7

பூங்காவில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வர முடியவில்லை.

மரங்களும் அருகே தெரிந்த பொட்டல்காடுகளும் வேறொரு உலகத்தைப் பார்த்தது போல் இருந்துருக்கலாம். வீட்டுப் பாடங்களும் விளையாட முடியாத சோகங்களும் இன்று முடிவுக்கு வந்தது போலிருந்தது . அவர்கள் போட்டுருந்த செருப்புகள் எங்கோ அனாதையாய் கிடக்க அவர்களின் ஓட்டமும் கத்தலும் மரங்களில் இருந்த பறவைகளைப் படபடக்க வைத்தது.

பூங்காவை ஓட்டியிருந்த நண்பன் முருகேசனின் வீட்டின் முன்புறம் அவனின் தங்கை வெளியே நின்று எவருக்கோ எதிர்பார்த்து காத்துக் கொண்டுருப்பது தெரிந்தது. என்னைக் கவனித்தால் அவனின் அம்மா வீட்டுக்குள் வர அழைப்பு விடுப்பார். மொத்தமும் மாறிவிடும்.

பூங்காவில் இருந்த சறுக்கு மர தகரத்தில் நீட்டிக் கொண்டுருந்த துருப்பிடித்த கம்பிகள் என்னை யோசிக்க விடாமல் தடுக்க குழந்தைகளைப் பிரித்து வண்டிக்குள் அடைத்து பயணித்த தெருவின் இறுதிப் பகுதி பங்களா ஊரணித் தெரு. நடுநாயகமாகக் குளம் அருகே ஆலமரம். எப்போதும் போல மரத்தின் கீழே பிள்ளையார் சிலை. ஒவ்வொரு பகுதிகளுக்கும் இருக்கும் வெட்டி ஆபிசர்களைப் போல இந்தச் சந்துக்குள் கொஞ்சம் அதிகமாகவே உண்டு.

பிள்ளையார் சிலைக்குப் பின்புறமாக வந்தால் இரவு நேரம் தவிர எப்போதும் சீட்டாடி கோஷ்டிகள் நிறையப் பேர்கள் இருப்பார்கள்.

ஒவ்வொரு சந்தின் பெயரும் வினோதமான பெயர்க்காரணமாக இருக்கும்.. நடுவீதி, நடராஜபுரம்,கீழப் பெருமாள் கோவில், மேலப்பெருமாள் கோவில், யெமு வீதி இப்படித் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு நீண்ட சந்தில் அதிகபட்சம் இருபது வீடுகள் இருக்கலாம். அடுத்தத் தெருவுக்குப் பிரிக்கும் பாதைகள் எனபது ஒரு முழு வீட்டின் அளவாக இருக்கும். மொத்தத்தில் ஒரு வீட்டின் மொத்த அளவு முடியும் போது இடையில் உள்ள சந்து பிரிந்து அடுத்த வீட்டுக்குத் தொடக்கமாக இருக்கும். முழுவீட்டையும் நான்கு புறமும் சுற்றி வரும் போது லேசாக மூச்சு வாங்கும..

குழந்தைகள் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த கைப்பந்து வலையுடன் ஒன்றிப் போயிருந்தார்கள். பார்த்துப் பழகிய சிலர் கண்களுக்குத் தெரிந்தார்கள். அப்போது என் பார்வையில் பட்டது எதிரே இருந்த வள்ளிக்கண்ணுவின் வீடு. என்னுடைய பள்ளித் தோழி.

அறிமுகம் இல்லாதவர்கள் பார்க்கும் முதல் பார்வையில் இவள் மனநலம் குன்றியவளோ? என்று தோன்றக் கூடும். எப்போதும் எதையாவது தின்று கொண்டு இருக்கும் வள்ளிக்கண்ணு. ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தின்று கொண்டிருப்பாள். .

வள்ளிக்கண்ணுக்கு 18 வயதில் திருமணம் ஆனது.

26 வயதுக்குள் வரிசையாகப் பெற்றெடுத்த நாலைந்து பெண் குழந்தைகளுடன் இப்போது விதவை கோலத்துடன் தனியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மிகப் பெரிய கோட்டை போன்ற வீட்டில் அவளும் குழந்தைகளும் கூட ஒரு வயதான வேலைக்கார பாட்டியுடன் சத்துணவு பணியாளராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஏழு மணி இருட்டு என்பது வீட்டின் கடைசி வரைக்கும் சென்று வரமுடியாத பயத்தைத் தரும் அளவிற்கு விஸ்தாரமான வீடு.

படிப்பு மண்டையில் ஏறாது என்று உணர்ந்த அவளின் பாட்டி சேர்த்து வைத்து இருந்த நகைகளைக் காட்டி எவனோ ஒருவனின் தலையில் கட்டி வைத்து விட்டார். கட்டியவனின் கல்லீரல் கழுதை போல் சுமந்து ஒரு நாள் ரத்தமாகத் துப்பியது,.

அன்று தான் அந்த மொடாக்குடியனின் மற்ற வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறத் தொடங்கியது. வள்ளிக்கண்ணுவின் அப்பா பர்மாவில் வேறொரு குடும்பத்துடன் இருக்க, காத்திருந்த அம்மா கண்கலங்கிக் கொண்டே சேர்ந்துவிட பாட்டி தான் வள்ளிகண்ணுவை வளர்க்க வேண்டியதாகி விட்டது.

ஜாதி, சமூகம், இனம் என்பதற்கெல்லாம் மேலானது பணம்.

பங்காளிச் சண்டையில் பெரிய வீடு இப்போது நீதிமன்ற தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் முகப்பில் மட்டும் இருந்து கொள்ள வள்ளிக்கண்ணுவுக்கு அனுமதி கிடைத்து குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எவராக இருந்தாலும் வாழ்வில் கை நிறைய காசு இருந்தால் அவர் நம்மவர். இல்லாவிட்டால் யார் அவர்?

அம்மா இல்லாத குறை போக்க அதிகச் செல்லம் கொடுத்து வளர்ந்த வள்ளிக்கண்ணுக்கு வெகுளித்தனம் அதிகம். ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது “டேய் கணேசா கடலை அச்சு வேண்டுமாடா?” என்று கேட்டவளை எப்படி மறக்க முடியும்?.

சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் இது போன்ற பிரமாண்ட வீடுகள் தான்.. முதல் இருபது வருட வாழ்க்கையில் அவஸ்ய தேவைகளைத் தவிர்த்து வெளியே எங்குமே சென்றது இல்லை. நான் பார்த்த ஊர்களை எளிதில் பட்டியலிட்டு விடலாம்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே வந்த போதிலும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இங்கே புதிய மாறுதல்கள் ஒன்றுமே உருவாகவில்லை. ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக வந்தார். துணை இணை அமைச்சராகி வர்த்தகம் உள்துறையாக மாறி இறுதியில் நிதியாக மாறியது. மக்கள் சொல்லும் “கெட்டி”யாகத் தான் சீனாதானா மயிரிழையில் தப்பித்து இன்று வரையிலும் மத்திய அரசில் மத்திய அமைச்சராக இருக்கின்றார்.

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் இந்தச் சமூக மக்களின் வாழ்க்கை தொடங்கியதாக வரலாறு சொல்கிறது. காலமாற்றத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் தொடக்கத்தில் குடியேறினர். இன்று பொதுப் பெயராக மொத்தமாகச் “செட்டிநாடு” என்று அழைக்கப்படுகிறது புதுக்கோட்டை, சிவகங்கை,இராமநாதபுரம் போன்ற ஊர்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றிலும் உள்ள 96 கிராமங்களில் பரவி வாழ்ந்து கொண்டுருக்கின்றார்கள். வியாபார நிமித்தமாக மன்னர் காலங்களில் வைசியர் குலம் என்று தொடங்கி இருக்க வேண்டும். வர்ணாசிர்மம் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சமாச்சாரங்கள் இங்குத் தேவையில்லை. மொத்தத்தில் தொழில் அடிப்படையில் இந்த ஜாதி மூலக்கூறுகள் உருவாகியிருக்க வேண்டும்.

தொடக்கத்தில் ஒவ்வொரு தனி மனிதர்களும் தாங்கள் செய்து கொண்டிருந்த தொழில் அடிப்படையில் உருவான சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டன கிமு நாலாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரைக்கும், அதன் பிறகு ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகளில் கோலோச்சிய புத்த சமண மதங்கள் முன்னிலையில் இருந்தாலும் இந்த ஜாதி மூலக்கூறு மட்டும் கவனமாகச் சிதையாமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

மன்னர்களுக்கு உதவும் வகையில் வைசியர் குலத்தில் உருவானது தான் இந்தச் செட்டி என்ற சொல்லாக வந்துருக்க வேண்டும். ஆனால் செட்டியார்களின் பலவித செட்டியார்கள் உண்டு என்பதை திருப்பூருக்குள் வந்த போது தான் புரிந்து கொண்டேன். 24 மனை, தெலுங்கு, கன்னடம், வளையல்கார என்று வாணியச் செட்டியார் வரைக்கும் பலதரப்பட்ட செட்டியார்கள் இருக்கிறது.

60 நகரத்தார் கிராமங்கள். 9 விதமான கோவில்களின் அடிப்படையில் 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டியை அடிப்படையாக் கொண்டு நிலைபெற்று உருவான சமூக மக்கள்.

ஒவ்வொரு விதமான பாரம்பரியம். சிங்கப்பூர் முருகன் கோவிலில் முன்புறம் உள்ள அந்தச் சிறிய கல்வெட்டை உற்று கவனித்தால் 1859 ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த பெருமக்களின் சேவையை நமக்கு உணர்த்தும். அங்கு மட்டுமல்ல மலேசியாவில் உள்ள பினாங்கு பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி வரும் போது நாம் இருப்பது வெளிநாட்டிலா இல்லை தமிழ்நாட்டின் ஒரு பகுதியா என்று நம்மைத் திகைப்படைய வைக்கும். பர்மா வரைக்கும் சென்று பொருள் ஈட்டிய சமூகம்,

ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அன்றைய காலகட்டத்தில இலங்கையின் மொத்த நிதி ஆதாரத்தில் 90 சதவிகித பங்களிப்பு நம்மவர்களின் கையில் தான் இருந்தது.

உச்சக்கட்டமாக இன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அண்ணாமலை செட்டியார் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்த நெல்லை விற்பதற்குப் பயன்படுத்திய நாடு இலங்கை. தமிழ் நாட்டில் இருந்து நெல் அரிசி மூட்டைகளை இலங்கைக்குக் கொண்டு செல்ல தனியாகவே கப்பல்கள் வைத்து இருந்தது ஆச்சரியத்தின் உச்சம்.

இன்று அத்தனை வீடுகளும் பாழடைந்து கிடக்கிறது. தேக்கு மர கதவுகளும், பெல்ஜியத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அலங்காரங்களும் பொலிவிழந்து போய்விட்டது. 150 ஆண்டுகள் கடந்தும் இன்று ஒரு சுவரில் கூட நான் விரிசலை பார்த்தது இல்லை. முட்டைச் சாற்றைக் குழைத்து முழுமையான அர்ப்பணிப்பும் கலைநுணுக்கமாய்க் கட்டிய மொத்த வீட்டின் வாரிசுகளும் புலம் பெயர்ந்து எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளல் அழகப்பர் இல்லையென்றால் வரப்பட்டிக்காட்டு வாசியாக என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையும் முடிந்து போயிருக்கும். கவிஞர் கண்ணதாசன் இல்லையென்றால் வாய் உச்சரித்துக் கொண்டு இருக்கும் தமிழ் வார்த்தைகள் பாமரனுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா?

எம்.ஜி.ஆர் என்ற நடிகரைத் தான் நாடாள வைத்திருக்குமா? சமூகக் காவலர்களை நினைத்துக் கொண்டிருந்த போது என் எதிரே கீனா சானா என்றழைக்கப்பட்ட கிறுக்குச் சண்முகம் வந்து கொண்டிருந்தான்… என் பள்ளித் தோழன். பத்தாம் வகுப்பை மூன்று முறை எழுதியும் தேறமுடியாமல் தவித்தவன்.

இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலை கிராமத்து டாக்டர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book