26 25. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்

“வீடு ரொம்ப நல்லா இருக்குடா” என்றார்.

அம்மா முதல் முறையாக வீட்டுக்கு வந்த போது சொன்ன வார்த்தைகளை விட அவரைத் திருப்பூருக்கு அழைத்து வந்ததே பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது. புதிய கார் எடுத்த ஒரு மாதத்தில் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன். ஊரிலிருந்து ஆறு மணி நேர பயணத்தில் வீட்டில் கொண்டு வந்து நிறுத்திய போது பயந்தபடி அவரின் கால் வீங்கவில்லை. காருக்குள் அளவாக வைத்திருந்த குளிர்சாதன வசதியால் பயண அலுப்பு கூட அம்மாவுக்குத் தெரியவில்லை.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தவர் “கார் நல்லா ஓட்டுறாண்டி” என்று மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது. நிச்சயம் சில மாதங்கள் இங்கே இருப்பார் என்றே நம்பினேன்?.

அம்மா வந்த போது குழந்தைகள் பாலர் பள்ளியை முடித்திருந்தார்கள். வீட்டுக்குள் சுவற்றுக்குள் மாட்டியிருந்த பலவிதமான அட்டைகளை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எண்கள், எழுத்துக்கள், படங்கள் எனக் குழந்தைகளின் கல்வி ஆர்வத்தை வளர்க்க ஒவ்வொன்றாக வாங்கி மாட்டி வைத்திருந்தேன்.

பலவிதமான கல்வி சார்ந்த பொம்மைகள் வீடு முழுக்க இருந்தன. ஆர்வமாய் ஒவ்வொன்றையும் பார்த்தவர், “இப்படியெல்லாம் தான் நீங்க படிச்சீங்களா?” என்று கேட்டு சிரித்தார்.

இது தவிர அவர்களின் கல்விக்கென வேறெந்த பெரிதான முயற்சியையும் செய்யவில்லை. அதிகாலைப் பொழுதில் குளிக்க உதவும் போது அவர்களுடன் பேசுவதைத் தவிர வேறெந்த சமயமும் வாய்ப்பதில்லை. பள்ளி முடியும் சமயத்தில் அவசரமாகச் சென்று அழைத்து வீட்டில் விடுவதோடு என் கடமை முடிந்து விடும்

அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்குள் நுழையும் பொழுது தூங்கிக் கொண்டிருப்பார்கள். எனக்கும் குழந்தைகளுக்கும் உண்டான உறவும், உரையாடலும் மிகக் குறைவாகவே இருந்தது. இதன் விபரீதம் அம்மா வந்த பொழுது, அவர் குழந்தைகளுடன் உரையாடும் சமயங்களில் தான் எனக்கு முழுமையாகப் புரிந்தது.

அம்மாவின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர் காசி பயணத்தைத் தவிர வெளியுலகத்தைப் பார்த்த தருணங்கள் மிக மிகக் குறைவு. மிகப் பெரிய கூட்டுக்குடித்தனத்தின் அச்சாணியே அவர் தான். நாள் முழுக்க உழைப்பு. அந்த உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரமாக இருந்தது. அவர் உடம்பும் எண்ணமும் உழைப்பதற்கென்றே மாறிப் போன காரணத்தால் பக்கத்து ஊர்கள் குறித்துக் கூடத் தெரிந்து கொள்ள ஆர்வமின்றி நாற்பதாண்டு காலத்தைக் கழித்தவர்.

அவருக்கும் பயணம் என்றால் பயம் பிடிக்கும் சமாச்சாரம். கனத்த உடம்பு படுத்தி எடுப்பதால் ஆசைகள் இருந்தாலும் அவரின் உடம்பு ஒத்துழைப்பதில்லை.

வெளியுலகம் என்பதே அப்பாவின் மறைவுக்குப் பிறகே அவருக்கு வாய்த்த காரணத்தால் ஒரு படபடப்பு அவருக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.

சாலையில் படபடக்கும் வாகனங்கள் கூட அவருக்குப் பயத்தைத் தருகின்ற சூழ்நிலையில் வாழ்ந்த காரணத்தால் கவனமாகக் காரில் அழைத்து வந்தேன். ஒருவரின் மாற்ற முடியாத விசயங்களை அப்படியே மாற்றாமல் நாம் ஏற்றுக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தானே. ஆனால் அம்மாவிடம் மாறாத கொள்கை ஒன்று உண்டு.

“பெண்ணாய்ப் பிறக்கக்கூடாது. பெண் குழந்தைகள் என்றால் ஆகாது”. காரணம் அவரின் துயரக்கதை சீனப் பெருஞ்சுவற்றை நீளமானது உயரமானதும் கூட.

கஷ்டப்படுவதற்கென்று பிறப்பெடுப்பவர்கள் பெண்கள் என்ற கொள்கையை இன்று வரையிலும் அவர் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

நான் இதனை உணர்ந்திருந்த போதிலும் பேத்திகளை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று நினைத்தே அழைத்து வந்தேன். குழந்தைகள் பிறந்த போது பார்த்த முகத்தைப் பல வருடங்கள் கழித்துப் பார்த்த போது குழந்தைகளின் தோற்றத்தில் சொக்கிப் போனார். புது முகத்தைப் பார்த்த இருவர் விலகி நின்ற போது ஒருவர் மட்டும் எளிதாக ஒட்டிக் கொள்ள, தொடர்ந்து வந்த நாட்களில் அவர்களும் ஒன்றிப்போக இயல்பாகத்தான் போனது.

பல சமயம் விடுமுறை தினங்களில் பாட்டி பேத்திகளின் உரையாடல்களைப் பார்க்கின்ற வாய்ப்புக் கிடைத்தாலும் அலுவலகச் சுமையின் காரணமாக வீட்டில் இருக்க வாய்ப்புகள் அமையாது. அந்தப் பெரிய வீட்டின் மற்ற இடங்களையும் விட வாசலில் அமர்ந்திருப்பதே அம்மாவுக்குப் பிடிக்கும்.

வீட்டுக்கு வெளியே இருந்த பெரிய வேப்ப மரக் காற்றின் சுகமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. வாசலின் குறுக்கே காலை நீட்டிக் கொண்டு வெற்றிலைப் பையைப் பிரித்து வைத்துக் கொண்டு மெல்லுவதும் எச்சிலை அருகே உள்ளே தோட்டத்து மண்ணில் துப்பிக்கொண்டிருப்பதும், தெருவில் செல்லும் ஆட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அன்றாட வாடிக்கையாக இருந்தது.

இங்கே இருந்து தான் பிரச்சனை தொடங்கியது.

உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும் குழ்ந்தைகள் கத்திக் கொண்டே வாசலை நோக்கி ஓடி வர, விரட்டிக் கொண்டே வருபவர் வெளிப்புற சந்தின் வழியே வாசலுக்கு வர காலை நீட்டிக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு ஒவ்வொரு முறையும் காலை மடக்குவதும், மீண்டும் நீட்டுவதுமெனப் புதிய வேலையை உருவாக்கத் தொடங்கினர்.

முட்டி வலியும், முதுகு வலியையும் நிரந்தரமாக இருந்தவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எரிச்சலை உருவாக்கினாலும் அவரால் வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார மனமில்லாது கத்தத் தொடங்கினார். இதற்கு மேலாக அவருக்குப் பேச்சுத் துணைக்கு ஆட்கள் இல்லை.

பக்கத்து வீடுகளில் இருந்தவர்களின் நாகரிக பேச்சும், கொங்கு பாஷையும் வினோதமாகத் தெரிய அதையும் விரும்பாமல் வானத்தை வெறிக்கத் தொடங்கினார்.

நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி என்பதைப் போல அறுபது வயதை மீண்டும் குழந்தையாக மாறும் தருணம் என்கிறார்கள். விதிவிலக்குகளைத் தவிர்த்து நாற்பது வயதிற்குள் தனக்கான இடத்தை அடையாதவர்களின் வாழ்க்கையென்பது இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அலைவதை குறைத்துக் கொள்ள முடியாமல் அவஸ்த்தைகளின் தொடக்கம் ஆரம்பித்து விடுகின்றது. உடல் ஆரோக்கியத்தின் சவாலும் இந்த வயதிலிருந்தே தொடங்குகின்றது.

இதுவே அறுபது வயதில் கண் பார்வை குறைந்து, செவிப்புலன் திறன் இழந்து எரிச்சலையும் ஏக்கத்தையும் இயல்பான குணமாக மாற்றி விடுகின்றது.

இயல்பான விசயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் பொழுது எரிச்சல் உருவாகும். மனஉளைச்சல் அதிகமாகும். தலைமுறை இடைவெளி பூதாகரமாக உருவாகும். இந்த வயதில் தான் ருசியை மட்டுமே உணவாக வைத்து வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வாய்க்கும் வயிற்றுக்கும் மிகப் பெரிய போராட்டமே தொடங்குகின்றது. ருசி தான் வேண்டும் என்ற மனமும் இதெல்லாம் இனி ஆகாது என்று வயிறும் சண்டை போட வாழ்வே நரகமாக மாற வாரிசுகள் மீதுள்ள அன்பு கூடப் பலசமயம் மாறிவிடுகின்றது.

சிலர் பழக்கத்தினால் தங்களை மாற்றிக் கொண்டு விடுகின்றார்கள். பலர் தங்கள் வாழ்க்கையைக் கழிவிரக்கமாக மாற்றி வைத்துக் கொண்டு உடனிருப்பவர்களைப் படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். இதற்கு மேலாக வயதானவர்களுடன் உரையாடும் தொடர்பு மொழி முக்கியமானது. அவர்களுக்குப் பிடித்த அவர்கள் விரும்பும் நிலையில் இருந்து பொறுமையுடன் உரையாட வேண்டும். பலராலும் இது முடிவதில்லை.

ஒரு சமயம் “அப்பத்தா இதைக் கேளுங்க” என்று மகள் அட்டையை எடுத்துக் கொண்டு அவர் அருகே சென்ற போது அம்மாவின் விலகல் என்னைக் கூர்மையாகக் கவனிக்க வைத்தது. மனைவியிடம் கேட்ட போது “இவங்க பேசுறது அவங்களுக்குப் புரியலையாம்” என்றார்.

எங்கேயிருந்து இந்தக் குழப்பம்? என்று ஆராயத் தொடங்கினேன்.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்றார்களே தவிர அவர்களின் கல்வி குறித்தோ, அவர்களின் மற்றச் செயல்பாடுகள் குறித்தோ அதிகம் கவலைப்பட்டுக் கொண்டதில்லை. குறிப்பாகத் தனித்தீவாக ஒதுங்கி போனதால் உறவுகள் கூட வருடத்துக்கு ஒரு முறை என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் வீடே வாழ்க்கை பள்ளிக்கூடமே உலகம் என்பதாக வளர்ந்து கொண்டிருந்தார்கள்

தமிழை ஆங்கிலத்திற்கு இடையே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். பள்ளி கொடுத்திருந்த கல்விச்சூழல் அவர்களை அப்படி மாற்றியிருந்தது. புதிய மொழியும் அவர்களின் பழக்க வழக்கங்களும் அம்மாவிற்கு அதிகக் குழப்பத்தை உருவாக்கியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

எல்லாமே சின்னச் சின்ன விசயங்கள் தான். அதுவே ஒவ்வொரு முறையும் வினோதமான பிரச்சனைகளை உருவாக்கியது. இன்று உள்ளூரில் வேலைவாய்ப்புகள் குறைந்து மாவட்டங்கள்,. மாநிலங்கள் தாண்டி பல்வேறு நாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில் உறவுகளுக்குண்டான மரியாதை என்பது தற்போது சில நிமிட தொலைபேசி அழைப்புகள் தான் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

இந்தத் தொடர்பில் தொடர்பு மொழியே பிரச்சனை எனில் அங்கே அந்தச் சங்கிலியும் அறுபடத் தொடங்குகின்றது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மொழித் தொடர்பு பிரச்சனை என்றால் தற்போது இங்கே உள்ள கல்விச்சூழல் என்பது வினோத கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருப்பதால் மொழியின் தன்மை மாறிக் கொண்டேயிருக்கின்றது.

குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிறுநீர் கழிக்கும் அவசரத்தில் “அப்பத்தா ஒன் பாத் ரூம்” என்று கத்திக் கொண்டே ஒடிவர இவர் குழப்பத்துடன் என்னவென்று அறியாமல் வாசலுக்கு அருகே படுத்து இருப்பார். எந்திரிக்காமலே தலையைத் தூக்கிப் பார்ப்பார். கவுனை தூக்கிக் கொண்டு அவர்கள் வரும் வேகத்தைப் பார்த்து வேகமாக எந்திரிக்க, வந்த வேகத்தில் ஒருவருடன் ஒருவர் முட்டிக் கொள்ள ரசபாசமாகத் காட்சிகள் மாறிவிடும்.

பொழுது போகாத சமயத்தில் குழந்தைகளை அழைத்துப் பேசத் தொடங்குவார்.

அவர் கேட்கும் கேள்விக்கு இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் சொல்லும் பதில்கள் அவருக்குப் புரியாது. ராஜா கதை சொல்லும் போது குறுக்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் குறுக்குக் கேள்விகள் எழுப்ப அவருக்குக் குழப்பம் வந்துவிடும்.

அவர் ஒதுங்கி விடுவார். கடைசியாக இவர்கள் நாங்க உங்களுக்கு ரைம்ஸ் சொல்லட்டுமா? என்பார்கள். பேந்த பேந்த முழித்துக் கொண்டு கேட்பார். மொழி புரியாது. சுவராசியம் இருக்காது.

“ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா” என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும். இரண்டு மாதம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு வந்தவர் ஒரு மாதத்தில் சென்று விட்டார்.

மனைவி மூலம் விசயங்களைப் புரிந்து கொண்டு உறவுச்சங்கிலிகள் உடையும் விதங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். அதற்கான பதில் அம்மாவை கொண்டு போய் விட்ட தம்பி வீட்டில் எனக்குக் கிடைத்தது.

அம்மாவிடம் தம்பி மகன் வேகமாக வந்து “ஏய் கிழவி கீழே படு” என்றான்.

அம்மா டக்கென்று மல்லாக்க படுக்க நெஞ்சில் ஏறி தொம் தொம்ன்று குதிக்க எனக்குப் பாதி உயிர் வாயில் வந்து நின்று விட்டது. அம்மா சிரித்துக் கொண்டே “இருடா குப்புற படுக்குறேன்” என்று சொல்லிவிட அவன் ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

கால்வலி, முதுகுவலி, பயணஅலுப்பு மீறி அவரின் நெருக்கமும், பேரனின் வார்த்தைகளும் அவருக்குப் புதிய உற்சாகத்தைத் தந்ததைக் கவனித்துக் கொண்டே அவர்களின் உரையாடலை கவனித்த போது சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூட நண்பனுடன் பேசியது

அப்போது என் நினைவில் வந்து போனது. நண்பனின் அண்ணன் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று இருக்கின்றார்.

தொடக்கத்தில் ஊருக்கு வருடத்திற்கொருமுறை வந்து கொண்டிருந்தார். கடந்த சிலவருடங்களாக வருவதில்லை. அவனைச் சந்ததித்த போது “அண்ணன் வீட்டுக்கு வருவதில்லையா?” என்று கேட்டேன்.

“அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்றான்.

காரணம் பேரனுக்கும் பேத்திக்கும் தாத்தா பாட்டியுடன் உரையாட தமிழ் தெரியவில்லை. இவர்களுக்கு அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.