2

அப்பா இறந்து போகும் வரையிலும் அவர் மேலிருந்த கோபம் எனக்குத் தீரவில்லை. அவர் எந்தத் துரோகமும் எனக்குச் செய்யவில்லை. அவர் தப்பான ஆளுமில்லை. அவரிடம் வெற்றிலை போடும் பழக்கம் கூட இல்லை. அவர் வாழ்வில் கடைசி வரைக்கும் எந்தத் தப்பான பழக்கத்திற்கும் அடிமையானவருமில்லை.

மிகப் பெரிய கூட்டுக் குடித்தனத்திற்குத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் அவரின் கடைசி நாள் வரைக்கும் உழைத்துக் கொண்டே தான் இருந்தார். எங்களையும் உழைப்பின் வழியே தான் வளர்த்தார். ஆடம்பரங்களை அண்ட விடாமல் வைத்திருந்தார். தவறான பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுத்தார். தான், தன்னுடைய குடும்பம், தன்னுடைய தொழில் என்ற மிகச் சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தார். அதுவே பலமென்று கருதினார். ஊருக்குள் நாலைந்து பேர்களைத் தவிர அவர் நெருக்கம் பாராட்டியது மிகக் குறைவு. நட்பு வட்டாரம் என்று பெரிய அளவில் இல்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை. ஆனால் ஊரில் மதிப்பு மிக்கக் குடும்பம் என்ற பெயரை பெற்று இருந்தார்.

வீட்டில், வயலில், கடையில் வேலை பார்த்த வேலைக்காரர்களின் குடும்பத் தொடர்புகள் தவிர வேறு எதையும் அனாவசியமான தொடர்புகளாகக் கருதியவர். ஊரில் பேட்டை வியாபாரிகளின் சங்கத்திற்கு இரண்டு முறை தலைவராக இருந்தார். அதுவும் அவரின் இரண்டு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே மாறிப் மாறி வருவதாக இருக்கும் அந்தப் பதவியும் குறிப்பிட்ட சுற்றில் இவருக்கு வந்த காரணத்தால் ஏற்றுக் கொண்டார். பிறகு இளைஞர்களிடம் அந்தப் பதவி சென்ற போது இவர் வெளியே வந்து விட்டார். கையில் ஒரு மஞ்சள் பை என்பதைத் தனது அடையாளமாகக் கருதிக் கொண்டவர். ஒவ்வொரு காசையும் பார்த்துப் பார்த்துச் செலவு செய்யக் கற்று வைத்திருந்தவர். வாழ்வில் உயர உடல் உழைப்பே போதுமானது என்று நம்பியவர். ஆடம்பரம் என்ற வார்த்தையில் உணவைத் தவிர அத்தனை விசயங்களையும் கருதியிருந்தவர். மகள்கள் கேட்கும் போது மனம் மாறிவிடுபவர், காந்தியவாதி என்பதை விட கடைசிவரைக்கும் காங்கிரஸ்வாதியாகத்தான் இருந்தார்.

முதன் முதலாக வலைபதிவுகளில் நான் எழுதத் தொடங்கிய போது நாம் எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்த போது எப்போதும் போல அந்த மதிய வேளையில் எனக்கு என் அப்பா ஞாபகம் தான் வந்தது. ஏறக்குறைய அவர் இறந்து எட்டு வருடம் கடந்திருந்த போதிலும் அவர் உருவாக்கிய தாக்கம் இன்று வரையிலும் குறைந்தபாடில்லை. ஒழுக்கம் தான் முக்கியத் தேவை என்கிற பெயரில் மிகப் பெரிய சர்வாதிகாரத்தை எங்கள் மீது வன்முறைக்குச் சமமாகப் பிரயோகித்திருந்தார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் சொல்லப்படும் “ம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்” என்பார்களே அதே போலத்தான். அவர் எங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தினார்.

எங்களை மட்டுமல்ல. அவரின் இரண்டு தம்பிகளையும் கட்டுப்படுத்தித் தான் வைத்திருந்தார். முன் கோபக்காரர். சொல் பேச்சுக் கேட்காத போது டக்கென்று கையை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர். அனைவரும் அவர் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தோம். அவரின் எந்தக் கட்டளைகளையும் மீறாமல் தான் வளர்ந்தோம். படித்தோம். நான் மட்டும் என்னை ஆளை விட்டால் போதும் என்று வெளியே வந்து விட்டேன். நான் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் எந்த நிலையிலும் வறுமை எதையும் பார்த்ததில்லை. அடிப்படை வசதிகளுக்கும் எந்தப் பஞ்சமில்லை. அப்பா எப்போதும் கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகளைத் தான் கொண்டாடினார். பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தூரில் அக்கா படிக்கச் சென்ற போது தயங்காமல் கல்லூரி விடுதியில் தான் சேர்த்தார். கல்லூரி அளவில் அக்கா முதல் மதிப்பெண் வாங்கிய போது எவரும் யோசித்தே பார்க்கமுடியாத நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆனால் லஞ்சம் என்பதை ஆதரிக்க மாட்டார். தேவையற்ற செலவு என்பதே எங்கும் செய்ய மாட்டார். எவரும் எதிர்பார்க்கவும் முடியாது. உறவினர்கள் மத்தியில் ராமநாதன் குடும்பம் சரஸ்வதி குடியிருக்கிற குடும்பம் என்கிற அளவிற்கு மற்றவர்களின் பார்வைக்கு அவர் குறைகளை மீறி ஒளி விளக்காய்த் தெரிந்தார்.

அப்பாவிடம் வருகின்ற எவரும் இவர் குணங்கள் தெரிந்தே தான் பேசுவார்கள். அளவாகத்தான் பேசுவார். எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார். ஆனால் எல்லாவற்றுக்கும் எதிர்மறையான குணங்கள் என்னிடம் இருக்க அதுவே எனக்கும் அவருக்கும் நாளுக்கு நாள் தூரங்கள் அதிகமாகப் போகக் காரணமாகவும் இருந்தது. கல்லூரி முடியும் வரையிலும் முழுமையாக ஒட்டவும் முடியாமல் ஓடி ஒளியவும் முடியாமல் வாழ்ந்தேன். கடைசிச் சித்தப்பா தான் என் விருப்பங்களுக்கு ஊன்று கோலாக இருந்தார். கலையார்வமோ, வேறு எந்த வித விருப்பமோ எதுவும் வீட்டுக்கு அண்டக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். அது தான் என் முக்கிய நோக்கமாக இருந்தது.

படிப்பைத் தவிர மற்ற அத்தனை விசயங்களிலும் கெட்டியாக இருந்த என்னை விரட்டி விரட்டி அடித்த போதும் வீண்வம்புகள் வீடு வரைக்கும் வருவதும் மட்டும் குறைந்தபாடில்லை. என்னை என்னால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. என்னைச் சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட நண்பர்களின் பட்டாளத்தையும் குறைக்கும் வழியும் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் தாமதமாகச் செல்லும் அந்த இரவு வேளைகளில் முன்பக்க கதவுகளைத் தாழ்போட்டுத் திறக்கக்கூடாது என்ற கட்டளையோடு காத்திருப்பார். இது தெரிந்து பின்புறம் கொல்லைப்புறம் வழியாக முள்காட்டுக்குள் கவனமாகக் கால்வைத்து ஏறி பின்பக்க கதவு வழியாக வந்து கிசுகிசுப்பாகச் சகோதரிகளை எழுப்பி உள்ளே வந்து சேரும் போது சரியாகக் காத்திருந்து அடிக்கத் தொடங்குவார். பாட்டுக் கச்சேரியுடன் பக்கவாத்தியமாக இடி மின்னல் இசைக்கும். இரவு சாப்பாடு இல்லாமல் கண்ணீர் தான் தூங்க வைத்துள்ளது.

ஆகஸ்ட் 25 2001 அன்று அவர் இறந்த போது மிகத் தாமதமாகத்தான் திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு வந்து சேர்ந்தது. சென்னையிலிருந்து பேருந்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தவருக்குத் திருச்சி பேருந்து நிலையத்தில், நெஞ்சு வலியினால் அந்த அதிகாலை வேலையில் நொடிப் பொழுதில் இறந்து போனார்.

நள்ளிரவில் போய்ச் சேர்ந்த போது அப்பாவின் சடலத்தைப் பார்த்த போது தொடக்கத்தில் எந்தச் சலனமும் மனதில் உருவாகவில்லை. இவர் சாவுக்கு நாமும் ஒரு வகையில் காரணமோ? என்று கூடத் தோன்றியது. அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த வசதியான பெண்களை எல்லாம் புறக்கணித்து ஒவ்வொன்றும் தள்ளிப் போய் என் சம்மந்தப்பட்ட விசயங்களில் ரொம்பவே வெறுத்துப் போயிருந்தார். காரணம் திருப்பூருக்குள் மிகப் போராட்டமாய் வாழ்ந்து வந்திருந்த எனக்கு அந்த வருடம் முதல் படியில் ஏறி ஒரு நிறுவனத்தின் (உற்பத்தி) தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருந்தேன். அந்த வருடம் தான் அப்பா இறந்திருந்தார்.

தொழில் வாழ்க்கையில் நான் அடைந்த தோல்விகள் ஒவ்வொன்றுக்கும் அப்பா தான் காரணம் என்று உறுதியாக நம்பியிருந்தேன். நம்மிடம் இல்லாத திறமைகள் அனைத்து அவர் கற்றுத் தராததே என்பதாக எனக்குள் உருவகத்தை உருவாக்கி வைத்திருந்தேன்.

நம்மை அடக்கி அடக்கி வைத்த காரணத்தால் பல விதங்களில் பின் தங்கியிருக்கின்றோம் என்பதாகத்தான் ஆற்றாமையில் வெம்பியிருக்கின்றேன். அவர் திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை விரிவாக்கம் செய்திருக்க முடியும். அவர் விரும்பியிருந்தால் சிலரைச் சென்று பார்த்திருந்தால் அப்பொழுதே எனக்கு அரசு வேலை கிடைத்து இருக்கும்.

ஆண் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் உன் திறமையில் வளர் என்பதாகத்தான் வெளியே அனுப்பினார். வார்த்தைகளில் தயவு தாட்சண்யம் இருக்காது. முக்கியமான விசேடங்களைத் தவிர மற்ற இடங்களுக்குத் தம்பிகளை அனுப்பி விடுவார். எவரையும் நம்ப மாட்டார். எவரிடமும் அறிவுரையும் கேட்க மாட்டார். தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டார்.

தான் உண்டு. தன் வேலையுண்டு என்பதைத்தான் தன் வாழ்க்கை நெறிமுறையாக வைத்திருந்தார். காலத்தோடு ஒத்துப் போக முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் உள்ளூருக்குள் வந்த புதியவர்கள் ஒவ்வொருவரும் வளர வளர இவரால் தன்னை வளர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. தன் இயல்புகளை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

எவருக்கும் மனதறிந்து துரோகம் செய்யக்கூடாது என்பதை முக்கியமாகக் கொண்டவரின் கொள்கைகள் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியைத் தந்த போதிலும் காலத்திற்கேற்ப புதிய முயற்சிகள் கூடத் தேவையில்லை என்பதாக வாழ்ந்தவரின் கொள்கைகள் தான் எங்களுக்கு அதிக எரிச்சலையும் கோபத்தையும் உருவாக்கியது. தானும் வளராமல் எங்களையும் அண்ட விடாமல் தான் சேர்த்த சொத்துக்களை அடைகாத்தார்.

ஊரில் வாழ்ந்த பலரும் மூன்று தலைமுறைகளாகக் காத்து வந்த சொத்துக்களை மொத்தமாக விற்றுவிட்டு வெளியேறிய போதிலும் இன்று வரையிலும் அவர் சம்பாரித்த எந்தச் சொத்துக்களும் சேதாரம் இல்லாமல் தான் இருக்கின்றது. அவர் தம்பிகளுக்குப் பிரித்தது போக இன்றும் இருக்கின்றது. அப்பா இறக்கும் வரையிலும் உணவு தான் வாழ்க்கை. ருசி தான் பிரதானம் என்பதான சிறிய வட்டத்திற்குள் பொருந்திக் கொண்ட அவருக்கும் உலகத்தை அளந்து பார்த்து விட வேண்டும் என்று போராடிப் பார்த்த எனக்கும் உருவான பிணக்குகள் நாளுக்கு நாள் அதிகமானதே தவிரக் குறைந்தபாடில்லை.

கால் நூற்றாண்டுகள் காலம் அவரை வெறுத்துக் கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடி தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் முதன் முறையாக மரியாதை உருவானது.

குழந்தைகளின் மருத்துவத்திற்காக அலைந்த போது தான் அவரின் உண்மையான ரூபம் புரிந்தது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற போது தான் எத்தனை அறிவீலியாக இருந்துள்ளோம்? என்பதை உணர்ந்து பார்க்க முடிந்தது. இன்று அம்மா வாழ்ந்திருந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிகின்றது. அவரின் அசாத்தியமான பொறுமை இன்று என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

அவர் மிகப் பெரிய பட்டாளத்திற்குச் சமைத்துப் போட்டு உழைத்த உழைப்பு இன்னமும் நாம் உழைக்க வேண்டும் என்று உந்தித் தள்ளுகின்றது. வீட்டுக்கு மூத்த மருமகளின் கொடூரமான சகிப்புத்தன்மையைத் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் மனோநிலையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது. குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் குறைகளை மீறியும் குடும்பத்தைக் காத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது தான் யோசிக்க முடிகின்றது. அப்பாவுக்கு எந்த வகையிலும் நாம் மகிழ்ச்சியைத் தரவில்லையே என்ற குற்றவுணர்வு மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது.

குடும்பத்தினர் திருமணத்தை ஏற்பாடு செய்து உறுதி செய்த போது அப்பா இறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. என்னை விட்டு விடக்கூடாது என்று மாமனார் அவசரமாக இருந்தார். ஏதோவொரு வகையில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன். மாமனாரிடம் ஒரு வருடம் முழுமையாக முடியட்டும் என்று காத்திருக்கச் சொன்னேன். ஊர்ப் பழக்கத்தில் தாத்தா அப்பா பெயர்களைக் குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை. ஆனால் ஆண் குழந்தைகள் வந்தால் என்னைப் போல இருந்து விடுவார்களோ என்று இயற்கை நினைத்ததோ தெரியவில்லை.

ஒன்றுக்கு மூன்றாகப் பெண் குழந்தைகள் வந்து சேர இன்று மூவரும் எங்களைக் கொண்டாடுகின்றார்கள். இப்போது எங்கள் குழந்தைகள் தான் எனக்கு அப்பாவாக இருக்கின்றார்கள்.

காரணம் இவனைத் திருத்தவே முடியாது என்று புலம்பியவரின் பேத்திகள் தான் என்னைப் பேதியாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்று எங்களை வளர்த்தவரின் பேத்திகள் இன்று கேள்விகளால் துளைத்தெடுக்கின்றார்கள். “உங்க காலம் வேறு. எங்க காலம் வேறு” என்று சரிசமமாக பேசுகின்றார்கள். அமைதியாய் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை என்று உணர்த்திய அப்பாவின் வாழ்க்கையின் தத்துவங்களைத்தான் இப்போது நானும் கடைபிடித்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆமாம் பல சமயம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அழகாய் ஒதுங்கிவிடத்தான் தோன்றுகின்றது. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டுப் பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த நிலைக்கு இப்போது மூன்று பக்கத்திலிருந்து சூறாவளியும் சுனாமியும் ஒன்று சேர எங்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கிறது. வீட்டில் என்னால் சமாளிக்க முடியல? என்று சொல்லும் அளவுக்குத் தினந்தோறும் வாழ்க்கை அதகளமாகப் போய்க் கொண்டேயிருக்கிறது.

அன்று அப்பாவிடமிருந்து ஒதுங்கிச் சென்ற கால்கள் இன்று குழந்தைகளின் மாறிக் கொண்டேயிருக்கும் எதிர்பார்ப்புகளைப் பார்த்து விழிபிதுங்கி நிற்கின்றது. நான் எழுதத் தொடங்கிய பிறகு என்னைப் பற்றி எழுதிப் பார்த்த போது குழந்தைகளின் வளர்ச்சியை, அவர்கள் கடந்து வந்த காலடித் தடத்தினை எழுதிக் கொண்டே வந்தேன்.

அவர்களின் மாறிக் கொண்டே வந்த குணாதிசியங்கள், அவர்களின் பள்ளிகள். பள்ளிகள் கொடுத்த கல்வி, கல்வி சொன்ன பாடங்கள். கற்ற பாடங்களினால் அவர்கள் எடுத்துக் கொண்டு வாழ்க்கைத் தத்துவங்கள் என்று ஒவ்வொன்றையும் எழுதத் தொடங்கினேன். இதன் மூலம் தற்போதையைக் கல்விச்சூழல், மாறாத இந்தியக்கல்வி முறைகள், குழந்தைகள் அனுபவித்துக் கொண்டு இருக்கும் துன்பங்கள் என்று ஒவ்வொன்றையும் எழுத முடிந்தது. குழந்தைகளின் வளர்ப்பு குறித்து யோசிக்க முடிந்தது. நடுத்தரவர்க்கத்தின் இயலாமையைப் பற்றி எழுத வாய்ப்பு அமைந்தது. மாறிய சூழலில் நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாத போது உருவாகும் மனஉளைச்சலை புரிந்து கொள்ள முடிந்தது.

மொத்தமாக ஒவ்வொன்றையும் சேர்த்துப் பார்த்த போது இது ஆவணமாகத் தெரிந்தது.

என் வாழ்க்கையின் ஊடே பெற்ற அனுபவங்கள் படித்த பலரும் தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிந்தது என்றார்கள். வலைபதிவுகளில் வாசித்த பலருக்கும் நான் எழுதிய இந்த அனுபவங்கள் பிடித்தது என்பதை விட இது போலவே நாங்களும் எங்கள் குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுகின்றோம்.

உங்கள் எழுத்துக்கள் மூலம் பலவற்றையும் எங்களால் கற்றுக் கொள்ள முடிந்தது என்றார்கள். என் எழுத்திற்குக் கிடைத்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு புரிந்துணர்வு எனக்குக் கிடைத்தது.

காரணம் என் அப்பா எனக்குள் உருவாக்கிய தாக்கமது. வெறுப்புகளை மட்டுமே சுமந்தவனின் வாழ்க்கை அடிப்படையில் அன்புக்கு ஏங்கி தவிக்கும் மனம் உள்ளவனாகத் இருப்பான் என்பதை நீங்கள் தொடர்ந்து வாசிக்கும் போது உங்களால் உணர முடியும்.

அன்பென்பது பகிரப்படும் போது தான் அதற்கு உயிர்ப்பு வருகின்றது. உள்ளேயே வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. அந்த அன்பு சிலருக்கு மனைவி மூலம் கிடைக்கக்கூடும். எல்லாச் சமயத்திலும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதும் இல்லை. பரஸ்பரம் சரியான விதத்தில் புரிந்து கொள்ளும் போது மட்டுமே இயல்பாக இருக்கும். ஒரு பக்கம் கூடி மறுபக்கம் குறைந்தால் அதிலும் பிரச்சனை உருவாகி அது விஸ்வரூபம் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளதால் ஏறக்குறைய குடும்ப வாழ்க்கையென்பது கம்பி மேல் நடக்கும் கதை தான்.

கால மாறுதல்கள் கொண்டு வந்துள்ள தொழில் நுட்ப வளர்ச்சிகளும், வீட்டுக்குள் இருக்கும் தொலைக்காட்சிகள் கணக்கற்ற விஷங்களையும் நம்மிடம் விதைத்துக் கொண்டேயிருப்பதால் கவனத்தோடு வாழ வேண்டியுள்ளது.

ஆனால் நம் இந்திய சமூகத்தில் குழந்தைகள் தான் கணவன் மனைவியைச் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு சமயத்திலும் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே.

நான் இங்கே பார்த்த வரையிலும் அவரவர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது தான் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவியிடையே உண்மையான அக்கறை உருவாகின்றது. காரணம், அப்போது தான் இருவருக்குள்ளும் இருக்கும் நான் நீ என்ற ஈகோ குழந்தைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றது நம்மால் குழந்தைகள் வாழ்க்கை பறிபோய்விடுமோ? என்ற அச்சத்தினால் குடும்பத்தில் அமைதி உருவாகின்றது.

அதுவே உறவுச் சங்கிலியின் தன்மை கெட்டுப் போகாதவாறு இருந்து விடுகின்றது. குழந்தைகளின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியின் மூலமே இங்கே பல கணவன் மனைவியின் உண்மையான காதல் அனுபவமும் மீண்டும் துளிர்விடத் தொடங்குகின்றது.

குடிகாரக் கணவன் குழந்தையின் மேல் உள்ள பாசத்தினால் தன் இயல்புகளை மாற்றிக் கொண்ட பலரையும் பார்த்துள்ளேன். மகள் வளர்ந்துவிட்டாள் என்ற பயத்தில் ஊர் மேய்ந்த மனைவி மாறிய தன்மையும் பல பாடங்களைத் தந்துள்ளது. வளர்ச்சியடைந்த மேலைநாடுகளைக் காட்டிலும் குடும்பப் பாசம் என்ற ஒரு வார்த்தை தான் இந்தியாவில் இன்று வரையிலும் குறைபாடுகளுடன் உள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.

இதுவே தான் நம் இந்திய நாட்டை ஒரு சங்கிலி போல இணைத்து சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

எங்கள் குழந்தைகள் தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கின்றார்கள். இன்னும் ஏழு வருடங்களில் மூவரும் கல்லூரிக்குச் சென்று விடுவார்கள். அப்போது அவர்களின் உலகம் வேறுவிதமாக இருக்கக்கூடும். எண்ணங்கள் முழுமையாக மாறியிருக்கும். இன்று இவர்கள் எங்கள் மீது காட்டும் அன்பு கூட மாறிவிட வாய்ப்புண்டு. அந்த உலகத்தில் நான் (நாங்கள்) இருப்பேனா என்று தெரியாது. என்னளவில் என் அப்பாவைப் போலச் சரியானதை மட்டும் இவர்களுக்குச் செய்து கொண்டிருக்கும் விசயங்கள் அவர்கள் மனதில் தப்பு அல்லது வன்முறை போலத் தோன்றியிருக்கக்கூடும். இப்போது வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையில் கூட உள்ளே வைத்திருக்கக்கூடும்.

காரணம் நானும் அப்படித்தானே யோசித்திருந்தேன்.. அப்போது நான் (நாங்கள்) இவ்வுலகில் இல்லாவிட்டாலும் கூட என் குழந்தைகள் இந்த எழுத்துக்களைப் படிக்கக்கூடும். அப்போது அவர்கள் மனதில் தோன்றக்கூடிய கேள்விகளுக்குச் சில பதில்கள் இந்த எழுத்துக்கள் மூலம் அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும்?.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book