19 18. சாமி கண்ணைக் குத்திடும்

எப்போதும் போல மூன்று பேரும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று மூன்று குழந்தைகளுக்குள் பிரச்சனைகள் உருவாகும்.

எதற்காக? ஏன் என்றே தெரியாது.

வீட்டில் பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். நான் ஏதோவொரு வேலையில் மும்முரமாக இருப்பேன். மனைவி மற்றொரு வேலையில் இருப்பார். குறிப்பாக மூத்தவளுக்கும் கடைக்குட்டிக்கும் தான் எப்போது பிரச்சனை தொடங்கும். மூத்தவள் வில்லன் போல் மாறி அடிதடியில் இறங்கிவிடுவாள்.

கடைக்குட்டி நின்று நிதானமாக ஒவ்வொரு கேள்வியாக எடுத்து வைப்பார். ஆனால் மூத்தவள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கீழே தள்ளி அல்லது கையில் கிடைப்பதை எடுத்து வீசி எறிந்து ரணகளமாக மாற்றிக் கொண்டு இருப்பாள். அப்போதும் கூட கடைக்குட்டி அழ மாட்டார். தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல் நீ செய்தது தவறு என்பது சுட்டிக் காட்ட இந்தப் பிரச்சனை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டேயிருக்கும்.

தொடர்ந்து கடைக்குட்டியிடமிருந்து காரசாரமான விவாதங்கள் வந்து கொண்டேயிருக்கும். கடைசி மகள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் கல்வெட்டு போலவே இருக்கும். ஒவ்வொரு விசயத்திற்குள்ளும் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கும்.

கடைசி மகளின் ஆசை எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்பது. ஆனால் அதற்குண்டான தகுதிகள் அத்தனையும் அவளிடம் உண்டு என்பதைப் பல முறை கவனித்து இருக்கின்றேன். ஆனால் ஊக்குவித்தது இல்லை. இப்போது அவள் சொல்லும் லட்சியம் எதிர்காலத்தில் மாறக்கூடும். அவளுக்கு நடை முறை எதார்த்தம் புரிந்து கொள்ளும் காலத்தில் அந்த லட்சியத்தில் எந்த அளவுக்கு விருப்பத்துடன் இருக்கிறாள் என்பதால் மட்டுமே நாங்கள் அவர்கள் ஆசையை ஊக்குவிப்பதில்லை.

நடந்து கொண்டிருக்கும் விவாதங்களை நானும் மனைவியும் கவனிக்காதது போலவே உள்வாங்கிக் கொண்டு இருப்போம். குறிப்பாகச் சண்டையின் போது அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் லாவகத்தைக் கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஒரு சின்ன அசிங்கமான வார்த்தைகள் கூட வராது. வந்தால் நான் என்ன செய்வேன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் இரண்டு பேருமே கடைசியாக என்னைப் பஞ்சாயத்து மேடையில் உட்கார வைத்து விடுவார்கள். நான் மனைவியை அழைப்பேன். “அவள்களுக்கும் உங்களுக்கும் வேற வேலையே இல்லை……. என்னை விட்ருங்க” என்பாள்.

நான் தடுமாறிப் போய்விடுவேன். எவர் பக்கமும் சாய்ந்து விட முடியாது. அவரவர் கருத்துக்ளை என் முன்னால் நின்று கொண்டு உரக்கப் பேசி என்னைக் கதிகலங்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.

எனக்குச் சுவாரஸ்யமாக இருக்கும். பிரச்சனைகளை விட்டு விட்டு அவர்கள் பேசுவதை ஊக்குவித்துக் கொண்டிருப்பேன். ஒருவர் பக்கம் உள்ள விசயத்தை அதன் நியாயத்தை அடுத்தவளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயற்சிப்பேன்.

மூத்தவள் விட மாட்டாள்.

அவள் பக்கமுள்ள நியாயத்தை எனக்குப் புரியவைப்பாள். நான் திடீரென்று அவள் பக்கமுள்ள உண்மை நிலவரங்களைச் சொல்லி அவள் பக்கம் உள்ள நிலையை எடுத்துக் கொண்டு அவளுக்குச் சாதகமாகப் பேச, கடைக்குட்டி பேசுவதை விட்டு விட்டு என் தலைமுடியை கொத்தாகப் பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் ஆட்ட ஆரம்பித்து விடுவாள். என்னுள் பொறி பறக்க ஆரம்பித்து விடும்.

“நீங்க எப்ப பார்த்தாலும் பொய் பேசுற அவளுக்குச் சப்போர்ட் செய்றீங்க”

நான் படித்துக் கொண்டிருக்கும் சமாச்சாரங்களை வீசியெறிய முயற்சிப்பாள். முடிவுக்கு வராமல் போய்க் கொண்டேயிருக்க திடீரென்று இரண்டு பேருக்கும் நிஜமான கைகலப்பு என்கிற ரீதியில் பிரச்சனை அடுத்தக் கட்டத்திற்கு நகரும். இப்போது தான் இந்த வாக்குவாதத்தில் சம்மந்தப்படாதவள் “அப்பா இவங்க ரெண்டு பேரும் பொய் பொய்யா பேசிக்கிட்டு இருக்காங்க. இவங்க கண்ணைச் சாமி குத்த போகுது” என்பாள்.

டக்கென்று இரண்டு பேரும் ஒரே கூட்டணியில் சேர்ந்து கொண்டு அவள் மேல் பாயத் தொடங்குவார்கள். எப்போதும் இவர்களைப் போல தேவையில்லாமல் சண்டைக்குப் போகமாட்டாள். ஒருவகையில் இருவரும் அதிமுக பாமக அல்லது திமுக பாமக கூடடணி தான். யாருக்கு என்ன ஆதாயம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருப்பவர்கள்.

ஆனால் எப்போதும் சண்டைக்குப் போகாத மற்றொருவள் பழைய கம்யூனிஸ்ட் கட்சி போலவே இருப்பாள். தன் கொள்கை, தன் நோக்கம், தன் வாழ்க்கை என்பதாக இருப்பவளுக்கு என் செல்லம் அதிகம் உண்டு. மனைவி பல முறை இந்த என் குணாதிசியத்தைக் கண்டிக்க சற்று மறைமுகமாக இவளுக்கு ஆதரவு கொடுப்பேன். சண்டைக்குப் போகாமல் அமைதியாய் இருப்பவள் அழத் தொடங்குவாள். நான் எனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வீட்டில் எப்போதும் அமைதியாய் இருப்பவள் பக்கம் சாய்ந்து விடுவேன்.

ஆனால் இந்தச் சாமி கண்ணைக் குத்திடும் வார்த்தைகள் யார் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை யோசிக்கத் தொடங்குவேன்.

குழந்தைகளின் எதிர்கால ஆசைகள் முதல், அவர்களின் நிகழ்கால விருப்பங்கள் முதல் எதையும் நானோ மனைவியோ சொல்லிக் கொடுப்பதில்லை. எங்கள் விருப்பங்களை அவர்கள் மேல் திணிப்பதும் இல்லை.

காரணம் இன்றைய எங்கள் வாழ்க்கை சூழ்நிலை நாளை எப்படி வேண்டுமானாலும் மாறிப் போகலாம். அவர்களின் ஆசைகள் விஸ்ரூபம் எடுத்து வளர்ந்து அதை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அது குழந்தைகளுக்கு ஒரு தாக்கத்தை உருவாக்கக்கூடும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆசைகளை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்பது வரைக்கும் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அது வெறும் கனவாக இல்லாமல் அவவ்ப்போது அது குறித்துப் பேசுகிறார்கள். அவர்கள் வைத்துள்ள ஒவ்வொரு கனவுக்குப் பின்னாலும் உழைக்க வேண்டிய விசயங்களை அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சிக்கின்றோம்.

அந்தக் கனவென்பது ஆழ்மனத்தில் இருக்க வேண்டுமே தவிர நிகழ்காலத்தில் அது குறித்துக் கவலைப்பட, யோசிக்க வேண்டிய அவஸ்யமில்லை என்பதைப் புரியவைத்துள்ளோம்.

பள்ளி வாழ்க்கையில் முக்கியமான தருணங்கள் இரண்டு. ஒன்று பத்தாம் வகுப்பு. மற்றொன்று பனிரெண்டாம் வகுப்பு. இதில் நாம் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நம் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை அவர்களுக்கு உணர வைத்துள்ளோம்.

ஆனால் என்னவிதமான கருத்துக்களை, கதைகளை அவர்களுக்கு உணர்த்திக் காட்டினாலும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவே இருக்கின்றது. ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்குச் சுயநலமாகத்தான் இருக்கிறார்கள்.

ஒற்றுமையை வலியுறுத்தி ஓராயிரம் கதைகள் சொன்னாலும் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரின் செயல்பாடுகளின் டார்வின் கொள்கை போல அவரவர் பிழைக்கும் வழியைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்கும் சமயத்தில் அவர்கள் கேட்கும் கதைகளைச் சொல்வதுண்டு. அதுவும் மூன்று பேர்களின் ஆசைகளை நாம் தான் சரிசெய்து ஏதோவொன்று குறித்துச் சொல்ல வேண்டும்.

பெரும்பாலும் மந்திரக்கதைகள். அதுவும் வில்லன் இருக்கக்கூடாது. கதையில் வருபவர்கள் எவரும் கடைசி வரைக்கும் கெட்டவர்களாக இருக்கக்கூடாது என்பது போன்ற பல சட்டதிட்டங்கள். திடீர் என்று சொல்லுங்க சொல்லுங்க என்கிற போது நாம் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். முதல் வரி சொல்லும் அடுத்த வரியில் சுவராஸ்யம் இருக்க வேண்டும். குறிப்பாக நகைச்சுவை அதிகம் இருக்க வேண்டும். கடைசி வரைக்கும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டே வர வேண்டும். ஆனால் அவர்கள் பார்வையில் அது வெறும் கப்ஸாவாக இருக்கக்கூடாது. எனக்கு எப்போதும் சவாலாகவே இருக்கிறது.

தாமதமாக வீட்டுக்குள் வரும் போது கேட்டுக் கொண்டே இருப்பவர்களை மனைவி அடக்கி தூங்க வைத்து விடுவாள். கதை சொல்லிக் கொண்டு வரும் போது அவர்களுக்குத் தூக்கம் வந்தாலும் கொட்டாவியை அடக்கிக் கொண்டு கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

இவர்கள் தூங்கி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் எழ முயற்சித்தால் அப்புறம் என்னாச்சு? என்று ஒருவரின் குரல் வரும். மொத்தத்தில் அவர்களின் தேவையை நாம் நிறைவேற்றிய ஆக வேண்டும் என்ற சுதாரிப்பு இருக்கிறது.

ஆனால் நிச்சயம் என்றுமே சாமி பற்றிய கதைகளைச் சொல்ல மாட்டேன். காரணம் ஆன்மீகம் என்பது அவரவர் உணர்வுகள் மற்றும் சந்தித்த அனுபவங்கள் உணர்த்துவது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். வெறுமனே இந்தச் சாமியை கும்பிடு. இந்தச் சாமி நமக்கு இது தரும் என்பது போன்ற பல விசயங்களைக் கடந்த இரண்டு வருடங்களாகச் சொல்வதில்லை.

காரணம் நான் பெற்ற அனுபவங்கள்.

எங்கே சென்றாலும் அங்கே என்ன கோவில் இருக்கிறது என்பதைத்தான் முதன் முதலாகக் கேட்பேன். உறவினர்கள் யார் வந்தாலும் அவர்களின் குழந்தைகள் முதன் முதலாகச் சொல்லும் விசயமே கோவிலைத் தவிர வேறெதும் உங்களுக்குத் தெரியாதா? என்பது போன்ற பல கேள்விகளைச் சந்தித்துள்ளேன். இந்தச் சூழ்நிலை படிப்படியாக மாறிவிட்டது.

காரணம் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் நம்மால் மாற்றி விடமுடியாது.

எந்தச் சாமியும் வந்து உணர்த்திக் காட்டுவதும் இல்லை.

தீதும் நன்றும் பிறர் தருவதில்லை. நாம் தான் உருவாக்கிக் கொள்கின்றோம்..

இது நம் வாழ்க்கை. நாம் தான் வாழ்ந்தாக வேண்டும். நடக்கும் சாதகப் பாதக அம்சங்கள் நாம் தான் சூழ்நிலைக்கேற்றவாறு புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொன்றையும் சந்தித்தே ஆக வேண்டும். சங்கடங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தாலும் நாம் பொறுமையாக இருந்தே தான் ஆக வேண்டும் என்பதை எதார்த்த வாழ்க்கை கற்றுக் கொடுத்துள்ளது.

அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஆனாலும் உழைப்புக்கு, திறமைகளுக்கு அப்பாற்பட்ட இந்த உலகில் வேறு சில கண்களுக்குத் தெரியாத விசயங்களும் இருக்கிறது என்பதை நான் உணர்ந்து இருக்கின்றேன்.

நடந்து முடிந்த பல சம்பவ்ங்கள் எனக்கு அவற்றை உணர்த்திகாட்டியிருக்கிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் போன்ற மத நம்பிக்கைகளுக்குள் அடக்க விரும்பவில்லை.

எல்லா மத மனிதர்களும் சுயநலமாகத்தான் இருக்கிறார்கள். நான் மதப்பற்று உள்ளவன் என்கிற எவரும் அந்த மதம் சொல்லும் அத்தனை கருத்துக்களையும் பின்பற்றுவதில்லை. அவருக்கு என்ன சாதகமோ அதை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அதிகமான தகுதியற்ற ஆசைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். நெருங்கிய உறவுகள் இறந்து போவதை பார்த்த போதிலும் எவரும் திருந்த தயாராயில்லை. ஆனால் நான் பக்திமான் என்பதை வெளியுலகத்திற்குக் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். எல்லாவிதமான கோவில்களுக்கும் செல்கிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரையிலும் பக்தி என்பது ஒரு வேடம். அந்தக் கதாபாத்திரத்தை தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு கோவில்களிலும் கூட்டம் நாளுக்கு நாள் குவிந்து கொண்டேயிருக்கிறது. ஒருவர் மற்றவருக்குத் தொந்தரவு இல்லாமல், ஏமாற்றாமல் வாழ முடியுமா? என்று யோசிப்பதில்லை.

காரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் கணக்குகள். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் என்ன கிடைக்கும்? என்பதில் தொடங்கி இந்தக் கணக்கு விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. ஆன்மீகச் சுற்றுலா கிளம்புவர்களை நன்றாக கவனித்துப் பாருங்க. அவரவர் மனம் பற்றிய தெளிவு இல்லாதவர்களுக்கு எந்தத் தெய்வம் அறிவை புகட்டும்?

திருப்பூர் நிறுவனங்களில் சந்திக்கும் ஆண்கள், பெண்கள், அவர்களின் முறையற்ற பாலுணர்வு தொடர்புகளை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். இதில் மட்டும் முதலாளி, தொழிலாளி என்கிற பாகுபாடு இல்லாமல் 18 வயது பெண்கள் முதல் 60 வயது கிழம் வரைக்கும் புகுந்து விளையாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், அசிங்கங்கள் என்று எத்தனையோ தினந்தோறும் காதுக்கு வந்து கொண்டேயிருந்தாலும் அந்தத் தவறுகள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. காரணம் ஆசைகள். அதிகப்படியான ஆசைகள். இதுவே தான் இந்த ஆன்மீகத்தை இன்று வரை வளர்த்துக் கொண்டேயிருக்கிறது.

பிராமணர்களின் முகம் இன்று முழுமையாக மாறி விட்டது. அவர்களைச் சொல்லி தவறில்லை. ஃபாஸ்ட் புட் போலவே இன்று சடங்கு சம்பிராதயங்களை மக்கள் நொடிப் பொழுதில் செய்து விட்டு அடுத்த நாளே வாழ்க்கையில் மறுமலர்ச்சி வந்து விட வேண்டும் என்று ஆசைப்படும் போது பிராமணர்கள் என்ன செய்வார்கள்?

முடிந்த வரைக்கும் லாபம் என்று கார் வசதி கொண்டு பறக்க ஆரம்பித்து விட்டார்கள். சமீப காலமாக இந்த ஆன்மீகத்தை எல்லாத் தொலைக்காட்சியும் சந்தைப்படுத்த தொடங்கி விட்டன. மக்களும் பத்திரிக்கைகளைப் பார்த்து, இலவச இணைப்பில் கொடுத்துள்ள குறிப்பிட்ட கோவிலுக்குப் படையெடுத்தலும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

கடவுள் என்பதையே தவறாகப் புரிந்து கொண்ட சமூகத்தில் நாம் எதையும் மாற்றி விட முடியாது. தன் அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் கடவுளை கோவிலுக்குச் சென்று தரிசிக்க விரும்புகிறார்கள். நீங்கள் நன்றாகக் கவனித்துப் பாருங்க. ஒவ்வொரு ஊரிலும் பல பழங்காலத்துக் கோவில்கள் இருக்கும். ஏன் அங்கே கூட்டம் கூடுவதில்லை?

நிச்சயம் யாராவது ஒரு பிரபல்யம் அந்தக் கோவிலுக்குச் சென்றால் இது நடக்கும் என்று ஒரு பத்திரிக்கையில் எழுதட்டும். அடுத்த வாரம் அந்தக் கோவிலில் கூட்டம் குவிய தொடங்கும். இதன் காரணமாகவே சாதாரண மனிதர்களும் கடவுள் அவதாரங்கள் போல் மாறி விடுகின்றார்கள்.

படித்தவர்களும் இந்த மாய வலைக்குள் விழுந்து அடுத்தவர்களையும் கெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

அவரவர்களின் அனுபவங்கள் தான் மாறுதலை உருவாக்க முடியும்.. அதற்கான சந்தர்ப்பங்கள் சிலருக்கு வாழ்நாளில் கிடைத்து விடும். பலருக்கும் கிடைக்காத அளவிற்கு வாழ்ந்து முடித்துச் செத்தும் போய்விடுகிறார்கள்.

நம்பிக்கை என்பது அவரவர் சார்ந்த தனிப்பட்ட விசயம். இதில் நிர்ப்பந்தம் என்பது எப்போதும் எங்கும் இருக்கக்கூடாது.

ஒருவருக்கு நிர்ப்பந்தம் செய்து புகுத்தினாலும் அது நீண்ட நாளைக்குத் தாங்காது.

நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்பது நம் கையில் தான் இருக்கிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.