16 15. கல்வி கற்க காசு. காசு சம்பாரிக்கவே கல்வி

“பையன் என்ன பண்றான்?”

“சிங்கப்பூர்ல இருக்கின்றான்.”

“அப்படியா? சந்தோஷம். நானும் ஒன்னு பெத்து வச்சுருக்கேன், மேலே மேலே படிக்கனும்ன்னு காசை கரியாக்கி எங்களைப் பாடாய் படுத்திக்கிட்டு திரியுறான்.”

“பொண்ணு என்ன படிக்கிறாள்?”

“ஐ.டி. படிக்கிறாள். கேம்பஸ் இன்டர்வ்யூல டாடா கம்பெனி தேர்ந்தெடுத்து இருக்காங்க. அடுத்த வருடம் பெங்களூர் போயிடுவாள்.”

“சம்பளம் எவ்வளவு வரும்?”

“முதல் வருடம் மாதம் 20,000 வரும்.,ரெண்டு மூணு வருஷத்துல எப்படியும் டீம் லீடர் ஆயிடுவா”

“என் பையனிடம் அப்பவே சொன்னோம். கேட்டபாடில்லை. எம்.எஸ்ஸி, எம்.எஃபில் முடித்தான். இப்ப வேலை கிடைக்காமல் தனியார் பள்ளிக்கூடத்துக்கு 5000 ரூபாய் சம்பளத்துக்குப் போய்க்கிட்டு இருக்கான்.”

இது போன்ற பல உரையாடல்களை நீங்கள் கேட்டு இருக்கலாம். படிக்கும் நீங்களே கூட ஒரு காலத்தில் இது போலப் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். மொத்தத்தில் படிப்பு என்பது சம்பாரிக்க உதவுவது. எவர் வீட்டிலாவது “அப்பா நான் படித்து முடித்தவடன் சுயதொழில் செய்யப் போகின்றேன்” என்றால் உச்சி முகர்ந்து வழியனுப்பி வைப்பார்கள் என்றா கருதுகிறீர்கள்? உதைக்க வந்து விடுவார்கள். காரணம் பயம்?

எனது பிறந்த மாவட்டத்தை விட கொங்கு மண்டலத்தைப் பலமடங்கு விரும்புகின்றேன். காரணம் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை அதற்கு மேலாகப் பணத்தை அடிப்படையாக வைத்து சிறுவயது முதலே தங்களைத் தயார் படுத்திக் கொள்ளும் விதம்.

அதிலும் குறிப்பாகப் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகவே இருக்கிறார்கள். வயதான பெண்மணிகளைப் பார்த்து வியந்து போயிருக்கின்றேன். படிப்பறிவு சுத்தமாக இருக்காது. ஆனால் மனிதர்களைப் பார்த்தவுடன், பேசுவதை வைத்தே இனம் கண்டு பிடித்து விடுவார்கள். குறி தப்பாது.

தங்கள் குழந்தைகளுக்காகச் செலவழிக்கும் தொகை சொல்லி மாளாது. கௌரவம் சார்ந்தா? இல்லை உண்மையிலேயே அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையா? பல முறை குழம்பிப் போயிருக்கின்றேன். கல்வியென்பது ஒரு முதலீடு. ஷேர் மார்க்கெட் போல இருபது வருடங்களுக்குப் பிறகு டிவிடெண்ட் வரும் என்ற நினைப்பில் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் முக்கால்வாசி மாணவர்களுக்குப் படிக்கும் துறை சார்ந்த படிப்பில் சிறப்பான நிலையை எட்டி இருக்கிறார்களோ இல்லையோ சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் எந்தச் செயல்பாடுகளையும் புரிந்து கொள்ளாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

யார் தலைவர்? யார் ஆட்சியாளர்கள்? நடந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளில் செயல்பாடுகள், அரசாங்கம் உருவாக்கும் கொள்கைகளின் பின்விளைவுகள், சர்வதேச மாற்றங்கள், அதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார வீழ்ச்சிகள் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இது நமக்கு அவஸ்யமில்லை.

நமக்கு அரசியல் தேவையில்லாத விசயம்.

உலகம் மாறப்போவதில்லை.

நாம் அதைப்பற்றித் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதும் இல்லை.

இது போன்ற எண்ணங்கள் ஒவ்வொரு மாணவன் மனதிலும் ஆழமாக வேரூன்றி விடுகின்றது. காரணம் குடும்பமே அப்படிச் சொல்லித்தான் வளர்க்கின்றது.

நன்றாகப் படி. நல்ல வேலையில் சேர். கல்யாணம் கட்டிக் கொள். குழந்தைகளைப் பெற்றுக் கொள். சொத்து சேர். கவனமாக இரு.

எவரும் மறந்து போய்க் கூட நிச்சயம் ஒரு நாள் செத்துப் போய்விடுவோம். அக்கிரம வழியில் சென்று அழிவை தேர்ந்தெடுத்து விடாதே என்று சொல்வதில்லை. எதிலும் முந்திக் கொள் என்று சொல்லியே முழி பிதுங்கும் அளவுக்கு ஆசைகளை வளர்த்து விட்டுக் கடைசியில் அவர்களை அறியாமலேயே பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து விடக் காரணமாக இருந்து விடுகிறார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் வளரும் மாணவர்கள் தான் கல்லூரியை விட்டு வெளியே வரும் போது மனதளவில் சவால்களைச் சந்திக்க முடியாத, மனச்சோர்வு அதிகம் உடைய ஒரு பொம்மை போல வந்து விடுகிறார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில் நான் என்ன படித்து இருக்கின்றேன் என்பதற்கும் நான் இந்தச் சமூகத்தை எப்படிப் புரிந்து இருக்கின்றேன் என்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது, நீங்கள் பட்டதாரியாக, முதுநிலை பட்டதாரியாக, கணினி துறை விற்பனராக என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதற்கு மேலாக இந்திரா நூயி போல எம்.பி.ஏ படித்துச் சிறப்பான தங்கப் பதக்கம் கூட வாங்கியிருக்கலாம். நீங்கள் படித்த படிப்பு என்பது வெறும் சான்றிதழ் மட்டுமே. அதுவொரு தகுதி மட்டுமே? அதை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த நிறுவனத்திலும் உங்களுக்கென்று ஒரு நிலையான இடம் கிடைத்து விடாது. பல படிகள் தாண்ட வேண்டும். ஒவ்வொரு படியும் தடைக்கல்லா இல்லை படிக்கல்லா என்பது உங்களுக்கே உங்கள் அன்றாட அனுபவங்கள் பல பாடங்கள் மூலம் புரியவைக்கும்.

உண்ர்ந்தால் உத்தமம். உணராவிட்டால்?

வேறொன்றுமில்லை. அந்தப் பட்டங்கள் உங்கள் கல்யாண பத்திரிக்கைக்கு உதவக்கூடும். அவ்வளவு தான். நீங்கள் எந்த இடத்தில் எப்படிப் பிரதிபலிக்கின்றீர்கள் என்பதை வைத்தே இந்த வியாபார சமூகம் உங்களுக்குண்டான மரியாதையை அளிக்கின்றது.

ஒருவர் பெற்ற பட்டத்தினால் மட்டும் இந்தச் சமூகம் தனியாக மரியாதை அளிப்பதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையிலும் எவரும் தாங்கள் படித்து முடித்தவுடன் சுய தொழில் மூலம் நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்போடு கல்லூரியை விட்டு வந்தவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள் நூற்றுக்கு ஐந்து சதவிகிதம் பேர்கள் கூட இருப்பார்களா என்பது சந்தேகமே? முதல் காரணம் நம் இந்திய ஜனநாயக கோளாறுகள்.

உங்களுக்கு என்ன தனித் திறமை இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ள மேலைநாடுகள் போல எவரும் இங்கில்லை. அதை ஊக்குவிக்கவும் எவருமில்லை. ஒன்று நீங்கள் அரசியல்வாதிகளுக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும். அல்லது அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்கு வாரிசாக இருக்க வேண்டும்.

மற்றபடி சராசரி குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் கையே தனக்குதவி என்ற கொள்கையைக் கொண்டு தான் வாழ வேண்டும். சாதிக்க வேண்டும்.. முடிந்தவரைக்கும் போராடத்தான் வேண்டும். எவரையும் நீங்கள் குற்றம் சாட்ட முடியாது. நீங்கள் ஒருவரை கைநீட்டி பேசி முடிப்பதற்குள் உங்களைக் கடந்து பல ஆயிரம் பேர்கள் முன்னேறியிருக்கக்கூடும். நீங்கள் மேலும் காத்திருந்தால் கால வெள்ளத்தில் அடித்த சருகு போலப் பின்னால் வந்து விடக்கூடும். மூச்சு வாங்குகின்றதே என்று ஒதுங்கி நிற்கக்கூட இடம் கிடைக்காது.

ஒரு வேளை நீங்கள் தட்டுத் தடுமாறி மேலேறி வந்தாலும் உங்களைக் கவிழ்க்கவென்றே கண்களுக்குத் தெரிந்த தெரியாத ஆயிரெத்தெட்டுப் பிசாசுகள் உங்களைச் சுற்றி இருக்கக்கூடும். நீங்கள் அத்தனையும் சமாளித்து உங்களை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு மேலாக அரசியல்வாதிகள். அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், ஊழல் என்று உங்களை இடை விடாமல் தாக்கிக் கொண்டேயிருக்கும்.

சேரும் அலுவலகத்தில் உழைப்பு முக்கியமா? காக்கா பிடிப்பது அவஸ்யமா? என்பது போன்ற பல புதிய பாடங்கள் கிடைக்கும். அத்தனையும் கடந்து மேலேறி வரவேண்டும். இடைஞ்சல்களுக்கிடையே இனிமையைக் கண்டு கொள்ள வேண்டும்.

வீட்டில் ஒருவருக்கு நன்றாகப் பாடத் தெரியும் அல்லது ஏதோவொரு இசைக்கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்கிற சூழ்நிலையில் யாராவது அவரை ஆகா ஓகோவொன்று பாராட்டுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

எல்லாம் சரிப்பா? பொழைக்கிற வழியைப் பாரு. என்று சொல்லிவிட்டு அந்த ஆர்வத்தில் ஒரு புல்டோசர் மண் எடுத்து போட்டு விட்டு நகர்ந்து விடுவார்கள். ஒரே காரணம் இப்போதுள்ள சமூகத்தில் பணம் சம்பாரிக்க வேண்டும். நிறையப் பணம் வேண்டும். அதற்குண்டான வழிகளில் சென்று கொண்டு இருக்க வேண்டும்.

படிக்கும் படிப்பு மூலம் ஒரு பதவியை அடைய வேண்டும். அந்தப் பதவி பக்கவாட்டு வருமானத்தைக் கொடுக்கும் என்றால் இன்னமும் சந்தோஷப்படும் சமூகத்தில் தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

எது தவறு? எது சரி? என்பது குறித்து எவருக்கும் அக்கறையில்லை.

நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுவும் மற்றவர்கள் பார்வையில் ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

இது தான் இங்கே இப்போது முக்கியம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.