11

விட்டு விடுதலையாகி………

வாசிக்கும் பொழுதே நம் நரம்பில் ஒரு புத்துணர்ச்சி தோன்றுமே?

வானத்தில் பறக்கும் அந்தச் சின்னச்சிறு பறவையினங்களைப் பார்க்கும் போது நமக்குள் உற்சாகம் சிறகடித்துப் பறக்கும். நம் உள்ளுற உணர்வில் கலந்திருக்கும் கவலைகள் கூடக் காணாமல் போய்விடும். அந்த நிமிடத்தில் நம் மனதில் தோன்றும் படபடப்பில் நாமும் ஒரு பறவையாகவே மாறியிருப்போம். பல சமயம் கற்பனையில் பறந்திருப்போம்.

வெட்டவெளி ஆகாயத்தை அந்தச் சிறிய குருவிகள் அளந்து பார்க்கும் ஆச்சரியத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றும். கூடவே அருகே பறந்து செல்லும் பட்டாம்பூச்சியின் லாவகத்தில் நம்மை நாம் மறந்திருப்போம். தேடல்கள் தான் இந்த உலகை இயங்க வைக்கின்றது. நம்முடைய தேவைகள் தான் தேடல்களை அதிகப்படுத்துகின்றது. நிர்ப்பந்தங்கள் இல்லாத நிகழ்காலம் சுகமாக இருந்தாலும் அதுவே தொடரும் போது அலுப்பை தந்து விடுகின்றது. எனக்குப் போர் அடிக்குதுப்பா……. என்று சொல்பவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள்.

எந்தக் கலாரசனைகளும் அவர்கள் வாழ்க்கையில் இருக்காது. ரசனைகள் இல்லாத வாழ்க்கையை ரசிக்க முடியாது. ருசிப்பதும் ரசிப்பென்பதும் மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியம்.

அவசர வாழ்க்கையில் வழியில் கேட்கும் ஒரு பாடல் கூடச் சிலருக்கு திருப்தியை உருவாக்கக்கூடியது. வாழ்க்கையில் ரசனை காணாமல் போனால் மிஞ்சுவது ரகளை மட்டுமே.

ரசனைகளை விரும்பாதவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கனவுகளுக்குள் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆமை கண்ட வெந்நீர் சுகம் போல அதுவும் கூட ஒரு சமயத்தில் உண்மைகளை உணர்த்திவிடும். நான் வாழ்வில் பட்ட கஷ்டமெல்லாம் நீ படக்கூடாதுடா……..என்ற சோகத்தினைத் தான் இங்கே பலரும் தங்களது குழந்தைகளுக்குச் சோற்றுடன் சேர்த்து பறிமாறுகின்றார்கள்.

குழந்தைகளுக்கு வாழ்வில் இயல்பாகத் தோன்றும் கஷ்டங்கள் என்பது மலை போன்றது என்பதாக உருவகப்படுத்தப்படுகின்றது. அதைக் கண்டு அஞ்சி எதிர்கொள்ள முடியாத அளவுக்கு வாழ பழக்கிவிடுகின்றார்கள். எதார்த்தம் என்பது இங்கே பலருக்கும் எட்டிகாயாகக் கசக்கின்றது. எப்படி இருந்தாலும் நாம் எதிர்கொள்ள எப்படி இருக்க வேண்டும்? என்று யோசிக்க முடிவதில்லை.

இது போன்ற சமயங்களில் தான் ஆன்மீகம் உள்ளே வரத் தொடங்குகின்றது. கற்பனைகள் உருவகப்படுத்தப்பட்டு, அதுவே பயமாக மாற்றபட்டு ஆன்மீகத்தைத் தெரிந்து கொள்ளாமல் அன்பையும் பகிர்ந்து கொள்ளாமல் இடையில் நின்று போன வண்டி போலத் தான் பலரின் பயணமும் தடைபட்டுப் போகின்றது.

நாம் விரும்பும் கனவுகளைப் போல நம் அருகே உயிருள்ள கனவாக வளர்பவர்கள் நம் குழந்தைகளே. .

நம் விருப்பம், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்ற ஏதோவொரு வடிவத்தில் குழந்தைகளே நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதை உணர்ந்து இருக்கின்றீர்களா? நாம் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் உணர்வதே இல்லை.

குடும்ப வாழ்க்கை பயணத்திற்கு இரண்டு தண்டவாளமும் தேவை. இந்தத் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் கட்டைகள் போலத்தான் குழந்தைகளும் இருக்கிறார்கள். திருமணம் முடிந்து பத்து வருடத்திற்குள் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் நடத்தும் வாழ்க்கையென்பது ஏறக்குறைய நரக வாழ்க்கை.

புரிந்து கொள்ளாமல், விட்டுக் கொடுக்காமல் அவரவர் கொண்ட கொள்கைகள் அத்தனையும் குழந்தைகளைத் தாக்கி அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றது. இந்தியாவில் பலரும் இப்படித்தான் வாழ்கிறார்கள். இதுவே தன்னளவில் சரியென்று உரத்துச் சொல்கிறார்கள்.

சிலர் மட்டுமே குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்திய கலாச்சாரத்தில் குழந்தைகளின் வாழ்க்கையென்பது முக்கியமானதாக இங்கே கருதப்படுகின்றது. அதிகப்படியான ஆசைகள் தான் அக்கறை என்ற பெயரில் இங்கே வெளிப்படுகின்றது. ஆனால் குழந்தைகளுக்கும் ஒரு மனமுண்டு என்பதை எளிதில் மறந்து விடுகின்றோம். அவர்களுக்கான சுதந்திரம் என்பதை மாற்றிக் கட்டுப்பாடு என்ற நான்கு எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்துகின்றோம்.

என் கட்டுப்பாட்டுக்குள் நீ என்பதாகக் கொண்டு வந்து விடுகின்றோம். நல்ல வளர்ப்பு என்ற வார்த்தையை மனதில் கொண்டு வன்முறையைத் திணிக்கின்றோம். நாம் குழந்தையாய் இருந்த போது கிடைக்காத விசயங்களை மனதிற்கு வைத்துக் கொண்டு இதையே திரும்பத் திரும்பச் செய்கின்றோம்.

நாமும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிப்பதில்லை. குழந்தைகளையும் விடுவதில்லை. இங்குப் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுதந்திரம் என்பதைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையே குழந்தைகளின் சுகத்திற்காகத்தான் என்கிறார்கள். நான் அவனுக்கு என்ன குறைவைத்தேன் என்று மூக்கை சிந்துகிறார்கள். நான் வாழ்வதே அவனுக்காகத்தானே என்கிறார்கள்.

ஆனால் எந்தக் குழந்தைகளும் அப்படிக் கேட்பதிலலை என்பது தான் நாம் குறித்துக் கொள்ள வேண்டிய விசயம். ஆனால் காலம் காலமாக இங்கே இப்படித்தான் பண்டமாற்று போலச் சுதந்திரமும், சுகமும் பறிமாறப்படுகின்றது. சுழற்சி போல நீ கொடு நான் தருகின்றேன் என்பது போல இங்கே ஒவ்வொன்றும் விலை பேசப்படுகின்றது. பேரமென்பது வெளியே தெரியாது. அதற்குப் பாசம் என்ற பூச்சுப் பூசப்படுகின்றது. உண்மையான சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை ஒவ்வொரு பள்ளிக்கூட வாசலில் நின்று கவனிக்கும் வாய்ப்பிருந்தால் உங்களுக்கு முழுமையாகப் புரியும்.

விட்டு விடுதலையாகி என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சுதந்திரத்தைப் பற்றி நாம் பேச அதனை முழுமையாக அனுபவித்து இருந்தால் தானே புரியும்.? வகுப்புகள் முடிந்து விட்டது என்று மணியடிக்கும் ஓசைதான் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கோவில் மணியோசை போல மகிழ்ச்சியைத் தருகின்றது. அழுத்தி வைக்கப்பட்ட அத்தனை பேர்களும் அதிலிருந்து விடுபட்டு துள்ளல் நடையுமாகப் பெற்றோருடன் செல்லும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் நம்முடைய கல்வி குறித்து அதிகம் யோசிக்க முடிகின்றது.

மன உளைச்சல் அதிகமாகும் போது குழந்தைகள் விளையாடுவதைத் தூர இருந்து கவனித்துப் பாருங்கள்? அர்த்தமற்ற அவர்களின் உரையாடலில் ஆயிரம் வாழ்க்கை சூத்திரங்கள் நமக்குக் கிடைக்கும். கவலையைக் கண்டு, கவலையோடு வாழ்ந்து கழிக்கும் ஒவ்வொரு தினத்தின் அவலத்தினையும் மறக்க உதவும். குழந்தைகளும் பல சமயம் ஆசிரியர்களே. நாம் தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆவலாய் பறக்கின்றோம். முடிந்தவரைக்கும் திணிக்கின்றோம். அளவு தெரியாமல் அல்லாடவும் செய்கின்றோம்.

இங்கே இன்னமும் மாறுபட்ட சிந்தனைகள் கொண்டு வாழும் கணவன் மனைவி அநேகம் பேர்கள். “இந்தக் குழந்தைகளுக்காகத்தான் இவரோட பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்” என்பது போன்ற வார்த்தைகளை நீங்கள் சர்வசாதாரணமாக கேட்டுருக்கலாம்.

ஆனால் ஒவ்வொரு குடும்பப் போர்க்களத்தை முடித்து வைப்பதும் இந்தக் குழந்தைகளே. குழந்தைகள் உருவாக்கும் போர்க்களம் தான் வித்தியாசமானது. கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் இவர்களின் போர்க்களத்தில் கடைசி வரைக்கும் சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது. வீட்டுக்குள் குழந்தைகளால் உருவாக்கும் போர்க்களத்தைத் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். நீங்கள் ரசித்துருக்கீறீர்களா? ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீட்டில் இந்த வாய்ப்பு ரொம்பவே குறைவு. போட்டி போட ஆளிருக்கும் போது உருவாகும் களம் தான் முக்கியம்.

இங்குத் தினந்தோறும் இவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு களத்திலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் தான் கடைசியில் சிரிப்பு நடிகராக மாறிப் போகின்றேன். அழுகை காட்சிகள் பல உண்டென்றாலும் அதுவும் கடைசியில் வயிறு வலிக்கும் சிரிப்புக் காட்சியாகவே மாறிவிடுகின்றது.. அலுவலகமோ அல்லது வெளியே எங்கு இருந்தாலும் கூட மதிய சாப்பாட்டைப் பல சமயம் மூன்று மணிக்கு மாற்றி வைத்துக் கொள்வதுண்டு.

காரணம் அந்தச் சமயத்தில் தான் பள்ளி விட்டு மூவரும் வரும் நேரம். கிடைக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்காக வீட்டில் ஆஜராகி விடுவேன். இவர்கள் வீட்டுக்கு வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பே வீட்டில் தயாராக இருப்பேன்.

ட வடிவில் உள்ள சந்தின் முனையில் இருக்கும் வீடென்பதால் இரண்டு பக்கத்திலும் ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். வீட்டுக்கருகே பள்ளி இருப்பதால் மூன்று நிமிடங்களில் வீட்டுக்கு வந்து விட முடியும். ஆனால் சில சமயம் இவர்கள் வந்து சேர பத்து நிமிடங்கள் கூட ஆகும். காரணம் தெருவில் மூவருக்குள்ளும் ஏதோவொரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கின்றது என்று அர்த்தம். ஒருவர் மற்றொருவரை சீண்ட பாதியில் அந்தப் பயணம் தடைப்பட்டுப் போயிருக்கும்.

ஒரு நாள் கூட மூவரும் அமைதியாக வீட்டுக்கு வந்ததே இல்லை. வரும் வழியில் அல்லது வந்த பிறகு என்று இந்தக் களம் விரிவடையும். இவர்களின் குணாதிசியம் தெரிந்தே வாசலில் நின்று கொண்டேயிருப்பேன். எப்போது வந்து சேருவார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் நாம் தயாராக இருக்க வேண்டும். என் தலையை வாசலில் பார்த்து விட்டால் ஓ……..வென்று கத்திக் கொண்டு ஓடி வருவார்கள்.

முதுகில் சுமக்கும் பாரங்கள் ஒரு பக்கம் இழுக்க, கையில் வைத்திருக்கும் கூடை மறுபக்கம் தள்ள ப்ரேக் பிடிக்காத வண்டி போலக் குலுங்கிக் கொண்டு வருவார்கள். பின்னால் வரும் வீட்டுக்காரம்மா அலுத்துப் போய் மூச்சு வாங்க வந்து கொண்டிருப்பார். ஓடி வரும் போதே எனக்குப் பதைபதைக்கும். தடுமாறினால்? என்று யோசிக்கும் போதே நான் ஓடிப்போய் வாங்க முயற்சிப்பேன். குதியாட்டத்தில் நிற்க முடியாமல் தடுமாறி மூச்சிரைத்து என் கையை விடுவித்து மீண்டும் வீட்டை நோக்கி ஓட நான் தடுமாறி நிற்க சிட்டுக்குருவி போலப் பறப்பார்கள்.

வீட்டுக்குள் இருக்கும் இரும்பு கதவு முன்னால் வந்தவர் தள்ளிய தள்ளலில் சுவற்றில் முட்டி சப்தத்தை உருவாக்கும். முதுகில் சுமந்து வந்த பை வாசலின் உள்ளே பறக்கும். மூச்சிரைப்போடு மற்றொருவர் பையை அடுத்தவர் பிடித்துத் தள்ள அது மற்றொருபுறம் ஜிப் திறந்து போய்ப் புத்தகங்கள் சிதறும். அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கும்.

நான் தான் முதலில்….இல்லையில்லை நான் தான் முதலில் .என்று வேகம் காட்ட காட்டாறு வெள்ளம் அங்கே உருவாகும். காலில் மாட்டியிருக்கும் காலணிகள் கதறும். அதில் உள்ள கொக்கிகள் இவர்கள் படும் அவசரத்திற்கு ஒத்துழைக்காது. சில சமயம் பிய்ந்து போய்ச் சிரிக்கும்.

நாம் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். எதுவும் பேசிவிட்டால் வெள்ளம் நம்மை நோக்கி தாக்கும் ஆபத்துண்டு. இருவர் தான் இப்போது உள்ளே நுழைந்திருக்கிறார்கள். மீதி ஒருவர் தெருவில் இருக்கின்ற மரத்தில் உள்ள இலைகளை, கண்ணில் தெரிகின்ற பூக்களைச் சேகரித்துக் கொண்டே வருவார்.

சுதந்திரத்தை நாங்கள் சொன்னதும் இல்லை. அவர்கள் புரிந்து கொண்டதும் இல்லை. தீர்மானிக்கக் கற்றுக் கொடுத்த பிறகு திரும்பவும் சொன்னால் அறிவுரை. நாமே கடைபிடித்துக் காட்டினால் அதற்குப் பெயர் பாடம். அவர்கள் எங்களுக்குச் சொல்லும் பாடங்களையும் அவர்கள் சமூகத்தில் கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களைப் பற்றியும் தான் நாம் இனி பேசப் போகின்றோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book