13 13. பணம் இருப்பவர்களுக்கு (மட்டுமே) அனுமதி

வீட்டில் குழந்தைகளுக்குப் பள்ளிப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க எனக்கு அனுமதியில்லை. நான் வீட்டில் இருந்தால் குறிப்பிட்ட சந்தேகங்களுக்கு மட்டுமே பேச அனுமதி கிடைக்கும். காரணம் படிப்பதைத் தவிர மற்ற அனைத்தும் பேச தொடங்கி விடுவதால் எப்போதும் 144 தடையுத்தரவு அமலில் இருந்து கொண்டேயிருக்கும். குழந்தைகளுடன் அவர்கள் பாடம் குறித்துப் பேசும் போதெல்லாம் நான் படித்த பள்ளிக்கூட நினைவுகளுடன் நாம் எப்படிப் படித்தோம்? என்ற யோசனையும் வந்து போய்க் கொண்டேயிருக்கும்?

காரணம் குழந்தைகளின் பாடத் திட்டங்களைப் பார்க்கும் போதும் வியப்பும் பயமும் என்னைத் தாக்குவது போலவே இருக்கும். .

நாம் படித்த கல்வி எளிமையின் வடிவமா? இல்லை சுமையில்லா பாடமா? போன்றதொரு கேள்வியும் இயல்பாக எழும்.

எப்போதும் போலக் கோவிந்தன் தான் முதல் இடத்தில் இருப்பான். இரண்டாம் இடத்திற்காக நானும் அன்புக்கரசியும் போட்டி போட்டுக் கொண்டிருப்போம். மாறி மாறி வந்து கொண்டிருப்போம். எட்டு வரைக்கும் படிப்புக்காக எந்த ஆசிரியரும் எந்தக் குறையும் சொல்லாத அளவுக்குத்தான் இருந்தேன்.

என் கையெழுத்து நன்றாக இருக்கும் காரணத்தால் அதுவே வகுப்புத் தலைவன் என்ற பதவியைக் கூடத் தந்தது.

ஆனால் என்ன கற்றுக் கொண்டோம்? எந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதை அருகே இருந்த மற்றொரு பள்ளிக்கு ஒன்பதாம் வகுப்புக்குச் சென்ற போது புரிந்து கொள்ள முடிந்தது. இங்கேயும் ஆறு முதல் 12 வரைக்கும் இருந்தது. ஆனால் இங்கே ஒன்பதாம் வகுப்பில் தான் நுழைந்தேன்.

பனிரென்டாம் வகுப்பு வரைக்கும் குடும்பத்தினர் எனக்கு கல்விக்கென்று செல்வழித்த தொகை அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும் என்றே நினைக்கின்றேன். இன்று சராசரியாக ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு 25000 ரூபாய் செல்வு செய்தால் மட்டுமே சுமாரான பள்ளியில் படிக்க வைக்க முடியும்.

இருபது வருட இந்திய வளர்ச்சியின் பலன் இதுவே.

ஒன்பதாம் வகுப்பில் உள்ளே நுழைந்த பள்ளியில் முதல் இரண்டு மாதங்கள் முழிக்க வேண்டியதாய் இருந்தது. அதே பள்ளியில் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சூழ்நிலைகள் இயல்பானதாகவே இருக்க என்னைப் போன்றவர்களுக்குச் சவாலாகவே இருந்தது.

பாடம் நடத்திய அத்தனை ஆசிரியர்களும் தேவதூதன் போலவே என் கண்ணுக்குத் தெரிந்தார்கள். முந்தைய பள்ளியில் நடந்த ஆசிரியர் மாணவர்களின் சகஜமான உரையாடல்கள் ஏதும் நிகழாத காரணத்தால் பயமே அடித்தளமாகி படபடப்பே வாழ்க்கையாக மாறத் தொடங்கியது.

ஒன்பதாம் வகுப்பில் முதன் முதலாக நடந்த பரிட்சையின் முடிவை கையில் வைத்துக் கொண்டு ஆசிரியர் ஒவ்வொருவரையும் அழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே பரிட்சை தாளை கையில் கொடுத்திருந்த காரணத்தால் முடமாகிப் போன ஆங்கிலமும் நொண்டித்த கணக்கும் சேர்ந்து டவுசருக்குள் ஒரு நசநசப்பை உருவாக்கியிருந்தது.

ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்ததும் முட்டிக் கொண்டிருந்த மூத்திரத்தை அடக்கிக்கொண்டே அவர் கொடுத்த பிரம்படியை வாங்கிக் கொண்டு வந்தமர்ந்தேன்.

எப்போதும் போல அங்கேயும் கோவிந்தன் முதல் மூன்று இடத்திற்குள் ஒன்றை தக்க வைத்து முன்னேறிக் கொண்டிருந்தான். ஒன்பதாம் வகுப்பு முழுக்க ஒரு சில பரிட்சைகளில் மட்டுமே சிவப்பு கோடு வாங்காமல் தப்பிக்க முடிந்தது. பத்தும் அப்படியே தான் தொடர்ந்தது. இடைவிடாத முயற்சியில் முன்னேறி இருந்தேன். ஆனால் ஆசிரியர்களின் பார்வையில் நான் பத்தாம் வகுப்பில் தேற மாட்டேன் என்ற பட்டியலில் தான் வைத்திருந்தார்கள். அவர்கள் கணிப்பு பொய்யானது.

அவர்கள் ஊட்டி வளர்த்த மாணவர்கள் முடமாகிப் போயிருந்தார்கள். அதிலும் எனக்குக் கணக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் நீ எப்படிடா பாஸானாய்? என்று கேட்டது இன்றும் நினைவில் உள்ளது. காரணம் இரண்டு முறைகள் அவரை எதிர்த்து கையோங்க வீடு வரைக்கும் பஞ்சாயத்து வந்து விட்டது.

இரண்டு வருட அனுபவம் தந்த பாடங்கள் பயத்தைப் போக்க பதினொன்று பனிரெண்டில் இனி பயமில்லை என்ற தைரியத்தைத் தந்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் பழக்கத்தில் வந்திருந்தார்கள். நானும் பள்ளியில் முக்கியமான ஆளாய் மாறியிருந்தேன். அரட்டைக்குத் தக்க நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். கட்டுப்பாடுகள் கொஞ்சம் குறைந்திருந்தது.

வீட்டில் தினந்தோறும் படிக்க வேண்டும் என்ற கட்டளை இருந்தாலும் என்னளவில் பலசமயம் அது காற்றில் பறக்க விட்டு அடி வாங்குவது இயல்பானதாக இருந்தது. ஏதோவொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒப்பேற்றிவிட்டு படுக்க ஓடிவிடுவதுண்டு.

ஆனாலும் இங்கேயும் ஒரே தாண்டலில் தாண்டி கல்லூரி செல்ல முடிந்தது. படித்த பாடத்தை சொந்தமாக எழுதத் தெரிந்ததும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால் கல்லூரி தான் இதயத்தைத் தொட்டதோடு கணக்கற்ற ஆசைகளை நிறைவேற்றவும் உதவியது. ஜன்னல் மட்டுமல்ல கதவுகளையும் அகலமாகத் திறந்து வைக்கச் சுதந்திர காற்றின் சுவாசத்தை அனுபவிக்க முடிந்தது. இதே பள்ளியில் படித்த என்னை விட மிக அதிகமான மதிப்பெண்கள் வாங்கிய ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய துறையில் நுழைய எனக்குப் பிடித்த தாவரவியல் துறையில் நுழைந்த போது பலரும் என்னை ஏளனமாகப் பார்த்தனர்.

ஊரில் இருந்து சென்றவர்களில் நான் மட்டும் தான் அறுபது சதவிகிதத்திற்கு மேல் வாங்கி அத்தனை பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தேன்.

கல்வி ரீதியான எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுவே. அன்று முதல் தான் எனக்குள் இருந்த திறமைகளுக்கு உண்மையான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. மூன்றாண்டுகளும் வெகு இயல்பாக விருப்பத்துடன் படித்த வாழ்க்கையது.

என்னுடன் படித்தவர்கள் அத்தனை பேர்களும் கல்லூரிப் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலவழிக் கல்வி என்றதும் அலறிக் கொண்டு தான் படித்தார்கள்.

ஆனால் பள்ளியில் படித்த மனப்பாடம் அங்கே வேலைக்கு உதவவில்லை.சொந்தமாக எழுத வேண்டும் என்ற எண்ணமும் எவருக்கும் தோன்றவில்லை. பள்ளியைப் போலவே கல்லூரியை கருதியிருந்தார்கள். தேர்வு நெருங்கும் சமயத்தில் நெஞ்சில் அடித்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தார்கள். மூன்று வருடமும் கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல அலைந்தார்கள். என்னுடன் படித்தவர்களில் ஒருவன் முதல் பருவத் தேர்வில் மொழிப்பாடமான தமிழில் கூட தேர்ச்சியடையவில்லை.

அடுத்த பருவம் முதல் அழகாக பிட் எழுதும் கலையைக் கற்றுக் கொண்டு விட இளங்கலையை முடித்து மேற்படிப்புக்கு சென்று அங்கேயும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று பார்டர் வீரனாக வெளியே வந்தான். மேற்படிப்புக்குச் சென்ற இன்னும் சில பேர்கள் இப்போது ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடன் உரையாடும் போது ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும்.

அவர்களும் மாறவில்லை. அவர்கள் கற்ற கல்வியும் அவர்களை எந்த விதத்திலும் மாற்றவில்லை? பாவம் மாணவர்கள் என்று நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் இங்கே இருபதாண்டுக்குள் ஏராளமான மாறுதல்கள் நடந்துள்ளது. கல்வியின் போக்கு மாறியுள்ளது. கற்றுத்தர வேண்டியவர்களின் நேர்மை முதல் அரசாங்கத்தின் கொள்கை வரை அனைத்தும் மாறியுள்ளது.

கல்வியைக் காசாக்கும் கள்ளப்பணம் நிறைந்தவர்கள் நடத்தும் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இருபது ஆண்டுகளுக்கு நம்பமுடியாத அளவுக்குப் பல்லாயிரம் கோடி தொழில் நிறுவனம் போல மாறியுள்ளது. மனப்பாடம் செய்வதே மாணவனின் தகுதி என்பதாக மாறியுள்ளது. .

எனக்கு இன்றைய கல்விச் சூழல் கணக்கற்ற கேள்விகளைத் தினந்தோறும் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றது. சமச்சீர் கல்வி தேவையற்றது என்கிற நிலைக்குக் கல்விக்கூடங்கள் வந்ததை விட (நடுத்தரவர்க்க) பெற்றோர்கள் அதை ஆதரிக்கவும் விரும்பவில்லை.

இது போன்று ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துக் கொண்டே பல சமயம் ஒதுங்கி நின்று குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி.

தினந்தோறும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நகரும் குழந்தைகளின் பைகளைத் தூக்கி எறிந்து விடாலாமோ என்று தோன்றுகின்றது.

தாய் மொழி குறித்த அக்கறையில்லை என்பதை விட எந்த மொழி குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாமல் காசாக்க எது சிறந்ததோ அதுவே வேண்டும் என்கிற நிலைக்குக் கல்வி மாறியுள்ளது.

ஐந்து பாடங்களாக இருந்த கல்வி பத்து பாடங்களாக மாறியுள்ளது. எதிர்கால வேலை வாய்ப்புக்கு ஆங்கிலமே அருமருந்து என்று நம்பப்பட்டு அதுவே வரம் தரும் மொழியாக மாறிவிட்டது. அந்நிய மொழி ஒரு பக்கம். அளவு கடந்த பாடத்திட்டங்கள் மறு பக்கம்.

நான் படிக்கும் போது குடும்பத்தினர் உருவாக்கிய கட்டளைகள் தான் என்னைப் படிக்க வைத்தது. ஆனால் நாங்கள் வீட்டில் உருவாக்கி வைத்துள்ள சூழ்நிலைகள் தான் கட்டாயப்படுத்த தேவையில்லாது எங்கள் பிள்ளைகளைத் தினந்தோறும் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் என்ன மாதிரியான பாடங்களைப் படிக்கின்றார்கள்? எதைக்குறித்து இவர்களுக்கு ஆசிரியர்கள் புரியவைக்கின்றார்கள்? என்பதை உணர்ந்து கொள்ள அவர்களின் பல புத்தகங்களை எடுத்து சில மணி நேரங்கள் படிப்பதுண்டு.

பல சமயம் எனக்குத் தலை சுற்றிப் போகின்றது.

இன்றைய ஐந்தாம் வகுப்புப் பாடத்திட்டம் என்பது ஏறக்குறைய கல்லூரி பாடத் திட்டத்திற்குச் சமமாகவே உள்ளது. வீட்டில் கேள்வி பதிலை படிக்க வைத்து ஒப்பிக்க என்றொரு போராட்டம் தொடங்கும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பார்ப்பது போலவே இருக்கும். முட்டல் மோதல் அதிகமாகி இடைவிடாத விவாதங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் படிப்படியான பழக்கத்தின் வாயிலாக இதுவொரு இயல்பான கடமையாக இன்று மாறியுள்ளது.

“எனக்குச் சொந்தமாக எழுத முடிகின்றது. ஆனால் மதிப்பெண்கள் போட மாட்றாங்கப்பா…………”

“மிஸ்க்கு உச்சரிக்கவே தெரியலப்பா. வருஷத்துக்கு ஒரு மிஸ்ஸா வந்துகிட்டே இருங்கப்பா……………”

“சுத்த போருப்பா….. உள்ளே பேசவே விடமாட்றாங்கப்பா……….”

“ஸ்மார்ட் போர்டு வச்சுருக்காங்க. ஆனால் அதுவொரு பந்தாவுக்காக வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் அதில் பாடம் நடத்துறாங்கப்பா….”

“ஒரு பீரியட்க்குள்ள நடத்தி விட்டு அதை அழிச்சிட்டு போயிடுறாங்க…. என்னால தொடர்ந்து முழுமையா எழுத முடியல……”

இதே போல தினந்தோறும் ஏதோவொரு குற்றச்சாட்டு வந்து விழுந்து கொண்டேயிருக்கும். .

கடந்த இரண்டு வருடமாக என்னுடைய முக்கியப் பணியாகப் பள்ளியில் ஆசிரியர் யார்? அவரைப்பற்றிய பின்புலம் என்ன? என்று கேட்டு படிக்க உட்காரும் போது அவர்களைப் பேச வைப்பதுண்டு.

காரணம் எந்திரமாகப் படிக்க உட்காருபவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் பொருட்டுப் பல கேள்விகள் கேட்டு அவர்கள் பார்த்த உணர்ந்த அத்தனை பள்ளிக்கூடச் சம்பவங்களும் ஒவ்வொன்றாக வார்த்தைகளாக அவர்களிடமிருந்து வந்து விழுந்து கொண்டே இருக்கும். வாரத்தில் மூன்று நாட்களாகவது ஒரு விஷயம் மட்டும் தவறாமல் வந்து விழும்.

“மிஸ்க்குத் தெளிவா புரிய வைக்கத் தெரியலைப்பா” என்பார்கள். கொடுக்கும் நாலாயிரம் சம்பளத்திற்கு அப்படிப்பட்ட ஆட்கள் தான் கிடைப்பார்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு.

பல சமயம் இது போன்ற தகுதியற்ற ஆசிரியர்களை வைத்திருக்கும் பள்ளிக்கூடத்தினால் அடிப்படை அறிவுகளை மாணவர்களுக்கு எப்படிப் புகட்ட முடியும்? என்று நினைத்துக் கொண்டே பாடங்களுக்கு வெளியே உள்ள பல விசயங்களை அவர்களுடன் கலந்துரையாடுவதுண்டு.

அவர்கள் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், ஆசைகள், விருப்பங்கள் என்று ஒவ்வொன்றாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். இப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு குரல் வரும்.

“இவளுக அடிக்கிற அரட்டைகளை மிஸ் கேட்டுக்கிட்டு இருந்தா அரைப்பரிட்சைக்குள் அவங்களால எப்படிப் பாடத்திட்டத்தை முடிக்க முடியும்? ” என்பார்.

ஆனாலும் விடாமல் அவர்களைப் பேசவைப்பதுண்டு.

சமூகம் குறித்த அவர்களின் பார்வைகளைக் கவனமாக உள்வாங்கிக் கொள்வதுண்டு. என் கருத்துக்களை எந்த இடத்திலும் சொல்வதில்லை. இந்தியா குறித்து முழுமையாக இவர்களுக்கு என்ன தெரியப் போகின்றது என்று நினைத்துக் கொண்டு வீட்டில் உள்ள உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழ்நாட்டின் வரைபடத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்த தொடங்கிய போது அப்பா இதெல்லாம் போன வருஷமே படித்தாகி விட்டது. இந்த வருடம் நாங்கள் படிப்பது இதைப் பற்றி என்று புத்தகத்தைக் காட்டிய போது குழப்பாகவே இருந்தது.

மேற்கொண்டு அது குறித்துப் பேச அவர்களின் எல்லை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் நிறுத்தப்பட்டு இருப்பதை உணர்ந்து அமைதியாகி விடுவதுண்டு.

செயல்வழி திட்டத்தை ஆதரிக்காத நமது கல்விச்சூழல் எதிர்காலத்திற்கு எந்த மாதிரியான மனிதர்களை உருவாக்கப் போகின்றது என்பதே என் கேள்வியாக இருக்கின்றது. படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் போது உருவாகும் பிரச்சனைகளைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

வெளிநாட்டில் வேலை. வெள்ளைக்காரன் போல உத்தியோகம் என்ற கேரட் வாயில் கட்டப்பட்டு பந்தயத்தில் ஓட வைக்கப்படுகின்றது.

தற்போதைய கல்வியின் பாடத்திட்டங்கள் ஆச்சரியமளித்தாலும் கற்றுக் கொடுப்பவர்களின் தரத்தினை நினைத்து தான் கவலைப்பட வேண்டியதாக உள்ளது.

காரணம் இங்கே பண வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்றொரு நிலையை அடைந்து பல வருடங்கள் ஆகி விட்டது.

ஆனால் இந்தக் கல்வி நம் குழந்தைகளுக்குத் தகுதியான வாழ்க்கையைத் தருமா? என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.