8

குடும்பத்தின் கூட்டுக் குடித்தன வாழ்க்கை முடிவுக்கு வந்த போது ஒன்பதாம் வகுப்பு அறிமுகமாயிருந்தது. வரவு செலவுகள் ஒன்றாகவும் வாழும் இடம் தனியாகவும் பேசி முடிவு செய்து இருந்தார்கள். அந்தப் பெரிய கடைத் தெருவில் குறிப்பாகப் பேருந்து நிலையத்திற்கு அருகே பெரிய வீட்டு வாழ்க்கை எனக்குப் பல விதங்களில் உதவியாக இருந்தது. .

வீட்டுக்கு அடுத்த வாசல் தட்டச்சுப் பயிலகம். இதற்குப் பின்னால் ரொட்டிக் கடை.. சாயங்காலம் என்றால் ரொட்டிக்கடையில் இருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டுருக்கும். அருகே உள்ள சிறிய பாலத்தில் கூட்டணி அமைத்த நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்து போகின்ற மக்களை அளவெடுப்பதோடு சரி. கையில் காசிருந்தால் ரொட்டிக்கடையில் அனைவரும் சேர்ந்து வாங்கிய வெஜிடபிள் பப்ஸ் தின்று திருப்தியாய் நகர்ந்து விடுவதுண்டு.

பேருந்து நிலையம். அருகில் உள்ள காரணத்தால் வந்து இறங்கும் அத்தனை பேர்களும் பாலத்தில் அமர்ந்திருக்கும் எங்களைக் கடந்து தான் செல்ல வேண்டும். பலரின் திட்டுக்களும் பாவாடை தாவணிகளின் தரிசனமும் இங்கிருந்து தான் தொடங்கியது.

பெயர் தான் பேருந்து நிலையமே தவிர ஊரில் உள்ள பிச்சைகாரர்கள் கூடும் இடமாக இருந்தது.

ஒரு தகர கூரை. அதுவும் யாரோ ஒரு புண்ணியவான் தானமாகக் கொடுத்த இடம். யூ வடிவ ஒரு குட்டிச் சுவரை சுற்றி வந்து ஒவ்வொரு பேருந்தும் சற்று நேரம் நின்று விட்டு நகரும்., இந்தக் குட்டிச் சுவருக்குள் சுற்றி வர சோம்பேறிப் பட்டுக்கொண்டு மேட்டுக்கடை பக்கமாகத் திருப்பிக் கொண்டு தனியார் பேருந்துகள் நகர்ந்துவிடும்.

இதனால் பலரும் எப்போதும் மேட்டுக்கடை அருகே வந்து நின்றுவிடுவார்கள். கனத்த மழையென்றால் ஜனங்கள் முழங்கால் தண்ணீரில் சந்தையில் வாங்கிய நண்டு மீன்களுடன் கப்பு வாடையைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். டவுன் பஸ் வரும் போது ஓட்டுநர் ஒரு வினோதமான ஒலியை தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டே வருவார். அதற்குள் அங்குக் கூடியிருக்கும் மொத்த கூட்டமும் முண்டியடித்துக் கொண்டு தயாராய் இருப்பார்கள்.

உள்ளே நுழையும் போதே பாதிப்பேர்கள் ஓடும் வண்டியில் ஏற முயற்சிக்க ஒரே களேபரமாக இருக்கும். பேருந்து நின்றதும் பலரும் டயர் வழியே கால் வைத்து ஏறிக் கொண்டிருப்பார்கள். உள்ளே வடிவேல் படச் சிரிப்பு போல் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும், அருகில் உள்ள அத்தனை கிராம மக்களுக்கும் குறிப்பிட்ட இந்தப் பேருந்துக்களை விட்டால் வேறு வழியில்லை.

ஊரில் ஒவ்வொரு புதன் கிழமையும் சந்தை உண்டு.. தொடக்கத்தில் கடைத்தெருவுக்குள் இருந்த சந்தை பிறகு எங்கள் வீட்டுக்குப் பின்புறம் இருந்த விலலுடையார் பொட்டலுக்கு மாற்றினார்கள்.

இந்தப் பொட்டல் என்பது கருவேலக்காடும் காலையில் மலஜலம் கழிப்பவர்கள் வந்து கூடுமிடமாக இருந்தது. அவசரமாகக் கீற்று கொட்டைகளை உருவாக்கி சந்தை என்று மாற்றினார்கள்.

அன்று தான் சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களும் ஒன்றாக வந்து கூடுவார்கள். அன்று மட்டும் இந்தப் பேருந்தில் எள் போட்டால் எண்ணெய் வழிந்து ஓடும் போலிருக்கும். தொங்கிக் கொண்டு கர்ப்பிணி போல் அந்த டவுன் பஸ் நகரும் போது பத்தடி தள்ளி நின்று வேடிக்கை பார்த்த காலமது. நடத்துனரை விட்டு நகர்ந்த பேருந்தில் கூரையில் அமர்ந்து இருந்த மக்கள் பின்னால் உள்ள ஏணிப்படி கம்பிகள் வழியாகக் கை கொடுத்து காப்பாற்றி அழைத்த சம்பவங்களும் உண்டு.

எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டுருந்த சரஸ்வதி வித்யா சாலை படிப்பு முடிவுக்கு வந்து அந்தப் பள்ளியும் பெண்கள் உயர்நிலை பள்ளியாக மாறிப் போனது. எட்டாம் வகுப்பு முடிவுக்கு வந்த போது பள்ளி ஆண்டு விழாவில் லேனா தமிழ்வாணன் பேச்சைக் கேட்டதும் அவர் மேடையில் பேசியது ஒன்றும் புரியாமல் இவர் ஏன் பகலில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு இருக்கிறார்? என்று யோசித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

ஊரில் இருந்த இரண்டு பள்ளிகளுமே தனியாருக்குச் சொந்தமானது தான். வீட்டில் எவருக்கும் படிப்புக்கென்று பெரிதான செலவுகள் ஏதும் செய்ததாக நினைவில்லை. பெரும்பாலும் பள்ளியில் படித்த அனைவருமே நடுத்தர வர்க்கம் என்பதோடு பெரிதான சண்டை சச்சரவு இல்லாமல் படிப்பை தவமாக மாற்றிய ஆசிரியர்கள் தான் பணியாற்றிக் கொண்டுருந்தார்கள்.

கிராமத்து மாணவர்கள் சைக்கிளில் வந்துவிட முடியாதவர்கள் டவுன் பஸ்ஸில் தான் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள். எவரும் எந்தத் தவறும் செய்து விட்டு தப்ப முடியாது. ஒவ்வொருவரின் குடும்பப் பின்புலமும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றாகவே தெரியும்.

“நாளைக்கு உன் அப்பாவை கூட்டிக்கொண்டு வா ” என்றாலே அழுகையுடன் மூத்திரம் பொத்துக் கொண்டு வந்து டவுசரை நனைத்து விடும். அதற்குத் தனியாக ரெண்டு அடியும் ஒரு வாளி தண்ணீரும் சுமந்து வர வேண்டும்.

நாங்கள் இருந்த பழைய வீட்டில் வீட்டுக்குப் பின்னால் மிகப் பெரிய தோட்டமும் சிமெண்ட் தளமும் இருந்தது. இப்போது வந்துள்ள புதிய வீட்டில் எந்த மரங்களுமே இல்லை. ஒரே ஒரு முருங்கை மரத்தை மட்டும் விட்டுச் சென்றிருந்தனர். பழைய வீட்டில் இருந்த கொய்யா மா மரங்கள் கூட இங்கே எதுவும் இல்லை.

புதிய வீட்டில் கொடுக்காப் புளி மரம் கூட இல்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லும் போது டவுசர் பையில் கொண்டு போகும் எந்தச் சமாச்சாரத்தையும் கொண்டு போக முடியவில்லை. பள்ளியில் பண்ட மாற்று முறையாகப் பரிமாறிக் கொள்ளும் பென்சில் வியாபாரத்தைக்கூட நிறுத்த வேண்டியதாகி விட்டது.

ஆனால் மற்றொரு வகையில் எனக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்தது.

இங்குக் கூட்டாளிக் கூட்டம் அதிகமானது. என் லொட லொட பேச்சை கேட்பதற்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அப்போது எங்கள் கூட்டத்திற்குள் இறுதியில் வந்தவன் பெயர் சண்முக சுந்தரம். அவன் அப்பா பக்கத்து கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டுருந்தார்.. புதிய வீட்டுக்கு அருகே பஞ்சாயத்து போர்டு அலுவலகம் இருந்தது. சனி ஞாயிறு எவரும் வரமாட்டார்கள். இரண்டு நாட்களும் பள்ளிக்கு விடுமுறையாகத்தான் இருக்கும்.

அரட்டை அடிக்க, அத்தனை அக்கிரமும் செய்ய மறைவிடங்கள் உண்டு. புகைப்பவர்கள் அங்கே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேர்களும் எங்களுக்கு வேடிக்கை மக்கள். கூட்டாளிக் கூட்டத்தில் இருக்கும் எவனுக்கும் எந்தத் தைரியமும் இருக்காது. உயரமும், சதைகளுமாக இருக்கும் மக்கள் கூட சோப்ளாங்கியாய் தான் இருப்பார்கள்.

அவனவன் வாயாலே ஊதிக்கொண்டு ஊத்திக் கொண்டு படம் காட்டுவதோடு சரி. நாள் முழுக்கத் திருப்தியாய் அளந்து விட்டுக் கொண்டு அன்று பத்திரிக்கையில் வந்த நடிகையைப் பேச்சு மூலமே கற்பழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் சண்முகம் கூட்டத்திற்குள் வந்தால் பேசவே மாட்டான்.

காரணம் அவனின் தம்பியும் உள்ளே இருக்கச் சற்று நேரம் இருந்து விட்டு வெளியேறி விடுவான்.

போகும் போது எப்போதும் போலத் தம்பியைப் பார்த்து ” சீக்கிரம் வீட்டுக்கு வாடா ” ன்னு கத்தலாகச் சொல்லிவிட்டு சென்று விடுவான். எங்களைப் பார்த்துவிட்டு வெளியே போகும் போது அவன் வயிறு உப்பலாகவே இருக்கும். தொடக்கத்தில் எனக்குப் புரியாததை மாதவன் ஒரு நாள் சொன்ன போது தான் புரிந்தது.

யார் யார் இங்குக் கூடியிருக்கிறார்கள்? என்று பார்த்து விட்டு அவன் பக்கத்தில் உள்ள புளியமர தோப்புக்குள் சென்று விடுவான். பெரிய தூர் பகுதியாகப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொண்டு அமர்ந்து விடுவான். மறுபடியும் நான்கு புறமும் பார்த்துவிட்டு வயிற்றுப் பகுதியில் ஒளித்து வைத்த பாடப்புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்குவான்.

ஒரு நாள் ஒளிந்து கொண்டு அவனைப் பார்த்த போது மண்டையில் ஏறாத ஆங்கிலப்பாடத்துடன் பெரிய சண்டையே போட்டுக் கொண்டு யாரையோ திட்டிக் கொண்டு நெஞ்சில் குத்திக் கொண்டு போராடிக் கொண்டிருந்தான்.

அவன் படிப்பதை யாரும் கவனித்து விடக்கூடாது. என்பதற்காகவும், அப்படி அவனை கவனித்தவர்களும் படிக்கத் தொடங்கிவிட்டால் அவன் மதிப்பெண்கள் வாங்க முடியாது என்பதற்காக இப்படிச் செய்து கொண்டிருந்தான். ஆனால் ஒரு நாள் மொத்த கூட்டத்தையும் மாதவன் பூனை போல் நகர்த்தி அந்தத் தோப்புக்கு அழைத்துச் சென்றான்.

அவன் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த புளியமர தூர் பகுதியைக் காட்டி விட்டு ஒதுங்கி விட்டான். அப்போது தான் மொத்த கூட்டமும் சேர்ந்து அவனுக்குப் புதிய பெயர் வைத்தார்கள். கிறுக்குச் சண்முகத்தின் சுருக்கமாக கீனா சானா. கடைசிவரைக்கும் அவனை வெறுப்பேத்த இப்படித்தான் அனைவருமே அழைத்தார்கள். கவனித்த எங்கள் கூட்டத்தைக் கண்டு மேல்நிலைப்பள்ளிக்குப் பின்னால் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள முந்திரித் தோப்புக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டான்.

அதற்குப் பிறகு அவனைத் தொடர முடியவில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் தமிழைத் தவிர அத்தனையிலும் தேர்ச்சியில்லை என்ற போது அவன் அப்பா அடித்த அடியில் எங்கள் கூட்டத்தில் வந்து முதன் முறையாக மனம் விட்டுப் பேசினான். அன்று கடைசியாகப் பார்த்த அவன் இப்போது எதிரே வந்து கொண்டிருந்தான்.

சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தவன் என்னை அடையாளம் கண்டு மெதுவாகச் சிரித்தான். அவன் அருகே வந்தவர் அவன் மனைவியாக இருக்க வேண்டும். எலும்பும் தோலுமாய்க் கன்னம் ஓட்டி ஒரு மாதிரியாகப் புடவையை உடம்பில் சுற்றியிருந்தார். சைக்கிளில் முன்னாலும் பின்னாலும் மூன்று குழந்தைகள் உட்கார்ந்து இருக்கத் தள்ளிக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தான்.

குழந்தைகளின் முகத்தைப் பார்த்த போது உடல் நிலை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது. ” குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை. நான் டாக்டரைப் பார்க்க போய்க் கொண்டுருக்கின்றேன். பிறகு பேசலாம் ” என்று நகர்ந்து விட்டான்.

அது வரைக்கும் அவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்பதும் தெரியாமல் இருந்தது, ஆனால் அம்மாவிடம் இரவு வந்து பேசிய போது தான் முழுமையாகப் புரிந்தது. தொடக்கத்தில் ஊரில் சுப்பையா டாக்டர் என்ற பெயரில் பிரபல்ய டாக்டர் ஒருவர் இருந்தார்.. மருத்துவப் படிப்பு எதும் படிக்காமல் யாரிடமோ ஒரு வருடம் இருந்து விட்டு தைரியமாய் ஆர்எம்பி என்ற படிப்பை போட்டுக்கொண்டு டாக்டர் சுப்பையா என்று தொழிலை தொடங்கி விட்டார்.

ஊருக்குள் ஒரு அரசாங்க மருத்துவமனை இருந்தது. அதில் பணிபுரிந்த எம்பிபிஎஸ் டாக்டர் வைத்திருந்த கிளினிக்கை விட இவரிடம் தான் கிராமத்து மக்கள் நம்பிக்கையுடன் வந்து கொண்டிருந்தனர்.

உள்ளூர் கிளினிக் போலவே சுப்பையா டாக்டர் பக்கத்து கிராமங்களுக்கும் தான் வைத்து இருந்த ஸ்கூட்டர் மூலம் நடமாடும் கிளினிக் மூலம் சேவை புரிந்து கொண்டிருந்தார். ஐந்து அல்லது பத்து ரூபாய் மட்டுமே வாங்குவார். கடன் சொல்பவர்களும் உண்டு. காளை மாடு கன்று போடாத பிரச்சனைகளையும் கொண்டு வருபவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நகர்த்தி விடுவார்..

” ஏஞ்சாமி எங்கையில காசு இல்லை ” என்று கூடச் சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்கள். பெரிதாகக் கோபப்படாமல் செல்லமாகத் திட்டி விட்டு காத்துக் கொண்டிருக்கும் அடுத்தவரை உள்ளே வரச் சொல்லுவார்.

வருகின்ற 90 சதவிகித கூட்டத்திற்குக் கட்டாயம் ஊசி போட்டு விடுவார். ரெடிமேடு மாத்திரைகள் தயாராக இருக்கும். பேச்சில் தேனும் பாலும் கலந்தடித்து வருபவர்களைத் தைரியப்படுத்துவார். சாகக்கிடப்பவர்கள் கூட நான் சுப்பையா டாக்டரிடம் தான் போவேன் என்று அடம்பிடித்துத் தூக்கிக் கொண்டு வந்த பலரையும் பார்த்ததுண்டு.

ஆனால் அவருக்கு வந்த மஞ்சள் காமாலை அவரின் வேலைப்பளூவே காவு கொண்டுவிட்டது. அவரிடம் பணிபுரிந்த நம்ம கிறுக்குச் சண்முகம் சைக்கிளில் ஒவ்வொரு கிராமமாக மருத்துவச் சேவையைச் செய்து கொண்டுருக்கின்றானாம்.

மூன்றே வகையான மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும் மட்டுமே. அதுவும் காசு கொடுத்து வாங்க மாட்டானாம். அவன் தம்பி பணிபுரியும் மெடிக்கல் கடையில் இருந்து எடுத்துக் கொண்டு வந்துவிடுவான். உடல்வலி, காய்ச்சல், சளி. அவ்வளவுதான். சுப்பையா டாக்டர் போல் இனிமையாகப் பேசுவானா என்பது தெரியவில்லை.? ஆனால் பரவாயில்லை. இப்போது பிழைத்துக் கொள்வான் போலிருக்கு. காரணம் நல்ல டாக்டராகப் பார்த்துக் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு செல்கிறானே?. என்னைக் கடந்து சென்ற போது அவனின் குரல் மனைவியை நோக்கி பாய்ந்தது. என்னை யாரென்று கேட்டிருப்பாரோ?

“புள்ள மேலே ஈ மொய்க்குது. துண்டப் போடு” என்றான். குழந்தை மேல் மொய்த்த ஈக்கள் தான் அவன் ஆதங்கத்தை எனக்கு அடையாளம் காட்டியது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book