந்தேன், ஊரில் இரண்டு உணவகம் பிரபல்யமானது.

ஒன்று விடத்தையா விலாஸ். இரவு 7 மணி தொடங்கி நடுசாமம் வரைக்கும் தண்ணீர் மக்களால் தடுமாறிக் கொண்டுருக்கும். அருகில் கல்லூர் என்ற ஊரில் உள்ள சாராயக் கடை ஆறு போல் ஓடிக் கொண்டுருந்தது. பாட்டிலில் கொண்டு வந்து இங்கு நுழைவதற்கு முன்பு ஊற்றிக் கொண்டு உள்ளே நுழைவார்கள்.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நண்பர்களுடன் முழித்துப் படிக்க வேண்டும் என்று ஜல்லியடித்து உருண்டு புரண்டு அனுமதி பெற்று எப்போதும் போலச் சாலையில் உள்ள பாலத்தில் வந்து அமர்ந்திருந்த போது தான் ராஜு வந்தான். எங்களுக்கு ஒரு வருடம் பின்னால் படித்துக் கொண்டிருந்தவன். அவன் அம்மா ஊருக்குள் இருந்த ஒரே அரசாங்க மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து கொண்டுருந்தார்.

அவன் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவிசயங்களிலும் ஜெகஜால கில்லாடி. அந்த ராத்திரி நேரத்தில் என்னுடன் இருந்த நாலு பேர்களையும் பார்த்து விட்டு அவன் கேட்ட முதல் கேள்வியே “என்னப்பா அதிசியமா ராத்திரி நேரத்தில் இங்கு வந்து இருக்கீங்க?” என்றான். நான் தான் அவனிடம் மெதுவாகக் கேட்டேன். “விடத்தையா விலாஸில் ரெண்டு புரோட்டா வாங்கித் தருவாயா?” என்றேன். அவனுக்கு லஞ்சமாக ஒரு புரோட்டாவுக்குரிய காசையும் கொடுத்து விட்டு நாங்கள் அருகில் இருந்த மளிகைக் கடையில் ஒளிந்து கொண்டோம்.

உணவகத்தின் முன்னால் மிகப் பெரிய விலைப்பட்டியல் தொங்கிக் கொண்டுருந்தது.. தலைக்கறி, குடல்கறி, மூளை என்று ஏதேதோ போட்டுருப்பார்கள். புலிநகம் போன்ற ஏதோ ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு வலைபின்னல் பனியனும் சிலோன் கைலியுமாய் மைனர் போல் ஒருவர் வெகு சிரத்தையாகக் கொத்திக் கொண்டிருப்பார். கடையைக் கடந்து செல்லும் பெண்களைப் பார்த்ததும் அவர் கொத்தும் விதம் சற்று மாறுபடும்.

அவரைப் பலமுறை முந்திரிக்காட்டுக்குள் தள்ளிக் கொண்டு செல்லும் போது பார்த்தது உண்டு. அவர் ஸ்டைலாகப் பேசிக் கொண்டே செய்யும் கொத்துப் புரோட்டா சத்தம் ஊர் அடங்கிய வேலையில் தூரத்தில் இருப்பவர்களுக்குக் கூட நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டுருக்கும்.. அப்போது அவன் அறிமுகப்படுத்தியது தான் அருகே இருந்த கண்ணகி உணவகம். பர்மா மலேசியாவில் உள்ள பெரிய வீடுகளில் சமையல்காரராகப் பணிபுரிந்து விட்டுக் கடைசிக் காலத்தில் வந்து கடை போட்டிருந்தார். குடிப்பழக்கம் இல்லாத அத்தனை மக்களுக்கும் இந்தக் கடை தான் வேடந்தாங்கல்.

நான் பார்த்தவரைக்கும் அம்மியில் அரைத்த மசாலா சமாச்சாரங்களைத்தான் கடைசி வரைக்கும் பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள். ஊரின் மற்றொருபுறத்தில் முஸ்லீம் மக்கள் வாழும் சந்தில் தான் கறிக் கடைகளும் மீன் கடைகளும் இருந்தது. பெரிய சில்வர் தூக்கு வாளி மற்றும் வேறு இரண்டு மூடியுள்ள சட்டியுமாய் அப்பா பின்னால் சென்று அங்கு அமைதியாய் நிற்க வேண்டும். அங்குக் கடைபோட்டுள்ள முஸ்லீம் மக்கள் அத்தனை பேர்களும் வருகின்ற நபர்களை அழைப்பது மாமா மாப்பிள்ளை பங்காளி போன்ற வார்த்தைகளால் மட்டுமே.

இப்போது மாறிப் போன வெறிகலாச்சாரம் எதையும் நான் பார்த்தது இல்லை. அப்பா, அனைவருக்கும் தெரிந்தவர் என்பதால் வரவேற்பு பலமாக இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை. மூன்று குடும்பங்களுக்கும் சேர்த்து எடுக்க வேண்டிய சமாச்சாரங்களால் ஒவ்வொரும் இங்கே வாங்க என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டிருப்பார்கள்.

அப்பா சென்றதும் முதலில் செய்வது உரித்துத் தொங்கிக் கொண்டுருக்கும் ஆட்டின் வாலை இழுத்துப் பார்ப்பார். காரணம் செம்மறி ஆட்டுக் கறியை கலந்து வைத்து வாலை மட்டும் ஒட்டி வைத்து இருப்பார்கள். எலும்பு சதை இரத்தம் ஈரல் என்று ஒவ்வொன்றும் தனித்தனியாக அதற்கான பாத்திரங்களில் அடைக்கப்பட்டுக் கடைக்காரர்களே வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.

வீட்டில் இருக்கும் அத்தனை பேர்களும் ஒரே வரிசையாக அமர வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டு.

எந்த வேலையிருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜர் ஆகிவிட வேண்டும். எந்தப் பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியான உபசரிப்பு. நண்பர்கள் இடையில் எவராவது தேடிவந்தால் சாப்பிட்டு விட்டு தான் செல்லமுடியும். நேரம் பார்த்து உள்ளே வரும் கோபிநாதன் போல் குறிப்பிட்ட நாளில் கோவிந்தராஜன் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே மாட்டான். இப்போதுள்ள நகர்புற கோழி கலாச்சாரத்தை நான் ஊரில் பெரிதாகப் பார்த்தது இலலை. உடம்புக்குச் சூடு என்று எளிதாக ஒதுக்கி விடுவார்கள். உள்ளடங்கிய கிராமங்களில் நாட்டுக்கோழிக்கு மட்டும் விருந்தினர் வருகையின் போது மரியாதை உண்டு.

ஆனால் ஊருக்கு மிக அருகில் இருந்த தொண்டி, மீமிசல்,கோட்டைப்பட்டினம் தொடங்கி இராமேஸ்வரம் வரைக்கும் இருந்த காரணத்தால் மீனும் நண்டும் தினமும் ஊருக்குள் மாலை வேலைகளில் வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அத்தனையும் காணாமல் போய்விடும்.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

ஆனால் புதன் கிழமை சந்தையின் போது கிராமத்துப் பெரியவர்கள் கொண்டு வரும் அயிரை, கெண்டை,கௌங்கை, போன்ற சிறிய ரக மீன்களுக்கு எப்போதுமே தனி மரியாதை. ஈரமான துணியைத் தரையில் விரித்து அதில் மண்ணுடன் கலந்து வைத்துள்ள அயிரையும் மற்ற மீன்களையும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். கூறு போல் மண்ணுடன் கலந்து வைத்து இருப்பார்கள். நிறைய மீன்கள் இருக்கும் என்று நம்பி வாங்கி வரும் கூறுகளைத் தண்ணிர் விட்டு அலசி கூறாக்கி பார்த்தால் கையில் அடக்கி விடும் அளவுக்குத் தான் தேறும்.

அம்பானி மார்க்கெட்டிங் போலக் கிராம மக்களின் தந்திரம் அது.

கெளுத்தி,திருக்கை, தொடங்கிப் பெரிதான நண்டுகள் வரைக்கும் ஏதோ ஒன்று தினமும் மாலை வேலையில் அம்மா சுத்தம் செய்து கொண்டிருப்பார். பள்ளி விட்டு வந்தவுடன் சுடச்சுட இறக்கிக் கொண்டு அலைந்து திரிந்த இனிய நாட்கள் அது. பள்ளி விடுமுறைகளின் போது சாப்பிட்டு முடித்து விட்டால் கட்டாயம் உடனே தூங்க வேண்டும்.

அப்பாவின் பல கட்டளைகளில் இதுவும் ஒன்று. காரணம் சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்ட வேண்டும் என்பார். விஞ்ஞான அறிவைப் பற்றி யோசிக்க நேரமில்லாத காரணத்தால் அவர் சொல்வதை எதிர்த்து பேசத் தெரியாமல் அப்படித் தான் வளர்ந்தோம். சமீபத்தில் மூத்தவளிடம் இதையே தான் கேட்டேன்.

” அப்பா..சாப்பிட்டவுடன் தூங்கினால் நல்லது இல்லை. கொஞ்ச நேரமாவது வெளியே உட்கார்ந்து இருக்க வேண்டும். எங்க மிஸ் சொல்லியிருக்காங்க “

என்ன பதில் என்னால் சொல்லமுடியும்?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book