3

வித்தியாசமான பெயர் மட்டுமல்ல. நான் படித்த இந்த ஆரம்பப்பள்ளியின் கட்டிடமும் கலைநுணுக்கமாய் இன்று வரையிலும் இருக்கின்றது. மிகத் துல்லியமாகத் தெரியாவிட்டாலும் இந்தக் கட்டிட வயது ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் இருக்கக்கூடும். இன்று வரையிலும் எந்த இடத்திலும் ஒரு விரிசல் கூட இல்லை. தற்போது உள்ள நவீன தொழில் நுட்பம் எதுவுமில்லாமல் செட்டி நாட்டுப் பகுதிகளில் உள்ள கட்டிடத் தன்மைகளைப் போல முட்டைச்சாந்து மூலம் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம். செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நாம் பார்க்கும் உழைப்பும் அர்பணிப்பும் இந்தப் பள்ளி கட்டிடத்திலும் உண்டு.

செட்டிநாட்டுப்பகுதியில் வாழ்ந்த ஒவ்வொருவரும் அந்தந்த காலகட்டத்தில் பர்மா, மலேசியா,சிங்கப்பூர் என்று திரை கடலோடி திரவியம் சேர்த்த சொத்துகளாகும். இந்தப் பகுதி முன்பு இராமநாதபுரம் மாவட்டம் என்ற எல்லைக்குள் இருந்தது. பின்பு பசும்பொன் முத்துராமலிங்கம் என்று மாறி தற்போது சிவகங்கை மாவட்டம் மாவட்டத்தில் காரைக்குடி தாலூகாவில் உள்ள புதுவயல் என்ற கிராமத்தில் உள்ளது. செட்டிநாட்டுப் பகுதி என்றவுடன் வெறும் செட்டியார்கள் மட்டுமே வாழ்ந்த பகுதி என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாத்தரப்பினரும் பல்வேறு ஜாதி மூலக்கூறில் வாழ்ந்து கொண்டுருக்கும் பகுதியாகும்.

இங்குள்ள வீடுகள் ஒவ்வொன்றும் பெரிதாக இருக்கும். வீட்டின் வாசல்படி, நிலைப்படி, என்று தொடங்கி ஒவ்வொரு இடங்களிலும் தச்சு வேலை பார்த்தவர்கள் தங்களின் கலைத்திறமையைக் காட்டியிருப்பார்கள். உணவை ரசித்துத் தின்ற கூட்டமும் ஆன்மீகம், கலையார்வம் என்பதைத் தங்கள் இரு கண்கள் போல வைத்து பார்த்த மக்களும் வாழ்ந்த பகுதியிது.

வாழ்க்கை முழுக்க மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த அத்தனை பெரியவர்களும் இன்று போய்ச் சேர்ந்துவிட்டனர். இன்று இங்கே நவீனங்கள் உள்ளே புகுந்து விட ஊர் முழுக்க நூற்றுக்கணக்கான நவீன ரக அரசி ஆலைகள் உருவாகி தொழில் நகரமாக மாறிவிட்டது. அரிசி ஆலைகள் மூலம் அவியல் தண்ணீரும், புகையும் ஊர் முழுக்கப் பரவி கொண்டு இருக்கின்றது.

இந்தப்பள்ளி யெமு வீதியில் வீடுகளுக்கிடையே இருக்கிறது. புதிதாக இந்த வீதியில் வந்து செல்பவர்களுக்கு இதுவொரு பள்ளியென்று சட்டென்று தெரியவாய்பில்லை. இப்போது உள்ள பள்ளிகள் போல் முன்புறம் பெரிய திடலோ குறிப்பிட்டு அடையாளம் சொல்லும் அளவிற்கு எதுவும் இருக்காது. பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வரும் மாணவ கூட்டங்களை வைத்து தான் கண்டு கொள்ள முடியும். தேச தந்தை மகாத்மா காந்தி முதல் காஞ்சி பெரியவர் வரைக்கும் உள்ள அத்தனை பிரபலங்களும் இந்தப் பள்ளிக்கு வந்துள்ளார்கள். பள்ளி நிர்வாகம் கடந்து வந்த பாதை வியப்புக்குரியது.

கட்டிடத்தின் உள்ளே நுழையும் பொழுதே பெரிய இரும்பாலான வெள்ளி முலாம் போன்று பூசப்பட்ட வண்ணக் கதவு நம்மை வரவேற்கும். முக்கியமான விருந்தினர்கள் அழைப்பாளர்களாக வரும் போது மட்டுமே இந்தப் பெரிய கதவை திறந்து வைப்பார்கள். பள்ளி நாட்களில் அதில் உள்ள சிறிய கம்பிக்கதவை திறந்து மாணவர்கள் உள்ளே செல்லவேண்டும்.

இந்த நுழைவு வாயிலிருந்து செங்குத்தான் பார்வையில் நாம் மேலே நோக்கினால் கட்டிடத்தின் மேல்பகுதியில் அரை வட்ட வடிவ அலங்காரச் சுவற்றில் சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டுருப்பார். அவரைச் சுற்றி ஒளிவட்டம் இருக்காது. அந்த இடத்தில் பள்ளியின் பெயரை நம்மால் பார்க்கமுடியும்.

இன்று வரையிலும் பள்ளி நிர்வாகம் தனியாரிடம் இருந்தாலும் அரசு நிதி உதவியோடு தான் சிறப்பாக நடந்து வருகின்றது. பள்ளியை கட்டிக் கொடுத்த அந்தப் புண்ணிய ஆத்மா இன்றும் சொர்க்கத்தில் இருக்கக்கூடும். நான் பார்த்தவரைக்கும் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் தான் நிர்வாகம் இருந்தது.

இப்போது பெண்கள் உயர்நிலை பள்ளியாக மாறியுள்ளது. பணிமாறுதல் காரணமாக வந்த ஆசிரியர்கள் முதல் உள்ளேயே பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் வரைக்கும் ஓய்வு பெறும் வரைக்கும் இருந்திருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பெரும்பாலான மாணவர்களின் குடும்பப் பின்புலம் நன்றாகவே தெரிந்து இருக்கும்.

மிக நெருக்கமான மாணவர்களை ஜாதிப் பெயரைச் சொல்லி, தங்களுக்குப் பிடித்தமான நக்கல் வார்த்தைகளையும் கொண்டு அழைப்பார்கள். இன்றுள்ள பிசிஆர் சட்டமெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன் இல்லை.

பக்கத்தில் உள்ள அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தொடக்கக் காலத்தில் இந்தப் பள்ளிக்கூடம் பெரிய வரப்பிரசாதம். ஆனால் கிராமத்தில் இருந்து வந்து படித்த பலரும் தினமும் ஏதோவொரு வகையில் பிரம்படி வாங்காமல் போவது அரிதாக இருக்கும். முக்கியமாக வீட்டுப்பாடத்தை எழுதி வராதவர்களும், ஒப்பிக்கத் தடுமாறுபவர்களும் உதையும் சேர்த்து வாங்குவதுண்டு. வயலும் வாழ்வுமாய் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வீட்டுப் பாடங்களுக்கு முக்கியம் குறைவு. ஆனால் இது போன்ற சூழ்நிலையில் வளர்ந்து, வாழ்ந்து வந்த மாணவர்கள் இன்று உலகம் முழுக்கப் பரவி உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.

பள்ளியின் உள்ளே நுழைந்ததும் அரைவட்ட வடிவ சிமெண்ட் தளமும் நடுவில் கொடியேற்று மரமும் இருக்கும். வாரத்தின் தொடக்க நாளில் இரண்டு பக்கமும் உள்ள அரைவட்ட வடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் விறைப்பாக நின்று ஒரு மாணவன் தலைமையாசிரியர் அருகே நின்று கொண்டு அருகில் உள்ள பத்து வீடுகளுக்குக் கேட்கும் அளவிற்குத் தினந்தோறும் உறுதிமொழி சொல்ல வேண்டும்.

நான் பலமுறை சொல்லியுள்ளேன். கொடி வணக்க பாடல் எல்லோரும் சேர்ந்து பாட உடம்பில் உள்ள சோம்பேறித்தனம் நீங்கி புத்துணர்ச்சியாய் வாரம் தொடங்கும். ஆசிரியர் வராத நாட்களிலும், மற்ற நேரங்களிலும் இந்த நுழைவு பகுதிகளில் அமர்ந்து கொண்டு சப்தம் போட்டு வாய்ப்பாடு சொல்லவேண்டும்.

ஓரோன் ஒண்ணு. ஈரோன் ரெண்டு என்ற மொத்த மாணவர்களின் சப்தமும் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுருக்கிறது. கொடிகம்பத்துக்கு ஒரு பக்கவாட்டில் மகிழம்பூ மரம். அதனை ஒட்டிய எல்லைச்சுவற்றின் மேல் பெரிய மணி கட்டி தொங்கவிடப்பட்டுருக்கும். இந்த மணி எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் படித்த எட்டு வகுப்புகள் வரைக்கும் அந்த மணியை விடுமுறை நாட்களில் நண்பர்களின் சேர்ந்து அடித்துப் பார்த்ததோடு சரி. வேறு எந்த நாளும் அந்த மணி ஒலித்து பார்த்ததில்லை.

மகிழம்பூ மரத்திற்குக் கீழே இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு தினத்தின் காலை நேரத்திலும் நான் புளியங்கொட்டை வைத்து விளையாடி டவுசர் பைக்குள் சேர்த்த பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்துள்ளேன். வகுப்பு முடியும் வரை என் டவுசர் ஒரு பக்கமாகத் தொங்கிக் கொண்டேயிருக்கும். உள்ளே உள்ள புளியங்கொட்டை தந்த சலசலப்புச் சத்தம் தான் உடன் படித்த பலரின் பொறாமையை உருவாக்கியும் இருக்கிறது.

மகிழம்பூ மரத்தின் எதிர் புறம் ஒரு கேணியும் அதனை ஓட்டிய பின்புற சந்தும் உண்டு. இந்தச் சந்தின் உள்ளே நுழைந்தால் பள்ளியின் பின்புறத்திற்கு நம்மால் சென்றுவிட முடியும்.. பின்னால் தான் சத்துணவுக்கூடம். இதனை ஒட்டி தொடங்குவது தான் விளையாட்டு மைதானம். அதனைத் தாண்டி பக்கவாட்டுப் பக்கம் வந்தால் பெரிய கால்வாயும் அதனை ஒட்டிய கொக்குமரம் இருந்த மற்றொரு தோட்ட வீட்டின் எல்லைப்புறமும் தொடங்கும்.

என் வீடு அருகில் இருந்த காரணத்தால் பள்ளியில் போடப்படும் மதிய உணவை ஒரு நாள் கூட நான் சாப்பிட்டதில்லை. ஆனால் கோதுமையை அளக்க, மூட்டையை நகர்த்துபவர்களுக்கு உதவ என்று வகுப்புறைக்குச் செல்லாமல் பாத்திரங்களுடன் உருண்டு புரண்டதுண்டு. மூட்டையிலிருந்து எடுத்து சாப்பிடும் அந்தக் கோதுமையே எனக்குப் போதுமானதாக இருந்தது. பின்புறம் உள்ள சமையல் பகுதியில் வெந்த கோதுமையைச் சுவைத்துப் பார்த்ததும், சூடு பொறுக்காமல் கதறியதும் இப்போது நினைவுக்கு வருகின்றது.

இது மறந்து போன இறந்தகாலம். ஆனால் அதுதான் இன்றைய என் வாழ்க்கையின் அஸ்திவாரம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book