20 19. சொம்பு இல்லாத நாட்டாமை

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் நாள் வந்துவிட்டது. வீட்டில் குழந்தைகள் எப்படா பள்ளிக்கூடம் திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சற்று வளர்ந்து நிற்கும் இவர்களின் மனோபாவங்கள், பேச்சுகள், நடவடிக்கைகளை இந்த முறை கவனித்த பொழுது பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு வாரங்கள் விடுமுறை இருந்தாலே போதுமானது. உடனடியாகப் பள்ளி திறந்தால் பரவாயில்லை என்கிறார்கள். காரணம் விடுமுறை சந்தோஷங்களை அவர்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

குறிப்பாக இங்குள்ள புறச்சூழல் இவர்கள் விரும்பும் அளவுக்குச் சிறப்பாக இல்லை. வீட்டை விட்டு இறங்கினால் வாகனங்கள் பறக்கும் தெரு. மரங்கள் எதுவுமே இல்லாத குடியிருப்பு. திருப்பூருக்குள் சுற்றிப் பார்க்க எந்த இடமும் இல்லை. போக்குவரத்து நெரிசலைப் பார்த்து நானும் எங்கேயும் அழைத்துச் செல்ல விரும்புவதும் இல்லை. மற்றவர்களைப் போல டாம்பீகத்திற்காக எங்கேயும் செல்வதும் இல்லை.

என்னுடைய பள்ளிக்கூடக் கோடை விடுமுறை கொண்டாட்டங்கள் இப்போது என் மனதில் நிழலாடுகின்றது. தேர்வு எழுதி முடித்து வீட்டுக்குள் நுழையும் பொழுதே பைக்கட்டை தூக்கி ஏதோவொரு இடத்தில் தூக்கி எறிவதில் இருந்து தொடங்கும். அந்த இரண்டு மாதங்களும் இரவு நேரத்தைத் தவிர வீட்டுக்குள் இருந்ததே இல்லை.

அடிக்கும் வெயில் அத்தனையும் தலையில் தான் இருக்கும். ஓடித் திரிந்த காலங்களை இன்று குழந்தைகளுக்கு வழங்க முடியவில்லை. உறவினர் வீடு, பழகியவர் வீடு என்று எந்த இடத்திற்கு அனுப்பினாலும் வெகு விரைவில் இவர்களுக்கு அங்குள்ள சூழ்நிலை அலுத்துப் போய்விடுகின்றது. ஒரே போருப்பா…….. வீட்டுக்கு வந்து விடுகின்றோம் என்று திரும்பி வந்து விடுகின்றார்கள்.

ஆனால் என்னுடைய பள்ளிக்கூட வாழ்க்கையில் அலுப்பென்பதே துளிகூட இல்லை. இருப்பதை வைத்து அனுபவித்தல் என்ற நோக்கத்தில் வாழ்க்கை இருந்தது. இன்று இவர்களுக்காகவே என்று உருவாக்கிக் கொடுத்த ஒவ்வொரு விசயங்களும் அடுத்தடுத்த தேடல் என்ற நிலைக்கு மாற்றியுள்ளது.

ஒவ்வொரு வசதிகளையும் எதிர்பார்த்து பழகியவர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இதற்கு மேலாக தொலைக்காட்சி விடுமுறையின் பாதி நாட்களை ஆக்கிரமித்து ஆட அசைய விடாமல் ஒரே இடத்தில் அமர வைத்து விடுகின்றது. கண்வலி, கழுத்துவலி என்று தொடங்கி கடைசியில் மொத்த உடம்பும் சோர்ந்து போய் நிற்கும் சோர்வை அவர்களின் இரவு நேர தூக்கத்தின் போது பார்க்க முடிகின்றது.

மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தும் கூலி வேலை பார்ப்பவர் இரவு நேரத்தின் போது எந்த அளவுக்கு அசந்து தூங்குவாரோ அதைப் போலவே அடித்துப் போட்டது போல தினமும் தூங்குகிறார்கள்.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தூங்குகிறார்கள். பகலில் தூங்க வைக்க முடியவில்லை. பள்ளிக்கூடம் இல்லை தானே என்பது போன்ற வீட்டில் உள்ள வக்காலத்து வார்த்தைகள் அவர்களின் தூக்க நேரத்தை தினந்தோறும் அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. தினசரி செய்ய வேண்டிய அன்றாடக் கடமைகள் அத்தனையும் தலைகீழாகப் போய்விட்டது.

புரிய வைக்க முடியவில்லை. புரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவர்களும் இல்லை.

பள்ளிக்கூட நாட்களில் அனுபவிக்க முடியாத அத்தனை சுதந்திரங்களையும் ஒவ்வொரு நாளும் முழுமையாக அனுபவிக்கிறார்கள். விரும்பிய அத்தனையும் கிடைக்கிறது. வீட்டுக்குள் அவர்கள் விரும்பாத எந்த நிகழ்வும் நடப்பதும் இல்லை. சம்மர் கோர்ஸ் என்ற எந்தக் கண்றாவிக்கும் நாங்கள் அனுமதிப்பது இல்லை.

உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள். உனக்குச் செஸ் ஆட ஆசையா? அதற்கான பொருட்கள் வாங்கித் தருகின்றேன். பக்கத்து வீட்டில் உள்ள அண்ணன் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்த்து நீயே கற்றுக் கொள். என்னை அழைக்காதே. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நேரமும் இல்லை. இது போலத்தான் ஒவ்வொரு விளையாட்டையும் அவர்களாகத் தேடித் தேடி கற்றுக் கொள்ளத் தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கின்றோம்.

நாம் நுழைந்தாலும் கடைசியில் அவர்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டுமே தவிர அவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது.

மூவருக்கும் நடக்கும் பஞ்சாயத்தில் கடைசியில் வீடே போர்க்களம் ஆகிவிடுகின்றது. அடுத்தவர்களிடம் அனுப்பும் போது பொட்டிப் பாம்பாய் அடங்கி விடுகிறார்கள். மற்றவர்களுடன் பழகும் போது நமக்குத் தேவையான அனுசரணை வேண்டும். அதற்கு மேலாக உண்மையான உழைப்பின் மூலம் மற்றவர்களைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் பல விசயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதைக் குறிப்பால் உணர வைக்கின்றோம்..

ஆனாலும்………

நாம் வாழும் குடும்பச் சூழ்நிலையில் ஓழுக்கச் செயல்பாடுகளை முன்னிறுத்தி அவர்களை உருவமாக மாற்ற முயற்சித்தாலும் வெளி உலகம் கொடுக்கும் தாக்கமும், இவர்கள் மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் செயல்பாட்டின் மூலமும், தேவையற்ற பல விசயங்களையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இவர்கள் பெறும் தாக்கமென்பது இறுதியில் நீயும் ரௌத்திரம் பழகு என்பதாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பணம் என்ற ஒரு வார்த்தை இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. உடுக்கும் உடை, உண்ணும் உணவு முதல் பேச்சில் காட்ட வேண்டிய டாம்பீகம் வரைக்கும் வளரும் பிஞ்சு மனதில் இந்தச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை தான் விதைத்துக் கொண்டிருக்கிறது.

உள்ளே வெளியே என்று ஒரு ஆடு புலி ஆட்டமாகத்தான் சமகால வாழ்க்கையில் குழந்தைகள் போராடி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிள்ளது.

தினந்தோறும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களுடன் பழகிய தாக்கத்தில் தனக்குத் தானே என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். இதுவே குழந்தைகளுக்குத் தான் மட்டும் என்ற எண்ணத்தையும் மறைமுகமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது.

சுயநலம் மேலோங்குகின்றது. போட்டி பொறாமை அதிகமாகி விடுகின்றது. தான் செய்வது தான் சரிதான் என்று பேசத் தொடங்கிறார்கள். நவீன தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் குறையேதும் இல்லை என்ற போதிலும் இவர்களால் உருவாகும் ஒவ்வொரு சவால்களையும் மனைவியால் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றார்.

எத்தனை முறை ஒற்றுமை குறித்த கதைகள் சொன்னாலும் சுவாரசியம் என்ற நோக்கத்தில் கேட்டுக் கொள்கிறார்களே தவிர காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரைக்கும் நடக்கும் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளை நான் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் பார்க்க வாய்ப்பு கிடைக்கின்றது. மற்ற ஆறு நாட்களிலும் மனைவி தான் ஆலமரத்தில் சொம்பு இல்லாத நாட்டாமையாக நேரத்திற்கு தகுந்தாற் போலத் தீர்ப்புகளை மாற்றி மாற்றிச் சொல்லி சமாளித்து எப்படா பள்ளி திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருக்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.