10 10. மனம் என்பது வாழ்க்கை

ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையில் ஏதோவொரு தருணத்தில் பரதேசி கோலம் பூண்டுருப்போம். உடைகளால் மட்டுமல்ல. உள்ளத்தால் வாழ்ந்திருந்தாலும் பரதேசி தான்.

படித்த புத்தகம், பார்த்த படம், பாதித்த காட்சிகள் என்று நாம் வாழும் வாழ்க்கையைச் சரிதானா? என்று சில அதிர்வுகளை உருவாக்கியிருக்கும். பைத்தியம் பிடிக்காத குறையில் பரிதவித்துருப்போம். இதற்கென்ன மருந்து? என்று அலைந்திருப்போம். அப்போது சிலருக்கு புத்தி வேகமாகச் செயல்படுகின்றது. பகுத்தறிய தொடங்கும். புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பார்கள். மேலும் யோசிப்பை பலப்படுத்தும். ஆனால் பலருக்கும் உள்ளுற இருக்கும் சக்தி இனி இறையே கதியென்று ஆன்மீகத்தை நோக்கி நகர்த்தி விடுகின்றது. நானும் கடந்து வந்துள்ளேன்.

ஆன்மீகம் என்பதை அழகாய் நெருங்கிப் பார்த்த தருணமது. இறைவன், உருவங்கள், அது வலியுறுத்தும் சக்திகள், உணர்த்தும் பாடங்கள் என்பதைத் தாண்டியும் அறிந்து கொள்ளும் ஆவலில் அலைந்துள்ளேன்..

உணர்ச்சிக்குவியலாய் வாழ்ந்த வாழ்க்கையில் உணர்வை இழுத்துப் பிடித்து ஒரு புள்ளியில் சேர்க்க பாடுபட்ட நேரமது. இன்று திரையில் நடிப்பவர்களும், ஆன்மீக உரைகள் மூலம் கலக்கிக் கொண்டிருப்பவர்களும் திருவண்ணாமலை பக்கம் போகாத காலத்தில் நான் அங்கே தொடர்ச்சியாகச் சென்று கொண்டிருந்தேன். வாழ்க்கை குறித்த தேடலுடன் ஏராளமான ஆசைகளையும் சுமந்திருந்த எனக்கு அதிலிருந்து விடுபடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

நம்மிடம் உள்ள ஒவ்வொரு ஆசைகளும் தான் நம் வாழ்க்கையை நகர்த்துகின்றது. அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் இயல்பான பழக்கமாகவும் மாறிவிடுகின்றது. கிடைத்து விட்டால் புத்தியைக் குறித்துப் பெருமிதம் கொள்கின்றோம். கிடைக்காத போது சக்திகளைத் தூற்றுகின்றோம் அல்லது துணைக்கு அழைக்க முயற்சிக்கின்றோம்.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்தப் பத்திரிக்கையில் வந்தது என்று ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை,ஆன்மிகத் தேடலை உள்ளிருந்து தேடுவதில்லை. வெளியிலிருந்து தான் தேடுகின்றார்கள். இன்றைய ஆன்மீகம் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் பேச்சு மூலம் மட்டுமே அடுத்தவருக்குக் கடத்தப்படுகின்றது. நம்ப வைக்கப்படுகின்றது.

அந்தக் கோவிலுக்குள் நுழைந்தேன். மெய் மறந்து நின்றேன் என்ற வார்த்தைகள் தான் இங்கே பலருக்கும் வேதவாக்காகத் தெரிகின்றது. இறை சக்தியை மட்டுமல்ல. இன்று எதையுமே உணர்ந்து கொள்பவர்கள் குறைவு. உணர்ந்ததாக நடிப்பவர்கள் தான் அதிகம்.

இதுவே படிப்படியாகக் கடத்தப்பட்டு கோவிந்தா போடும் கூட்டம் தான் நாளுக்கு நாள் அதிகமாகின்றது.

தன் உள்ளத்தையும் புரிந்து கொள்ளாமல் அது தரும் உணர்வுகளையும் அறிந்து கொள்ள மனமில்லாமல் வாழும் வாழ்க்கையைத் தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஆசாமியாகத்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும். ஆனால் வயதும் வாழ்க்கையும் கொடுத்த அதிர்வுகளை அடக்க வேண்டும் என்று முயற்சித்தேன்.

எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதன் அறியும் ஆவல் இருந்தது.

எந்தக் குருவையும் தேடியதில்லை.

எனக்குத் தேவையானதை அறிந்து கொண்டதோடு புரியவும் தொடங்கியது. ஆனால் இன்று அதனையும் கடந்து வந்துள்ளேன். குழந்தைகள் வளரத் தொடங்கும் போது நம்முடைய கலாச்சாரத்தில் இந்த ஆன்மீகம் இரண்டறக் கலந்து விடுகின்றது.

குழந்தை வளர்ப்பின் அங்கமாகவே கருதப்படுகின்றது. கிராமத்து வாழ்க்கையில் சாமி என்பது கண்டிப்பு வாத்தியார் போலத்தான் உருவகப்படுத்தப்படுகிறது

“தப்பு செய்யாதே. கண்ணைக்குத்திடும்” என்று சொல்லியே தப்புக்களை மட்டும் அதிகம் செய்யத் தூண்டப்படுகின்றது. ஒன்று மறுக்கப்படும் போது அல்லது மறைக்கப்படும் போது அங்கே தெளிவு கிடைப்பதில்லை. ஆசைகளும் பிடிவாதமும் தான் அதிகமாகின்றது. தெரிந்தவர்களும் முறைப்படி சொல்லிக் கொடுப்பதும் இல்லை.

குழந்தைகளின் வேகம் என்பது இரத்தம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. உணர்வு சம்மந்தப்பட்டது. வளர்ந்த பிறகு உங்களுக்குள் எத்தனையோ கொள்கைகளை உருவாக்கி வைத்திருப்பீர்கள். வாழ்வில் சந்தித்த உங்களின் ஒவ்வொரு அனுபவமும் ஏராளமான பாடங்களைக் கற்றுத் தந்துருக்கும். அது சரியா தவறா? என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தாலும் முடிவு தெரியாமலேயே சிலவற்றை ஏற்றுக் கொண்டும் மறுத்தும் இருப்பீர்கள். இறுதியாக ஏதோவொரு உருவகம் உங்களுக்குள் உருவாகியே இருக்கும்.

இதுபோன்ற தருணத்தில் புதிய விசயங்கள் உங்கள் மனம் ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும். திறந்த பானையில் மட்டுமே தண்ணீரை ஊற்ற முடியும்..

ஆனால் குழந்தைகளின் மூளையில் உள்ள ந்யூரான்களில் எந்தச் செய்திகளையும் பதித்து விடலாம். ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் போது சொல்கின்ற விதம் தான் முக்கியம். பிறப்பில் புத்திசாலி என்ற குழந்தைகள் இங்கே யாருமில்லை. வளர்ப்பும் அவர்களை அணுகிய விதமும் தான் முக்கியமாக இருக்கின்றது..

ஊனமுற்ற குழந்தைகளைக் கூட நொண்டிக்குசும்பு என்பார்கள். நோஞ்சான் பிள்ளைகள் கூடக் குடும்பத்தில் சவாலாக இருப்பதைப் பார்த்திருப்போம். குழந்தைகளின் மூளை என்பது எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் போது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடிகின்றது.

எல்லாவற்றையும் குழந்தைகள் விரும்புவதால் இங்கே பலருக்கும் பயம் வந்து விடுகின்றது. இந்தப் பயம் தான் பலவற்றை மறைக்கத் தூண்டுகின்றது. “இந்த வயதில் உனக்கு இது தேவையில்லடா”…. என்று சொல்ல வைக்கின்றது. அய்யோ இதைத் தெரிந்து கொண்டால் கெட்டுப் போய்விடுவானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆனால் கெட்டுப் போவதன் அர்த்தத்தையும் எவரும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பது தான் இங்கே ஆச்சரியமான விசயம். குடிகாரர்கள் மேதைகளாக இருந்திருக்கிறார்கள். கொடூரமானவர்கள் தலைவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கெட்டுப் போவதென்பது உடம்பா? மனசா? பத்து வயதிற்குள் இருக்கும் எந்தக் குழந்தையுமே கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்வதில்லை.

பேசும் வார்த்தைகள் கூட வீட்டுக்குள் கேட்கும் வார்த்தைகள் மூலமே வருகின்றது. சிறுவயதில் குழந்தைகளின் மனசை பாதிப்படையச் செய்ய முடியுமே தவிர அதிலும் கூட முழுமையாக மாற்றம் செய்ய முடியாது.

குடிகார தகப்பனின் செயலை தினந்தோறும் பார்க்கும் அத்தனை குழந்தைகளும் குடிகாரர்களாகவா மாறுகின்றார்கள். கணவனை மீறி காமத்துக்கு அலையும் பெண்களைப் பார்த்து அவரின் பெண் குழந்தைகள் அத்தனை பேர்களும் காமாந்தாகியாகவா வாழ்கிறார்கள்?.

சூழ்நிலை என்பது ஒரு முக்கியக் காரணி.

ஆனால் அதுவே எல்லா நிலையிலும் பொருந்துவதில்லை.

என் நண்பன் பத்தாம் வகுப்பு வரைக்கும் ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்து பார்த்ததில்லை. ஆனால் கல்லூரி வரைக்கும் அவனை அடிக்க ஆளே இல்லை என்பதாக மாறிப்போனான். அதே அப்பா. அதே அம்மா. குடும்பத்தில் எப்போதும் இருந்த வறுமை. என்ன காரணம்? தொடக்கத்தில் பாடங்களில் கவனம் செலுத்தும் பல குழந்தைகள் காலப்போக்கில் மாறி விடுகின்றார்கள். வேலை பார்க்கும் இடங்களில் கேட்டுருப்பீங்களே?

“அவனுக்குச் சொல்லி புரியவைப்பா?” என்று. ஆனால் இங்கே எவரும் புரிய வைக்க முயற்சிப்பதே இல்லை. காரணம் வளர்ந்த மனிதர்களும் மற்றவர்கள் தங்களுக்கு அனுசரனையாக இருப்பதை மட்டும் தான் விரும்புகிறார்கள்..

இந்த அனுசரனை மனிதர்களை மகத்தான சாதனையாளர்களாக மாற்ற உதவுகின்றது. நாம் தான் புரிந்து கொள்வதேயில்லை. குழந்தைகள் குறித்து, அவர்களின் வளர்ப்புக் குறித்துத் தேவையில்லாத பயங்களைப் பட்டியலிட்டு நாமும் வாழாமல் அவர்களையும் வாழவிடாமல் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

சமூகத்தில் நாம் படித்து முடித்து நுழையும் தருணத்தில் எத்தனையோ கனவுகள் உள்ளூர இருக்கும். பலருக்கும் பல விதமான விருப்பங்களை அடைகாத்தே வந்திருப்போம். பலருக்கு. சுற்றுலா, உணவு, வீடு என்று இயல்பான நடைமுறை வாழ்க்கை விருப்பங்கள் இருக்கும்.

ஆனால் பலருக்கும் இந்தக் கனவுகள் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் கிடைப்பதில்லை.

முதல் பத்து வருடங்கள் திருப்பூர் எனக்கு ஏராளமான அனுபவங்களைத் தந்திருந்தது. தேடியலைந்த பணம், ஓய்வே இல்லாத உழைப்பு, ஒவ்வொரு சமயத்திலும் கிடைத்த ஏமாற்றங்கள், தேடிக் கொண்டிருந்த அங்கீகாரம் என்ற இந்த நான்கு மூலைக்குள் என் வாழ்க்கை என்னைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது.

என் திருமணம் குறித்து யோசிக்க நேரம் இருந்ததில்லை. தொழில் மற்றும் அது சார்ந்த எண்ணங்கள், வெற்றி பெற வேண்டிய இலக்கு மட்டுமே உள்ளுற ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளுற ஒரு கனவை மட்டும் தனிப்பட்ட முறையில் அடைகாத்து வைத்திருந்தேன். நமக்குக் குழந்தை பிறக்கும் போது இந்தத் திருவண்ணாமலையில் தான் பிறக்க வேண்டும் என்பதை மனதில் வைத்திருந்தேன்.

நடைமுறையில் அதனைச் செயலாக்கிய போது எதிர்ப்புகள் எட்டு பக்கமும் என்னைத் தாக்கியது. அஞ்சாமல் நினைத்தபடியே ஜெயித்தேன்.

குழந்தைகள் பேசத் தொடங்கும் போது தான் கேள்விகள் வருகின்றது. அதன் பிறகு அவர்களின் மூளையில் விருப்பமும் ஆசைகளும் பதியத் தொடங்கின்றது. ஆனால் முதல் மூன்று வருடங்களும் அவர்களின் உறுப்புக்கள் சம்மந்தப்பட்ட ஆரோக்கியத்தில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அஸ்திவாரம் என்பது சாதாரணமாக இருந்தால் அந்தக் குழந்தைகளின் ஆயுட்காலம் வரைக்கும் அவஸ்த்தை தான். கிராமத்து வாழ்க்கையில் பிரசவம் என்பது பத்து நிமிடங்களில் முடிந்த நாட்டு மருத்துவச்சி என்ற ஏதோவொரு கிழவியின் கைங்கர்யமாக இருக்கும். ஆனால் இன்று அது பல லட்சங்கள் செலவு பிடிக்கும் சமாச்சாரம். அவஸ்த்தைகள் அதிகமாகி பயத்தை உருவாக்கி, பயத்தோடு வாழ வைத்து உடல் உழைப்பே இல்லாமல் வாழும் பெண்கள் ஏறக்குறைய மறுபிறவி தான் எடுக்கின்றார்கள்.

இன்று பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் அரை மனுஷியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மருத்துவர்களின் பண ஆசையா? பெண்களின் ஆரோக்கியம் தந்த பரிசா? என்பதை விட மாறி வரும் உலகில் தேவைப்படாத மாற்றத்தையும் நாம் விரும்புவதால் இப்படித்தான் நடக்கும்.

இன்று உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறையவே மருந்துகள் தேவைப்படுகின்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

முதல் இருபது வருடங்கள் எனக்கு எந்த மருந்துகளும் தேவைப்பட்டதில்லை. ஆனால் அடுத்தப் பத்து வருடங்களில் மருந்தே தான் வாழ்க்கையாக இருந்தது. அந்த அனுபவங்கள் கற்றுத் தந்த பார்வைகள் தான் என் குழந்தைகள் குறித்த கனவின் எல்லைகளை விரிவாக்கியது.

என் திருமணம், எங்கள் குழந்தைகள், குடும்ப ஆரோக்கியம் என்று பரந்து விரிந்தது. ஒவ்வொன்றாக அதனை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்..

இன்று குழந்தைகள் தும்மினால் பயம். இருமினால் அதைவிடப் பயம். மொத்தத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் செத்து செத்துப் பிழைப்பது தான் நடந்து கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நான் கனவு கண்டதில்லை.

ஆனால் ஒரு குழந்தை எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். இன்று வரையிலும் அப்படித்தான் இருக்கின்றேன்.

காரணம் கிராமத்துக் கூட்டுக்குடும்பம், பெரிய குடும்பங்களில் வாழ்க்கை வாழ்ந்த ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் மனதில் வைத்திருந்த ஓராயிரம் கனவுகளையும் இழந்து விட்டுத்தான் சமூகத்திறகுள் வருகிறார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். சமூகத்திற்குள் வந்தேன்.

பாதிப்புகளை மனதிற்குள் வைத்திருந்தால் அதற்குப் பெயர் மனநோய். அதையே நேர்மறை எண்ணமாக்கி அவரவர் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் பாடம். ஆனால் இங்கே அனுபவங்களைப் பாடமாக எவரும் எடுத்துக் கொள்ள விரும்புவதே இல்லை. ஒவ்வொரு சமயத்திலும் அதனை மறக்கவே விரும்புகின்றார்கள். காரணம் உள்ளூற பொங்கும் இயலாமையின் தவிப்பில் ஏக்கம் தான் இறுதியில் மிஞ்சுகின்றது.

கனவுகளை மட்டும் பொறித்துக் கொண்டு எந்தக் கோழியும் வாழ்வதில்லை. ஆனால் மனிதர்கள் கனவுகளை மட்டும் தான் விரும்புகிறார்கள்.

இதனால் தான் இதுபோன்ற குடும்பத்தில் இருந்த வந்த மாணவர்களின் செயல் திறன் சிறகடித்துப் பறக்காமல் நொண்டியடிக்கத் தொடங்குகின்றது. பள்ளிக்கூடங்களில் பொறுத்துப் பார்த்த ஆசிரியர்களும் இறுதியில் நீ என்ன கூமுட்டையா? என்று கேட்கின்றார்கள்.

மனிதர்களுக்கு இரண்டு விசயங்கள் மிக முக்கியமானது. அதுவும் குழந்தைப் பருவத்திலிருந்து தான் தொடங்குகின்றது.

ஒன்று உடல் நலம்.

மற்றொன்று மனநலம்.

இரண்டும் சரியான அளவில் இல்லாத போது தான் சமூகம் பல சங்கடங்களைச் சந்திக்க நேர்கின்றது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Comments are closed.