25 24. சிக்கினாலும் கூட நாம் சிங்கம் தானே?

வளர்ந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் அருகில் தான் உள்ளது. நாம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அடுத்தப் பத்தாண்டுகள் கழிந்தும் இதையே தான் சொல்லப் போகின்றோம். மற்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிட்டு பேசும் போது அனைவரும் ஒரு பதிலை தயாராக வைத்திருப்பார்கள்.

சிறிய நாடுகள் எளிதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து விட முடியும். நாம் பெரிய நாடு. நமக்கு அப்படி வாய்ப்பில்லை என்பதாக முடித்து விடுகின்றோம். ஆனால் கடந்த முப்பதாண்டு காலத்தில் சீனா வளர்ந்த வளர்ச்சியை நாம் எட்டுவதற்கு இன்னும் 60 ஆண்டுகள் தேவைப்படும். வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள முக்கியப் பிரச்சனை என்ன தெரியுமா? துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு.

இந்தியாவில் உள்ள அரசாங்கத்துறைகள் ஒவ்வொன்றும் இன்று வரையிலும் தனித்தனி தீவுகளாகத்தான் உள்ளது. இதுவே வெளிப்படையற்றத் தன்மையைக் கெட்டியாகப் பாதுகாத்து மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடைவெளியை அதிகப்படுத்தி வைத்துள்ளது.

இந்தியாவில் கல்வி என்றால் அதுவொரு தனித்தீவு. அதற்குள்ளும் பல பிரிவுகள்.

பாடத்திட்டங்களை உருவாக்குவது, அதற்கு அனுமதி வழங்குவது என்பது இரு வேறு நிலையில் தான் உள்ளது.

தமிழ்நாட்டின் பூகோள அமைப்பைப் பற்றித் தெரியாதவர் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தை வடிவமைப்பவராக இருப்பார். மாநில சமூகவியல், அந்தந்த மாநில கலாச்சாரத்தைப் பற்றியே தெரியாதவர்கள் உருவாக்குவது தான் நம்முடைய கல்வித் திட்டங்கள் என்றால் எப்படியிருக்கும்?

நாம் இந்தியக்கல்வியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஏன் இந்த ஒருங்கிணைப்பை பற்றிப் பேச வேண்டும்?. கல்விக்கூடம் ஒரு இடத்தில் உருவாகின்றது என்றால் அரசாங்கத்தின் எத்தனை துறைகள் அத்துடன் சம்மந்தப்படுகின்றது ?

1 பள்ளி கட்டப்படத் தேர்ந்தெடுத்த இடம் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான அளவுக்கு இருக்கின்றதா?

2. கட்டப்பட்ட கட்டிடம் நிலைத்த உறுதித்தன்மையோடு இருக்கின்றதா?

3. வகுப்பறைகள் குறிப்பிட்ட அளவில் இருக்கின்றதா?

4. குழந்தைகள் விளையாட மைதானம் இருக்கின்றதா?

5. அவசர கால வழிகள் சரியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதா?

6. மாடிப்படிகள் குழந்தைகள் ஏறிச்செல்ல வலுவான முறையில் சரியான அளவில் உருவாக்கப்பட்டுள்ளதா?

7.பள்ளிக்கருகே மாசுக்களை விளைவிக்கும் தொழிற்சாலைகள் ஏதும் உள்ளதா?

8.கல்விக்கூடங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் சரியாக உள்ளதா? முறைப்படி பராமரிக்கப்படுகின்றதா?

9கல்விக்கட்டணங்கள் அரசாங்கம் நிர்ணயித்த அளவின்படியே பள்ளியால் வாங்கப்படுகின்றதா?

10. நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் தான் நடத்தப்படுகின்றதா?

இது போன்ற பல சமாச்சாரங்கள் உள்ளது.

இதில் என்.ஓ.சி. என்று சொல்லப்படுகின்ற தடையில்லாச் சான்று என்ற பல படிகளைக் கடந்து வர வேண்டும். அரசாங்கத்தின் பல துறைகள் ஒவ்வொரு இடத்திலும் சம்மந்தபபடுகின்றது.

தமிழ்நாட்டில் கும்பகோணம் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகியது முதல் நேற்று உங்கள் ஊரில் நடந்த பள்ளி வாகனத்தினால் நடந்த கொடுமைகள் வரைக்கும் ஒவ்வொன்றாக உங்கள் மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.

எப்படிக் குற்றவாளிகள் தப்பித்தார்கள்? துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் குற்றத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் மேலும் பள்ளிகளைத் திறந்து கல்வித்தந்தையாகச் சமூகத்தில் நடமாட முடிகின்றது. இங்கே சட்டத்திற்கும் சாமானியனுக்கும் உள்ள தூரம் அதிகமாக இருப்பதால் போராட முடியாதவர்கள் தங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர்.

அவர்வர் வாழ்க்கை குறித்த பயமே இங்கே பலரையும் பலவிதமான அக்கிரமத்தையும் தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மேலாக அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பலருக்கும் அசாத்தியமான தைரியத்தைத் தந்து விடுகின்றது. தமிழ்நாட்டின் கல்வித்துறை ஒவ்வொரு முறையும் தனியார் கல்விக்கூடங்களில் செய்யும் சோதனைகளை அரசு பள்ளிகளில் செய்கின்றார்களா?

அது வருடந்தோறும் நடத்தப்படும் சடங்காகவே இன்று வரையிலும் உள்ளது. அரசு பள்ளியின் வளர்ச்சி வீழ்ச்சி குறித்த வெள்ளையறிக்கை ஏதும் வெளியிட்டு பார்த்துள்ளோமா? இதன் காரணமாகத்தான் பலரும் தெரிந்தே தனியார் கல்வி என்ற குழிக்குள் விழ வேண்டியுள்ளது.

குறிப்பிட்ட பள்ளியில் தங்கள் குழந்தைகக்கு இடம் கிடைத்து விடாதா? என்று ஏக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் அந்தப் பள்ளியின் கட்டுமானத்தைப் பற்றியோ தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் குறித்தோ யோசிப்பதில்லை. பள்ளி வாங்கும் கட்டணத்திற்கும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்திற்கும் பின்னால் உள்ள நுண்ணரசியலை எவரும் புரிந்து கொள்வதே இல்லை.

ஒட்டப்பட்ட லேபிளுக்குள் வைக்கப்பட்ட அழுகிய பண்டத்தினைச் சுவைக்கும் போது உண்டான அருவெறுப்பு தான் இங்கே உருவாகின்றது. பள்ளியின் பெயருக்கும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் தரத்திற்கும் சம்மந்தமில்லாது போக என்ன உருவாகும்?

வாந்தி எடுப்பவர் வாத்தியார். அதை வேடிக்கை பார்ப்பவர் மாணவர். இது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

இது தவிர இங்கே மற்றொரு விசயமும் பேசு பொருளாக வைக்கப்படுகின்றது.

கடந்த 20 ஆண்டுகளில் ஆங்கிலம் தெரிந்த காரணத்தினால் மட்டுமே இங்கே பலருக்கும் வேலை கிடைத்துள்ளது. பொருளாதார ரீதியாகத் தடுமாறிக் கொண்டிருந்த நடுத்தரவர்க்கம் இப்போது தான் சற்று மூச்சு விட முடிகின்றது. தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு தங்கள் குழந்தைகளை மட்டும் ஆங்கில வழியில் படிக்க வைத்து விட்டு நமக்கு அறிவுரையை வண்டி வண்டியாக வழங்க வந்து விடுகின்றார்கள்?

தமிழ் வழிக்கல்வியை ஆதரிப்பவர்கள் எவரோனும் தங்கள் குழந்தைகளைத் தமிழ் வழிக்கல்வியில் படிக்க வைத்து விட்டு அதன்பிறகு அறிவுரை சொல்ல வரட்டும்? இது போல இன்னமும் பலப்பல விசயங்கள் தாய் மொழி குறித்துப் பேசும் போது நம்மை வந்து தாக்கும்.

இன்றைய போட்டி மிகுந்த வாழ்க்கை சூழ்நிலையில் ஒருவரிடம் உனக்கு மொழி முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என்று கேட்டால் எவராயினும் வாழ்க்கையே முக்கியம் என்று சொல்வர்.

பொருளாதார ரீதியாக எந்த மொழி வாழ்க்கையில் உயர் உதவுகின்றதோ அந்த மொழியே தேவை என்பதாக ஒரு காலகட்டத்தில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இன்றைய நடுத்தரவர்க்கம் நம்பிக் கொண்டிருக்கும் ஆங்கிலக்கல்வி என்பது படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தைத் தந்து விடுமா? மொழிக்கும் அறிவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை உணரத் வாய்ப்பில்லாத நடுத்தர வர்க்கத்தின் பல்லாயிரக்கணக்கான கோடிகள் வருடந்தோறும் கல்வி வியாபாரிகளிடம் கள்ளப்பணமாக மாற்ற உதவிக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஆங்கிலம் என்பது தேவை என்பதை மறுக்கமுடியாது என்பதைப் போல அதுவே அருமருந்து என்பது ஒரு மாயத்தோற்றமே.

காரணம் ஆசைப்பட்டு ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து விட்டு, தங்களது தகுதிக்கு மீறிய பணத்தை வருடந்தோறும் கட்டி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து ஒவ்வொரு நாளும் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் வேறு சில விசயங்களையும் அவசியம் புரிந்து இருக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகள் படிக்கும் கல்வியின் தரத்தைப் போல இதற்கும் மேம்பட்ட தரத்தில் பல கல்வித்திட்டங்கள் இங்கே உண்டு என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இதில் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வருடந்தோறும் படித்து மேலேறி சென்று கொண்டிருக்கின்றனர். பல படிகளுக்குப் பின்னால் தான் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எவரும் உணரத் தயாராக இல்லை என்பதோடு தங்களது அழுத்தங்களைத் தங்கள் குழந்தைகளின் மேல் திணித்துக் கொண்டிருப்பது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. சிலவற்றைப் பார்க்கலாம்.

மத்திய அரசாங்கத்தின் கீழே வரும் பள்ளிகள்

Kendrya Vidyalaya Sangathan (KVS),

Navodaya Vidyalaya Samiti (NVS),

Central Tibetan Schools Organisation (CTSO),

Sainik Schools Society

C.B.S.E. CENTRAL BOARD OF SECONDARY EDUCATION

ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

கேந்திரியா வித்தியாலயா பள்ளிகளைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மத்திய அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பள்ளிகள். குறிப்பிட்ட பெருநகரங்களில் மட்டுமே உள்ளது. இந்தியா முழுக்க எங்கே வேண்டுமானாலும் மாறுதல் ஆகக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது.

சற்று விபரம் தெரிந்தவர்கள் சைனிக் பள்ளிக்கூடங்கள் பற்றிக் கூடத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ஆனால் நவோதயா என்பது தமிழ்நாட்டிற்குள் வர விடாமல் செய்த புண்ணியம் நமது அரசியல் தலைகளுக்கே போய்ச் சேர வேண்டும். தமிழ் அழிந்து விடும் என்ற நல்லெண்ணத்தில் எடுத்த முடிவாம். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள்.

அதே போலத் திபெத் அகதி என்ற சொல்லை வைத்துக் கொண்டு இந்தியர்களின் வரிப்பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் திபெத் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட கல்விக்கூடங்கள். இவை அனைத்தும் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படுவது. இந்தச் சமயத்தில் இலங்கையில் இருந்து வந்து இங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை நினைக்கத் தோன்றுகின்றது.

மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கல்விக்கூடங்கள் அனைத்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படியே பாடங்கள் நடத்தப்படுகின்றது. அனைத்துப் பாடங்களும் ஆங்கிலவழிக்கல்வி என்ற போதிலும் ஹிந்தி என்பது முக்கியமான பாடமாக உள்ளது. இந்தப் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டிற்குள் இருந்தாலும் அங்கே தமிழுக்கு வேலையில்லை.

மாநில அரசாங்கத்தின் கீழ்

Tamil Nadu Matriculation Board

தனியார் கல்வி நிறுவனங்கள் மூலமே நடத்தப்படுகின்றது. தொடக்கம் முதலே அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி இருந்த போதிலும் அது பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. அது குறித்த புரிதலும் பெரும்பாலான பெற்றோருக்கும் இருக்கவில்லை என்பதும் உண்மையே. தற்போதைய மாறிய சூழலில்தான் இந்த ஆங்கில மோகம் என்பது டைனோசார் மிருகம் போலப் பிரமாண்டமாய் எழுந்து நிற்கின்றது.

மக்களின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்கின்றோம் என்ற நோக்கத்தில் 2013 ஆம் ஆண்டுக் கல்வியாண்டில் அதிமுக அரசும் அரசுபள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வந்துள்ளது.

Tamil Nadu State Board

தமிழ்நாடு அரசாங்கத்தின் தமிழ்வழி அரசு பள்ளிக்கூடங்கள்.

மேலே நாம் பார்த்த அத்தனை பள்ளிக்கூடங்களைத் தவிர்த்த இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான சர்வதேச பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதன் பாடத்திட்டம் என்பது ICSE and IICS/ Cambridge International Certificate of Education (ICE) இதைத்தான் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்கிறார்கள். பலருக்கும் தெரிவதில்லை.

சர்வதேச பாடத்திட்டங்கள் அடங்கிய ரெசிடன்ட் ஸ்கூல்.

இங்கே ஒவ்வொரு நாடும் அதன் பெயரில் நடத்துக்கின்றார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிரபல தொழில் அதிபர்கள் தனியாக நடத்துகின்றார்கள். இந்திய கல்வித்திட்டத்தில் ஒரு மாணவர் படிக்கும் எந்தப் பாடத்திட்டத்தையும் எந்த மேலைநாடுகளும் ஏற்றுக் கொள்வதில்லை.

தகுதியான நபர்கள் என்ற போதிலும் குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கென உள்ள சிறப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கே செல்ல முடியும். ஆனால் சர்வதேச பள்ளிகளில் இயல்பாகவே குறிப்பிட்ட மேலைநாட்டுக் கல்வித்திட்டத்தில் பாடங்கள் நடத்துவதாலும், மேலைநாடுகள் போலவே செயல்வழிக்கல்வி திட்டத்தின்படி மாணவர்களை உருவாக்க அவர்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

மேலைநாட்டு கல்லூரி பாடத்திட்டம் என்பது பள்ளி அளவில் குறைவாகக் கல்லூரி அளவில் மிக விரிவாக என்று படிப்படியான வளர்ச்சியில் கல்வி முறை இருக்கும். ஆனால் நமது கல்வித்திட்டம் என்பது தலைகீழானது. பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் சுமத்தப்பட்ட அழுத்தத்தில் மாணவர்களின் சிந்தனைகளைக் கிழடு தட்ட வைப்பது.

இதைப் போலவே மத்திய அரசாங்கத்தின் நேரிடையான கண்காணிப்பில் உள்ள பள்ளிகளில் தகுதியான சூழ்நிலையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும்.

ஆனால் தனியார்கள் நடந்தும் ஆங்கிலவழிக்கல்வியில் வருடத்திற்கு ஒருவர் என்கிற ரீதியில் ஒவ்வொரு ஆசிரியர்களும் பல்வேறு காரணங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் வரும் ஆசிரியர்களும் பாடம் புரிவதில்லை. படிக்கும் மாணவர்கள் குறித்து நிர்வாகம் கவலைப்படுவதும் இல்லை.

ஆங்கிலவழிக்கல்வியே சிறந்தது என்ற வாதத்தை முன் வைப்பவர்கள் ஒரு முக்கிய உண்மையைப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள 70 சதவிகித பள்ளிகளில் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் இயல்பான தமிழ்வழிக்கல்வியில் படித்து வந்தவர்களே. எவரும் தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல.

சில கல்விக்கூடங்கள் மட்டுமே ஆங்கிலோ இந்தியன் ஆசிரியர்களை வைத்துப் பாடம் கற்பிக்கின்றார்கள். மற்றபடி ஆங்கிலத்தை ஒரு மொழியாக நினைக்காமல் அறிவாக நினைத்துக் கற்பித்துக் கொண்டுருப்பவர்களிடம் தான் நம் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கூலிக்கேத்த ஆசிரியர்கள் மூலம் தான் நமது குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் பல பள்ளிகளில் பெயர் பிரபல்யம் என்கிற ரீதியில் தான் கைநிறைய காசு கொண்டு வாங்க. உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு நாங்கள் பொறுப்பு என்று கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நடத்தும் ஆசிரியர்களுக்கே புரியாத பாடத்தைப் போலவே இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட கல்வித் திட்டங்களும் வெகுஜனம் அறியாதது.

சாதாரண மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களிடம் பணம் பறிக்க என்ற நோக்கத்தில் அவசர கோலத்தில் கொண்டு வரும் சிபிஎஸ்சி பாட வகுப்புகள் என்பது கூட்டத்தில் சேர்ந்து கும்மியடி என்கிற கதை தான். சராசரி மாணவர்கள் ஏணி வைத்து ஏறும் நிலையில் இருப்பவர். ஆனால் சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒரே முயற்சியில் சென்று கொண்டு இருப்பார்கள். இது தான் எதார்த்தம்.

இந்தியாவில் உள்ள பெரு நகரங்கள். தமிழ்நாட்டில் சென்னை, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களைத்தவிர அருகே பெங்களூரில் அதிக அளவில் இண்டர்நேஷனல் பள்ளிக்கூடங்கள் உள்ளது.

தொடக்கத்தில் கிறிஸ்துவ மிஷினரிகள் இது போன்ற பல பள்ளிகளை இங்கே நடத்த தொடங்கினர். ஆனால் இன்று சர்வதேச உறைவிடப் பள்ளிகள் என்ற பெயரில் கடந்த ஐந்தாண்டுகளில் பல இடங்களில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. தற்பொழுது கல்விச் சந்தையில் கிராக்கி என்பது இந்தச் சர்வதேச பள்ளிகளுக்கு மட்டுமே.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் இரண்டு பையன்களும் பெங்களூரில் ஜெயின் சமூகம் நடத்தும் சர்வதேச பள்ளியில் படிக்கின்றார்கள். வருடத்திற்கு உத்தேசமாக ஒருவருக்கு எல்லாவற்றையும் சேர்த்து 12 லட்சம் செலவு செய்து கொண்டிருக்கின்றேன் என்றார்.

“என்ன சிறப்பு” என்று கேட்டேன்?

அந்தப் பள்ளியின் முதலாளி எப்போதும் பெற்றோர்களிடம் சொல்லும் வாசகத்தை நண்பர் என்னிடம் சொன்னார்.

“எனது பள்ளியில் படிப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் அல்ல. வேலைகளை உருவாக்கி நூற்றுக்கணக்கான பேர்களுக்கு வேலையைக் கொடுக்கக்கூடிய ஆற்றலை உருவாக்கும் அளவுக்கு ஒரு மாணவனைத் தயார் படுத்துகின்றோம். ஒரு வட்டத்திற்குள் வாழ வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களும் தேவையில்லை. அது போன்ற குறுகிய எண்ணம் கொண்ட மாணவர்களையும் நாங்கள் உருவாக்க விரும்பவில்லை” என்றாராம்.

இது போன்ற பள்ளிகளில் படித்து வருபவர்கள் தொழில் நிறுவனங்களை உருவாக்குகின்றார்களோ இல்லையோ நிச்சயம் பொருளாதார ரீதியான உயர்வான நிலைக்குச் செல்லக்கூடிய அத்தனை சாத்தியக்கூறுகளும் இவர்களுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.

மேலும் இதிலும் ஒரு பிரச்சனை உண்டு. மேலைநாட்டுக் கல்வித்திட்டத்தில் படித்து வெளியே வருபவர்கள் இந்தியச் சூழல் சார்ந்த நிறுவனங்களில் ஜெயித்து வர முடியுமா? காரணம் வெளிநாட்டு நிர்வாகத்தைச் சார்ந்த விசயங்களைக் கரைத்துக் குடித்து வெளியே வருபவர்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகளைக் கையாள முடியுமா? என்று கேட்ட போது உடனடியாகப் பதில் வந்து விழுந்தது.

“இந்தியாவில் இருப்பதற்காகவா இத்தனை செலவு செய்கின்றேன்?” என்றார்.

முறைப்படுத்தப்பட்ட சர்வதேச பள்ளிகள் கல்வியை அதன் தரத்தை அளவுகோலாக வைத்து தான் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

இங்கே இட ஒதுக்கீடு, சாதி மதம் போன்ற எந்தப் பஞ்சாயத்தும் எடுபடாது. பணம் இருந்தால் போதுமானது.

அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபல்யங்கள், அதிகாரவர்க்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பெரும் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கின்றனர். இங்கும் மாநில மொழிகளுக்கு வேலை இல்லை. நடுத்தரவர்க்கத்தினரும், நடுத்தரவர்க்கத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் இது போன்ற பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பணம் கட்ட முடியாமல் சிபிஎஸ்சி அல்லது மெட்ரிக் பள்ளிகளுக்கு மாற்றியுள்ளதை பலமுறை பார்த்துள்ளேன்.

இதே போலத் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு அவசரம் அவசரமாகச் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சேர்த்தவர்களும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பணம் கட்ட முடியாமல் திணறுவதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆனாலும் தினந்தோறும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் புத்திசாலி கனவுகளை விதைப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.